மாண்டவர் மீண்டால்.

மாண்டவர் மீண்டால்? ... அதாவது செத்துப் போனவர் திரும்பவும் உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்?. அவர் சாதாரண மனிதராக இருந்தால் நாளிதழில் ஒரு மூலையில் இருப்பார், தொலைக்காட்சியில் குற்றம் நடந்தது என்ன, திகில் நேரம், திக் திக், பக் பக், புலன்விசாரனை என தூங்கப்போகும் முன்பு வந்து பயம் காட்டுவார், இதுதான் வேலை வெட்டியென யாராவது ஒருவர் நடத்தும் யூடியூப் சேனலுக்கு கதையளிப்பார். அதுவே உயிருடன் வந்தவர் பிரபலமான தலைவராக இருந்தால்?.. எடுத்துக்காட்டாக சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் தற்போது உயிருடன் வந்தார் (வருகிறார்) என வைத்துக் கொள்வோம். அவரைப் பிடித்து நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கும் விலைவாசி ஏற்றத்திற்கும் வன்முறை போராட்டம் சமுதாய சீர்கேட்டிற்கும் அட வண்ணாந்துறையில் .... வேண்டாம் விடுங்கள்... எல்லாவற்றிற்கும் நீங்கதான் காரணம் என சொல்கிறார்களே அது உண்மையா? என அவரிடம் கேட்கலாம். அதுபோல் அவர் பங்கிற்கு... ஏன்டா.. நான் எப்படி கொடுத்துவிட்டுச் சென்றேன்?..நீங்க எப்படி வைத்திருக்கிறீர்கள்?... என நம்மிடம் திருப்பிக் கேட்கலாம். அதுபோல் மகாத்மா காந்தி உயிருடன் திரும்ப வந்தால்?... அவரை யார் மறுபடியும் கொள்வது? என இங்கிருக்கும் கோட்சே வாரிசுகளுக்குள் குடுமிப்பிடி சண்டையே நடக்கலாம். எது எப்படியோ! மாண்டவர் மீண்டால் சுவாரசியத்திற்கும் கலகலப்பிற்கும் கலவரத்திற்கும் பஞ்சமிருக்காது. இந்த திரைப்படமும் அத்தகைய அனுபவத்தை கொண்டதுதான். இதில் உலகையே ஆட்டிப் படைக்க நினைத்த சர்வாதிகாரியான "ஹிட்லர்" மீண்டு வருகிறார். என்ன நிகழ்கிறது? என பார்க்கலாம். 

ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் பதுங்கு குழியில் எரித்துக் கொள்ளப்பட்ட இடத்திற்கு சற்று அருகில் இருக்கும் ஒரு தோட்டத்திலிருந்து அடால்ப் ஹிட்லர் எழுந்து உயிருடன் வருகிறார். தான் இறக்கும் முன்பு அணிந்திருந்த இராணுவ உடையுடன் வெளிவரும் அவருக்கு 1945 ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. ரீச் சான்சலரிக்கு (பழைய அதிபர் மாளிகை இருந்த இடம்) போகும் வழியைத் தேடும் அவரை பார்க்கும் மக்கள் வேடமிட்ட நடிகர், நகைச்சுவையாளர், கோமாளி என நினைக்கின்றனர். ஒரு பெண் திருடன் என நினைத்து அவரது கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவுகிறாள். எரிச்சலுடன் அலையும் அவர் பெட்டிக்கடையில் தொங்கும் பத்திரிக்கையை புரட்ட அதிலிருக்கும் வருடம் 2014 என்பதை பார்த்து மயங்கி விழுகிறார். அவருக்கு ஆதரவு கொடுக்கும் பெட்டிக்கடைக்காரர் 1945 ஆம் ஆண்டிற்கு பிறகான நிகழ்வுகளை விளக்க, தான் கண்ட நாஜிக்களின் ஜெர்மனி இதுவல்ல என ஹிட்லர் நொந்து போகிறார். அதுமட்டுமல்லாது போலந்து இன்னமும் ஜெர்மனியை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், தான் மேற்கொண்ட போர் யுக்திகள் அனைத்தும் வீணாக போனதாகவும் நம்புகிறார். அதற்கென தான் தொடராமல் விட்ட நாஜிக்களின் ஜெர்மனியை உருவாக்கியே தீருவேன் என உறுதிமொழி எடுக்கிறார். 

இதற்கிடையில் மைடிவி தொலைக்காட்சியில் இருக்கும் "ஃபேபியன் சவாட்ஸ்கி" என்பருக்கு வேலை பறிபோகிறது. தனது வேலையை எப்படியும் பெறவேண்டும் என நினைக்கும் அவருக்கு தற்செயலாக எடுத்த ஆவணப்படத்தில் உயிருடன் வந்த ஹிட்லர் ஒரு காட்சியில் தென்படுகிறார். அவரை சந்தித்தால் ஏதாவது சுவரசியம் கிடைக்கும் என நினைத்து சவாட்ஸ்கி தேடிப் பிடிக்கிறார். நாஜிக்களின் ஜெர்மனி என்ற கனவிலிருக்கும் ஹிட்லரை அவர் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு நிகழ்பவைகளை படம்பிடிக்கிறார். இவர் நிஜ ஹிட்லரா? அல்லது வேடமிட்டவரா? எனத் தெரியாது தான் படம்பிடித்த காட்சிகளை வேடிக்கையாக யூடியூபில் வெளியிடுகிறார்.  கோமாளிகள் எல்லாம் வெகுவிரைவில் பிரபலமாகும் இக்காலகட்டத்தில் உயிருடன் வந்த ஹிட்லரின் வீடியோக்கள் பலரை கவர்கிறது. மேலும் தனது தொலைக்காட்சி நிறுவனத்தில் மீண்டும் வேலையை பெரும் சவாட்ஸ்கி ஹிட்லரை வைத்து நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகிறார். அதில் ஹிட்லர் பங்கெடுத்து தனது வழக்கமான ஆவேச உரையை நிகழ்த்தி இன்னும் பல ரசிகர்களை பெற்று ஜெர்மனி முழுவதும் புகழ் அடைகிறார். அந்த புகழில் திரைப்படம் ஒன்றில் ஹிட்லராகவே நடிக்கிறார். "எர் இஸ்ட் வைடர் டா" என புத்தகம் எழுதி வெளியிடுகிறார். அவர்மீது பத்திரிக்கை நிறுவனம் ஒன்று வழக்கு தொடுக்கிறது. ஹிட்லரின் ஆதரவாளர்களான வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவரை போலியானவர் விமர்சனம் செய்கிறார் என நினைத்து தாக்குகின்றனர். அதனை வைத்து மக்களின் அனுதாபத்தையும் அவர் மேலும் பெறுகிறார். ஆனாலும் அவர்தான் நிஜ ஹிட்லர் என ஒருவருக்கும் தெரியாது. ஒருகட்டத்தில் அவரை பின்தொடரும் சவாட்ஸ்கிக்கு மட்டும் தன்னுடன் இருப்பது கோமாளியல்ல நிஜ ஹிட்லர்தான் என தெரிய வருகிறது. அது ஆபத்தில் முடிகிறது. அத்தனை கலவரத்திலும் ஹிட்லர் தனது நாஜிக்களின் ஜெர்மனி என்ற கனவை நிறைவேற்ற துடிக்கிறார். தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டும், தற்போது கிடைத்திருக்கும் புகழை வைத்தும், புதிதாக அரசியலில் களம் இறங்குகிறார். அதனை வைத்து உயிருடன் திரும்ப வந்த ஹிட்லர் தன் கனவை நிறைவேற்றினாரா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை. 


உயிருடன் மீண்டுவரும் ஹிட்லருடன் மக்கள் செல்பி எடுத்துக்கொள்வதில் தொடங்குகிறது திரைப்படத்தின் கலகலப்பு. 1945 ஆம் வருடத்திற்கு பிறகு உலகில் நிகழ்ந்த மாற்றங்களை தெரிந்து கொண்டு கொதிப்பதும், தனது பழைய அதே அதிகார தொனியில் (புதிதாக தைக்கப்படும் கோட் உட்பட) அதிபராகவே ஜெர்மனி முழுவதும் வலம் வருவதும், இன்டர்நெட், தொலைக்காட்சி சேனல்கள், செல்போன் என தற்போதைய தகவல் தொழில் நுட்பங்களைக் கண்டு ஹிட்லர் மிரள்வதுமாக திரைப்படம் வேகமெடுக்கிறது. Downfall  திரைப்படத்தை பார்த்து அதன் முடிவை மாற்றச் சொல்வதும், இறுதிக்காட்சியில் தனது பழைய திறந்த மெர்சிடிஸ் பென்ஸ் W31காரில் அமர்ந்து "I can work with this" என சொல்வதும் உச்சகட்ட சிறப்பு. இந்த திரைப்படத்தில் உயிருடன் திரும்ப வந்த ஹிட்லரை ஜெர்மனி மக்கள் எத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ அதே கண்ணோட்டத்தில்தான் நாமும் அவரை பார்க்க நேர்கிறது. ஆனால் அவர் நிஜம்தான் எனும்போது இந்த உலகையே ஆட்டிப் படைக்க நினைத்த ஒருவரின் எண்ணங்களை உணர முடிகிறது. ஒருவகையில் பார்த்தால் இந்த திரைப்படம் அரசியல் நையாண்டித்தனம் நிறைந்தது. இதில் இருப்பது கற்பனை, நகைச்சுவை, கேலித்தனம் என்றாலும் ஹிட்லர்கள் சூல் இன்றைய உலகில் சில கேள்விகளையும் எழச் செய்கிறது. 

  • ER IST WIEDER DA (Look Who's Back)
  • Directed by - David Wnendt
  • Written by - Timur Vermes
  • Music by - Enis Rotthoff
  • Cinematography - Hanna Lentz
  • Country - Germany
  • Language - German 
  • Year - 2015

ஜெர்மன் எழுத்தாளர் "திமூர் வெர்ம்ஸ்" என்பவரது "எர் இஸ்ட் வைடர் டா" என்ற நாவலைத் தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. "அங்கதம்" என தமிழில் அழகாகச் சொல்லப்படுகிற முரணான நகைச்சுவை மற்றும் தீவிர நோக்குடன் புரிந்துகொள்ளக் கூடிய நையாண்டித்தனம் நிறைந்த இலக்கிய வகையில் அமைந்த நாவலை மாற்றுக் குறையாமல் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இதே கதையை வைத்து 2018 ஆம் ஆண்டு "சோனோ டொர்னாடோ" என்ற இத்தாலி திரைப்படத்தையும் எடுத்திருந்தனர். அதில் ஹிட்லருக்கு பதிலாக மற்றொரு இரண்டாம் உலகப்போர் வில்லனான "பெனிடோ முசோலினி" உயிருடன் திரும்ப வந்து கலக்கியிருந்தார்.