அற்புதங்களும் மர்மங்களும்.

A+ E Network மற்றும் TV 18 கூட்டணியில் History 18 சேனல் 2011 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்தாலும் சில வருடங்களுக்கு முன்புதான் அது அழகுத் தமிழ் பேசத் தொடங்கியது. இருக்கிறதும் பதுக்கியதும் போதாதென்று மேலும் கிடைக்குமா என தங்கத்தை தேடும் ஒரு கூட்டம், எது நடந்தால் நமக்கென்ன சாப்பாடுதான் முக்கியம் என தேடும் ஒரு கூட்டம், அதிசயம் ஆச்சரியம் வினோதம் இவைகள்தான் தற்போது பிரபலமென OMG, Funny Videos, Frank போன்றவைகளைத் தேடும் ஒரு கூட்டம் என பல நிகழ்ச்சிகளை அந்த சேனலில் அதிகமாக ஒளிபரப்புகிறார்கள். அது ஒருபுறமிருக்க புராதான சின்னங்கள், வரலாற்று நிகழ்வுகள், அதன் நினைவுகள், புகழ்பெற்ற கதைகள், நாயகர்களின் வாழ்க்கை,  மற்றும் ஆவணப்படங்கள் என சில அற்புதமான நிகழ்ச்சிகளையும் அவ்வபோது ஒளிபரப்புகிறார்கள். அவற்றில் ஒரு நிகழ்ச்சிதான் "இந்தியாவின் அற்புதங்களும் மர்மங்களும்" (India: Marvels & Mysteries). 

இந்த நிகழ்ச்சி 2019 ஆம் வருடம் ஒளிபரப்பானது. அதில் இந்தியாவில் இருக்கும் பிரபலமான புராதான சின்னங்கள், கோட்டைகள் பற்றியும், மர்மமான அதிசயங்கள் புதைந்த இடங்களைப் பற்றியும், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற மதத்தோடு ஒன்றிய இடங்களைப் பற்றியும் அதனுள் புதைந்திருக்கும் கதைகளையும் வெறும் 7 நிமிடங்களில் குட்டிக் குட்டியாக விளக்கியிருந்தனர். அவற்றையெல்லாம் குறுகிய நேரத்தில் சொன்ன விதமும், அதற்கென காட்சியமைக்கப்பட்ட வடிவமும், அதற்காக எடுத்துக் கொண்ட சிரத்தையும், குறிப்பாக தமிழில் விவரித்த அந்த குரலும் (BBC தமிழிலும் அவரது குரலை கேட்கலாம்) அனைவரையும் கவர்ந்தது. 

இந்தியாவின் மாபெரும் சரித்திரத்தில் ஒன்றான ஜஹாஸ் மஹால் என்ற மாண்டு கோட்டையில் ஒளிந்திருக்கும் மால்வாவின் கடைசி சுல்தானின் மதம் கடந்த காதல் கதை. 

இந்திய கோட்டைகளின் முத்துமணி மாலை என பாபரால் புகழப்பட்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த விந்திய மலைப்பகுதியிலிருக்கும் 1300 ஆண்டு கால பழமையான பல மன்னர்களின் வெற்றிகளையும் தோல்விகளையும் கண்ட குவாலியர் கோட்டையின் வரலாறு. 

உலகின் மிக உயர்ந்த இடத்தில் மூச்சுவிட ஆக்ஸிஜன் அளவு குறைந்த இமயமலையின்
இந்திய தீபெத் எல்லையில் இருக்கும் புகழ்பெற்ற டங்கர் கோட்டையின் கதை. 

இந்தியாவில் எரிமலைகள் இல்லை என்பது தெரிந்ததே ஆனாலும் பல வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானின் பாலைவனத்திலிருந்த எரிமலையின் மிச்சத்தினை உடைத்து ராஜபுத்திரர்கள் கட்டிய சூரியக்கோட்டையான மெஜ்ரான்காட் கோட்டையின் வரலாறு.

காதலின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலுக்கு முன்பு மும்தாஜிற்காக அவள் வாழ்ந்த போதே புரான்பூரில் ஷாஜகான் கட்டிய ஷாஜிகோட்டையின் கதை.

அந்நியர்களின் வருகைக்குப் பிறகு மொகலாய சாம்ராஜ்ஜியம் சுருங்கத் தொடங்கிய காலத்தில் 14 வயதில் தேவதாசியாக ஆக்கப்பட்ட பேகம் சம்ரு என்ற பெண் தனது 24 வது வயதில் சர்தனாவின் ஆட்சியை கைப்பற்றி வேறெவரும் இல்லாத அளவிற்கு 50 ஆண்டுகள் அரியணையில் அமர்ந்து அவர் காலத்தில் இத்தாலி கட்டிடக்கலையின் வடிவத்தில் கட்டிய கிருஸ்தவ தேவாலயத்தின் கதை. 

சுமார் 20000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட மக்கள் வசிக்கவே முடியாத வரண்ட உப்பு பாலைவனமான ரண் ஆஃப் கட்சின் பண்டைய ஹராப்பா நாகரீகத்தின் தோலாவிராவில் புதைந்துள்ள மர்மம். 

மத்திய இந்தியாவின் (மத்திய பிரதேசம்) மலைப்பகுதியில் மனிதத்தடம் படாத காட்டில் 1957 ஆண்டு  கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றிற்கு முற்பட்ட மனிதர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் பிம்பெட்கா குகையின் ரகசியம். 

சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு ராஜபோக வாழ்க்கையைத் துறந்து ஞானம் பெற்ற ஒருவர் இந்துக்களின் புனித இடமான வாரணாசியின் கங்கைக்கரையின் பத்து மைல் தொலைவில் தனது ஐந்து சீடர்களுக்கு முதல் போதனைகளை அளிக்க பின்பு அந்த போதனைகள் ஒரு புது மதத்தையே உருவாக்க அந்த முதல் போதனைகள் ஒலித்த புத்தமதத்தின் புனித இடமான சாரநாத்தின் சிறப்புகள். 

ராஜஸ்தானிற்கும் மத்தியபிரதேசத்திற்கும் நடுவில் சம்பல் நதியின் பள்ளத்தாக்கில் சிதைந்த நிலையிலிருக்கும் பதேஸ்வரா சிவாலயமும் அதனை பாதுகாத்துவந்த சம்பல் பகுதியின் கொள்ளைக்கூட்ட தலைவனின் கதையும். 

சிக்கலான வேலைப்பாடுகள் நிறைந்த அதிசய வைக்கும் சிற்பங்களும் தூண்களும் கொண்ட கர்நாடகா மாநிலத்தின் ஹோய்சலேஸ்வரர் கோவிலின் கலைத்திறன்.  

இங்கு எவராலும் நுழைய முடியாது என சத்ரபதி சிவாஜியினாலும் கிழக்கின் டிராய் என கிழக்கிந்திய கம்பெனியினராலும் வெகுவாக புகழப்பட்ட கிழக்கு தொடர்ச்சிமலையின் முடிவிலிருக்கும் தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையின் வரலாறு. 

என மொத்தம் 12 சிறிய எபிசோடுகைளை இந்த நிகழ்ச்சி கொண்டிருந்தது. தற்போது இந்நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாக அவ்வபோது காணக் கிடைக்க அவை மொத்தமும் யூடியூபில் கிடைக்கிறது. ஒரு சிற்றுண்டி சாப்பிடும் நேரம் அல்லது வேண்டா விருப்பாக திணிக்கப்படும் ஒரு விளம்பரத்தை பார்க்கும் நேரத்தில் பெருமைமிகு வரலாற்றை அற்புதங்களும் மர்மங்களும் என அறிந்துகொள்ளுதல் நிச்சையம் சுவாரசியமாக இருக்கும்.