இரத்தப்பூ இதழ்கள்.
'நாம் ஏன் அதைப்பற்றி பேசக்கூடாது' என்ற ஒற்றை வரிக்கு அத்தனை பலமிருக்கிறதென்றால் அடுத்த தலைமுறை வரை தொடரும் அணுகுண்டின் கதிர்வீச்சைப் போல எழுத்திற்கு இன்னமும் வீரியமிருக்கிறது என்பதை உணரலாம். அதுபோல அதே ஒற்றை வரியை உதித்தவரின் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ அதிகாரத்தை காட்டி அவரை காணாமல் செய்துவிடும் அளவிற்கு கருத்து சுதந்திரத்தின் குரல்வளையும் ஒருபுறம் நெரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பெயரில் மட்டுமே ஜனநாயகம் ஜனனித்திருக்க சுதந்திரமடைந்த ஒரு நாட்டின் ஊழலையும், ஏமாற்றத்தையும், ஏகாதிபத்தியத்தின் சுரண்டலையும், அதன் விளைவுகளையும் பற்றி ஒருவர் நாவல் எழுதினால் அவரை சும்மாவா விடுவார்கள். "இரத்தப்பூ இதழ்கள்" என்ற இந்த நாவலை எழுதிய "கூகி வா தியாங்கோவை" எந்தவித விசாரணையுமின்றி கைது செய்து சிறையிலடைத்தார்கள். மனித உரிமை இயக்கங்கள் மற்றும் உலகின் முன்னணி எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என அவரது கைதிற்கு எதிர்ப்புதெரிவித்து பலரும் போராட்டம் நடத்தினர். சிறையிலிருக்கும்போது மலம் துடைக்கும் தாள்களில் "சிலுவையில் தொங்கும் சாத்தான்" என்ற மற்றொரு நாவலையும் அவர் எழுதி முடித்தார்.
ஒரு வருடத்திற்குபின்பு விடுதலை செய்யப்பட்ட அவர் பல கொடுமைகளுக்கும் ஆளானர். ஆனால் எழுதுவதைத் தொடர்ந்தார்.
பின்நாட்களில் அவரது படைப்புகள் உலகப் புகழ்பெற்றது. எதார்த்தத்தை பிரதிபலிக்கும் அவரது படைப்புகள் அனைத்தும் அணுகுண்டின் கதிர்வீச்சிற்கு நிகரானது.
ஆதிமனிதனும், பூமியில் உள்ள எல்லா மனிதனுக்கும் தந்தையானவனும் இங்குதான் பிறந்தான் என்ற பெருமை கொண்ட ஆப்பிரிக்கா கண்டத்தின் "கென்யா" நாடுதான் இந்த இரத்தப்பூ இதழ்கள் நாவலின் கதைக்களம். காலனியாதிக்கத்திலிருந்து 1963 ஆம் வருடம் கென்யா சுதந்திரம் அடைய "ஜோமோ கென்யாட்டா" என்பவர் அதன் முதல் பிரதமரானார். நவீன கென்யாவின் தந்தையாகவும், காலனியாதிக்கத்திற்கு சிம்மசொப்பனமாகவும் இருந்த அவர் சுதந்திரத்திற்கு பின்பு தலைகீழாக மாறிப்போனார். ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவிக்கும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை தேசபக்தர்களின் முகத்திலும் அவர் கரியைப் பூசினார். மாவ் மாவ் என சொல்லக்கூடிய இயக்கத்தினரை இரணுவத்தைக் கொண்டு அழித்தார். அவர்களின் முக்கிய தலைவர்கள் பலரை காணாமல் போகச் செய்தார். அந்நியர்கள் மற்றும் உள்நாட்டினர் சுரண்டலிருந்து தங்களை காக்கும் இரட்சகர் இவர் என நினைத்திருந்த மக்களை அவர் படுகுழியில் தள்ளினார். சொல்லப்போனால் பிரிட்டிஷாரின் அடிவருடியாகவே மாறிப்போனார். கிருஸ்துவ திருச்சபைகளும், அவர்கள் போதித்த ஆங்கில கல்வியும், சிறுமுதலாளி வர்க்க வேறுபாடும் அவருக்கு பெரிதும் உதவ ஜனநாயக பசுத்தோலை களைந்து சர்வாதிகார நரியாக ஆனார். 1978 ல் கென்யாட்டா இறந்தபின்பு துணைப் பிரதமராக இருந்த "அராப் மொய்" என்பவர் பிரதமராக பதவியோற்றார். நரிக்கு பதிலாக ஓநாயிடம் மக்கள் சிக்கிக்கொண்டனர். இவர்களின் ஆட்சிக் காலமே கென்யாவின் போதாத காலமாக அந்த காலச் சூழல்களே நாவலின் பின்புலமாக இருக்கிறது.
இயற்கையைப் படிக்க குழந்தைகளை வயலுக்கு இட்டு சென்றான். இயற்கையை படித்தல் என்பது அவனது சொற்றொடர்.
ஒரு குழந்தை கூவியது:
'பாரு ரத்தப் பூ இதழ்'
வெள்ளை, நீல, ஊதா பூக்கள் வழிந்த அந்த வயலில் ஒற்றை அவரையில் மட்டும் ஒரு சிவப்புப் பூ பூத்திருந்தது. அவை எந்த முறையில் நீங்கள் பார்த்தாலும் ரத்தம் சொட்டுவதைப் போன்றுதான் அது காட்சி தந்தது. முனிரா அதனிடம் குனிந்து நடுங்கும் கரத்தால் அதைப் பறித்தான். அதன்மேல் ஆடிய வெளிச்சத்தின் காரணமாக இருந்திருக்கலாம், ஏனெனில் இப்போது அது சாதாரண சிவப்பு மலராகவே இருந்தது.
ரத்தம் ஒரு நிறம் கிடையாது.
கென்யாவின் "இல்மொராகு" என்ற கிராமத்தில் ஒரே நாளில், ஒரே இடத்தில் மூன்று முக்கிய பிரமுகர்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களது கொலைக்காக சந்தேகத்தின் பெயரில் தொடக்கப்பள்ளி ஆசிரியரான "முனிரா", "கரெகா" என்ற தொழிற்சங்கவாதி, "அப்துல்லா" என்ற பெரியவர் மற்றும் "வஞ்சா" என்ற விபச்சாரிப் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றனர். இதில் வஞ்சா அந்த கொலை சம்பவத்தில் தீக்காயமடைந்திருக்க ஆசிரியர் முனிராவிடம் விசாரணை தீவிரமாகிறது. தனிமைக் காவலில் அடைக்கப்பட்டிருக்கும் முனிரா பத்து வருடங்களுக்கு பிந்தைய தனது நினைவுகளை வாக்குமூலமாக எழுதத் தொடங்குகிறார். அவரது நினைவுகளில் முனிரா யார்?... அவரது கதை என்ன?.. கரெகா எப்படி பட்டவன்? அப்துல்லாவின் பங்கு எத்தகையது? வஞ்சா எவ்வாறு விபச்சாரியானாள்? என்ற கதை விரிகிறது. மேலும் கொலைசெய்யப்பட்ட அந்த மூவரும் யார்?. அவர்கள் எவ்வாறு சந்தேகிப்படும் நால்வரின் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றனர் என்ற கதையும் இருக்கிறது.
கதை நிகழும் முக்கிய இடமான இல்மொராகு கிராமம் ஒருகாலத்தில் கட்டுறுதி நிறைந்த உழவர்களைக் கொண்ட கிராமமாக இருந்தது. அவர்கள் இயற்கைக் காடுகளை வளமாக்கி இருந்தனர். மண்ணை தங்கள் விரல்களாலே கீறினார்கள். தம் சந்ததியினரை உட்டி வளர்க்கும் எல்லாவித பயிர்களையும் உண்டாக்கினர். ஒற்றுமையாகவும் துணிவுடனும் இருந்து இயற்கை சீற்றம், வறட்சி மற்றும் கொள்ளை நோய் காலங்களை சமாளித்து வந்தனர். பண்பாட்டு மரபுகளை போற்றிவந்தனர். ஆனால் சுதந்திரமும் அதற்கு பிந்தைய காலமும் அவர்களை பட்டினியாக்கி வறுமையைத் தந்து சொந்த இடத்திலேயே அகதிகளாக அலைய வைக்கிறது. வெறும் வயதானவர்களும் பெண்களுமாக எஞ்சியிருக்கும் கிராமம் நகரமாக்குதலாலும் தொழில்வளர்ச்சியாலும் அதன் சுயத்தை முழுவதும் இழக்கிறது. அந்த கிராமத்தின் கதையும் இந்நாவலில் இருக்கிறது.
- இரத்தப்பூ இதழ்கள்
- கூகி வா தியாங்கோ
- தமிழில்- சிங்கராயர்
- விடியல் பதிப்பகம்
காலனியாதிக்கம் என்பது ஒரு நாட்டின் நிலம், இயற்கைவளம், அதனைச் சார்ந்த பொருளாதாரத்தை அந்நாட்டு மக்களைக் கொண்டே சுரண்டுவதாகும். சுதந்திரம் என்ற பெயரில் அத்தகைய காலனியாதிக்கத்திலிருந்து பல நாடுகள் விடுதலையடைந்தாலும் அந்நாடுகளை ஆழ்ந்து கவனிக்க சுதந்திரத்திற்கு பிறகும் சுரண்டல்கள் அப்படியே தொடர்வதை காணலாம். தொழில்நுட்பம், வளர்ச்சி, கேளிக்கைகள் என்ற மாயைகள் கண்ணை மறைக்க ஏகாதிபத்தியங்களாலும் கார்பரேட் நிறுவனங்களாலும் அந்நாடுகள் சூரையாடப்பட்டு வருவதை உணரலாம். ..."இப்பவும் நகரத்திலும் பிற இடங்களிலும் இருப்பவர்கள் தம் நிறைவின் மிகுதில் இருந்து குடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் தின்றுகொண்டும் புணர்ந்து கொண்டும் இருக்கையில் இங்கோ பசியாலும் உட்டக்குறைவாலும் மக்கள் மயங்கி விழுந்து மாண்டுபோகிறார்கள்"... என நாவலில் வரும் கரெகா சொல்வதைப்போல பசியும் பட்டினியுமான மக்கள் நிறைந்த நாடுகள் உலகில் இருக்கின்றன. அதைத்தான் இரத்தப்பூ இதழ்கள் என்ற இந்த நாவலில் காலணியாதிக்கம், ஏகாதிபத்தியம், தொழில்புரட்சி, சுரண்டல்கள், அதனை சார்ந்த அரசியல் என ஒரு நாடு தனது அடையாளத்தை எப்படி இழக்கிறது என கூகி வா தியாங்கோ வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார். மேலும் ..."இந்த உலகத்துக்கு... இந்த கென்யாவுக்கு... இந்த ஆப்பிரிக்காவுக்கு ஒரே ஒரு விதிதான் தெரியும்..."அடுத்தவன நீ தின்னு இல்லைன்னா உன்ன அவன் தின்னுடுவான்"... என வஞ்சா சொல்வதைப்போல மனித மனங்களும் மாறிப்போனதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இப்போது நாம் எங்கே இருக்கிறோம்?... இப்போது நாம் இருக்குமிடத்திற்கு வந்திருப்பது எப்படி?... உணவையும் செல்வத்தையும் உருவாக்குவோரில் 75 சதவீதம் பேர் ஏழைகளாகவும் மக்கள் தொகையில் உழைக்காத பகுதியினர் ஒரு சிறு கூட்டம் செல்வந்தராகவும் இருப்பது எப்படி நேர்ந்தது?... வரலாறு என்பது தம் செயல்பாடுகளாலும் உழைப்பாலும் காலப்போக்கில் இயற்கையை மாற்றி இருக்கிறவர்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். ஆனால் அந்த சாறுண்ணிகள் பேன்கள் மூட்டைப்பூச்சிகள் நச்சு ஈக்கள் பயனுள்ள எந்த வேலையும் செய்யாதவர்கள் வசதியில் வாழ்வதும், இருபத்து நான்கு மனிநேரமும் பாடுபடுபவர்கள் பசியோடும் ஆடையில்லாமலும் இருப்பதும் எப்படி வந்தது?... ஒவ்வொரு துளி உழைப்பும் தேவைப்படும் ஒரு நாட்டில் வேலையின்மை எப்படி நிலவ முடியும்?... அப்படியானால் காலனிய ஆட்சி வருவதற்குமுன் மக்கள் தம் செல்வத்தை எவ்வாறு உருவாக்கியும் ஒழுங்கமைத்தும் வந்தார்கள்?... அதிலிருந்து என்ன பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்?..
இந்த நாவலின் கதையை எங்கோ ஒரு மூலையின் கதைதானே என அவ்வளவு எளிதாக ஒதுக்கித்தள்ள முடியாது. போலியான தேசப்பற்று, போலியான வாக்குறுதிகள், போலியான திட்டங்கள், போலியான நடிப்பு, போலியான விளம்பரங்கள், போலியான நம்பிக்கையில் இயற்கைவளம் தொடங்கி அடித்தட்டு மக்களின் செருவாட்டு காசு உட்பட அனைத்தையும் பிடிங்கி ஒருசிலர் மட்டும் இன்னமும் வாழ அவர்களுக்கு தாரைவார்க்கும் இன்றைய இந்தியாவின் நிலைக்கும் ஏகப் பொருந்தும்.