ஒரு புதிய வழி.
2019 ஆம் ஆண்டு NCRB கணக்குப்படி வருடத்திற்கு "32033" பெண்கள் அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு "88" பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்ற தகவல் பெண்களை தெய்வமாக கொண்டாடும் ஒரு நாட்டிற்கு அவ்வளவு பொருத்தமாக இருக்காது. இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படையானவையாக இருக்க வெளித்தெரியாத பாலியல் குற்ற சம்பவங்களும் இருக்கின்றன. குறிப்பாக "Marital Rape" என சொல்லப்படுகிற "திருமண வன்கலவி" என்ற பாலியல் அத்துமீறல்களுக்கு இங்கு சட்டதிட்டங்கள் எதுவும் இல்லை. அதைப்பற்றிய சப்தங்கள் கூட இல்லை. பெண்ணுக்கு உடலுறவில் விருப்பமில்லாதபோது தனது உரிமைக்கானவள் என அவளது கணவன் வலுக்கட்டாயமாக பாலுறவில் ஈடுபடுவது என்பது ஆண் மற்றும் கணவன், ஆள்பவன் என்ற அதிகாரத்திற்குள்ளாகவே இருக்கிறது. பெண் என்பவள் ஆணுக்கு அடங்கியவளாக இருத்தல் வேண்டும் அதிலும் திருமணமாகிவிட்டால் கணவனது பாலியல் வேட்கைக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும் என்ற கருத்தியலோடு ஒவ்வொரு பெண்ணும் வளர்க்கப்படுகிறாள். இந்த ஒரு கருத்தில் மட்டும் ஓரே குட்டையில் ஊரிய மட்டைகளாக எல்லா மதக் கொள்கைகளும் இருக்க, பெண்களுக்கு எதிராக நிகழும் அத்தகைய திருமண வன்கலவி என்ற பாலியல் அத்துமீறலே இந்த குறும்படத்தின் பேசும் பொருளாக இருக்கிறது.
21 வயது பெண்ணான "ராணி" என்பவள் திருமணம் முடிந்ததும் ஹரியானாவின் கிராமத்திலிருக்கும் தனது புகுந்த வீட்டிற்குச் செல்கிறாள். புதுமணப்பெண் என்ற அந்தஸ்து ஒருபுறம் இருந்தாலும் அந்த கிராமத்திலிருப்பவர்களும் அக்கம் பக்கத்து உறவுகளும் அவளை பெயருக்கு தகுந்தாற் போல ராணியாகவே பாவிக்கின்றனர். ஆனால் அதனை வெறுக்கும் அவளது கணவன் அவளை அடிமையாக நடத்துகிறான். தனது ஆளுமையைக் காட்ட அழகியான ராணியிடம் ஒவ்வொரு இரவும் வன்கலவியை (Forced sex) செயல்படுத்துகிறான். நாளுக்கு நாள் போக நாய்க்குணம் மாறவா செய்யும் என்பதுபோல அவனது செயல் எல்லைமீறுகிறது. மேலும் உதிரப்போக்கு நாட்களில் பெண்கள் ஊருக்கு வெளியே ஓரிடத்தில் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் அந்த கிராமத்தில் கடைபிடிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் இல்லாத அந்த கட்டுப்பாட்டிலிருந்தும், தனது கணவனின் மிருகத் தனத்திலிருந்தும் தப்பிக்க ஒரு புதிய வழியை ராணி எவ்வாறு கண்டுபிடிக்கிறாள் என்பதுதான் குறும்படத்தின் கதை.
- PALAYAN - A Journey of Escape
- Directed by - Manvi Duggal
- Written by - Krishna Agrwal
- Music by - Chirag Soni
- Cinematography - Farhan Niloy
- Country - India
- Language - Hindi
- Year - 2019.