பொதுப்பெட்டி.
1915 ஆம் ஆண்டு ஜனவரியின் தொடக்கத்தில் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். இந்திய அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு ஒருவருடம் இந்தியாவைச் சுற்றி வரும்படியும், அப்பயணம் முடியும் வரை பொது விசயங்கள் குறித்து எந்த அபிப்பிராயமும் கூறக் கூடாது எனவும் கோபால கிருஷ்ண கோகலே அவரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். கோகலேதான் காந்தியின் அரசியல் குரு, அவரே காந்தியை இந்தியாவிற்கு வர வைத்தவர். தன் குருவின் சத்தியத்தின்படி காந்தியடிகள் இந்தியாவை புரிந்துகொள்ள இரயிலில் பயணிக்கத் தொடங்கினார் அதிலும் மூன்றாம் வகுப்பு பெட்டியில் அவர் பயணித்தார். இரயிலில் மூன்றாம் வகுப்பு பிரயாணிகளை அதிகாரிகள் ஆடு மாடுகளைப் போல நடத்துவதை அவர் கண்டார். பின்நாட்களில் அதைப்பற்றி தனது சுயசரிதையிலும் குறிப்பிட்டிருக்கிறார் (தனி அத்தியாயமே இருக்கிறது). இரயில் பயணம் என்பது அவரது அரசியல் வாழ்க்கைக்கு பலவற்றை கற்றுத் தந்தது. தற்போது இரயிலில் மூன்றாம் வகுப்பு என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக General Compartment (Unreserved Couch) எனப்படும் பொதுப்பொட்டி என்ற பிரிவு இருக்கிறது. காசு இருப்பவர்கள், கரையை விரும்பாதவர்கள், இடிபாடுகளுக்கு அஞ்சுபவர்கள் என பலர் சொகுசாக பயணிக்க, அதே இரயிலில் குறுகிப் படுத்தும், ஒடுங்கி அமர்ந்தும், ஒற்றைக்காலில் தவமிருந்தும், பொதுப்பெட்டியில் பயணம் செய்யும் பிரயாணிகளும் இருக்கிறார்கள். காந்தியைப்போல இந்தியாவை புறிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு இரயில் அதுவும் பொதுப்பெட்டியில் பயணம் செய்தாலே போதும். கிட்டத்தட்ட நூறு வருடங்களாக மாற்றங்கள் எதுவும் இல்லாது இந்தியா அப்படியேதான் இருப்பதை உணரலாம். இந்த டாகுமெண்டரி அத்தகைய புரிதலுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
கராக்பூரைச் சேர்ந்த ஐஐடி பட்டதாரியான சமர்ந் மகாஜன் என்பவர் ஓம்கர் திவேகர் மற்றும் ரஜத் பார்கவா என்ற தனது நண்பர்களுடன் இணைந்து ஒரே ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு 17 நாட்கள் பத்து இரயில்களில் ஏறி இறங்கி, இந்தியாவின் பல இடங்களுக்கு சுமார் 8000 கி.மீ தூரம் பொதுப்பெட்டியில் பயணம் செய்து இந்த டாகுமெண்டரியை உருவாக்கியிருக்கிறார். அதில் பொதுப்பெட்டியில் பயணிக்கும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் உரையாடல்களை நேர்மையாக ஆவணப்படுத்தியிருக்கிறார். அப்துல்கலாமின் அணு சோதனையையும் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் மெசஞ்சர் திரைப்படத்தையும் அங்கலாய்த்து பேசும் இஸ்லாமிய இளைஞர்கள், ஹரியானாவிற்கு பெண்கள் தேவையே இல்லை என புலம்பும் நடுத்தர வயதுக்காரர் (பாவம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார் போலும்), ஜாதி மற்றும் இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் இருவர், தீண்டாமையைப் பற்றியும் அதனை தான் வெறுப்பதாகவும் கூறும் பிராமணர், தனக்கென ஒரு ஆண் குழந்தை வேண்டுமென ஏங்கும் இரண்டு பெண்குழந்தைகளைப் பெற்றவர், சினிமாவைப் பற்றி பேசுபவர்கள், அரசியல், நிதி நெருக்கடி, வறுமை, தொழில், விளையாட்டு, காதல், குடும்ப வாழ்க்கை, பாலியல் அத்துமீறல்கள் இவற்றைப்பற்றி பேசுபவர்கள் என 100 நபர்களின் உரையாடல்களும் அவரது கதைகளும் ஒருமணிநேரம் கொண்ட இந்த டாகுமெண்டரியில் காணமுடிகிறது. காஷ்மீர் ஒரு முன்கூட்டிய முடிவு என்ற சர்வதேச பிரச்சனைகளும் பொதுப்பெட்டியில் அலசி ஆராயப்படுகிறது.
- THE UNRESERVED
- Directed by - Smarth Mahajan
- Assistant Director - Rajat Bhargav
- Cinematography - Omkar Divekar
- Country - India
- Language - Hindi
- Year - 2017
மும்பையில் தொடங்கும் இந்த டாகுமெண்டரியின் பொதுப்பெட்டி பயணம் பனி படர்ந்த காஷ்மீருக்கு சென்று அங்கிருந்து கிழக்காக திரும்பி கடைக்கோடியான கன்னியாகுமரியில் முடிகிறது. இரயிலில் மற்ற பெட்டிகளைக் காட்டிலும் பொதுப்பெட்டியில் சன்னல்கள் எப்போதும் திறந்தே இருக்கும் இந்த டாகுமெண்டரியில் அவற்றின் வழியே சன்னலுக்கு வெழியேயான மற்றொரு முகத்தையும் காணமுடிகிறது. சொல்லப்போனால் இந்த டாகுமெண்டரி இரயிலின் பொதுப்பெட்டியின் வழியாக இந்தியாவின் அகத்தையும் புறத்தையும் அப்படியே காட்டுகிறது.
டாகுமெண்டரியைக் காண: