அவர்களுக்குத்தான் இந்த பூமி.

ஒரு யானையைக் கொல்வது
அவ்வளவு எளிது.
மின்சாரம் பாய்ச்சி
இரத்தத்தை உறையவைத்து
பெரும் இதயத்தின் துடிப்பை 
சிறு நிமிடத்தில் 
நிறுத்திக் கொல்லலாம்,
வாழையோ பலாவோ
விரும்பிச் சாப்பிடும் உணவில்
விஷத்தை கலக்கலாம்,
அதுவே வெடி மருந்தென்றால் 
தொண்டைக்குழி இறங்கும்முன்
வெடித்துச் சிதறுவதை காண்பது
இன்னும் சுவாரசியமாக இருக்கும்,
தீ பந்தம் கொழுத்தி
தீக்காயம் செய்து
முள்படுக்கை கொண்டு
கால்களை துளைத்து
ஈட்டி வேல்கம்பெறிந்து
தோல் கிழித்து
சதையழுகிச் சாவதை
கழுகுபோல் காத்திருந்து ரசிக்கலாம்,
ஆழக் குழி தோண்டி
அதற்கு மேல் மட்டையிட்டு
விதி தெரியாது பின்னப்பட்ட
சதி வலையில் விழ வைக்கலாம்,
வலிக்காத ஊசியிருக்கிறது,
தோட்டாக்களும் மளிவாக கிடைக்கிறது,
ஒரு யானையைக் கொல்வது
ஒரு எறும்பைக் கொல்வதைவிட
அவ்வளவு எளிது.
அவ்வளவு எளிதல்ல
நத்தையாக நகர்வது
அவ்வளவு எளிதல்ல
அணிலாக ஓடுவது
அவ்வளவு எளிதல்ல
பறவையாக வானம் அளப்பது
அவ்வளவு எளிதல்ல
மீனாய்
தேனீயாய் 
பூச்சியாய்
புழுவாய் 
மலராய் 
மரமாய் இருப்பது
அவ்வளவு எளிதல்ல
அவைகளாக இருந்திருக்க நினைத்து 
மனிதனாக வாழ்வது. 
காற்றுவரும் வழியை
கண்டுபிடியுங்கள்,
இருகால் மடித்து
இருக்கையை அமர்த்துங்கள்
தரை உத்தமம்,
வளைந்த கோணத்திலிருந்து
முதுகுத்தண்டை நிமிர்த்துங்கள்,
இமைகளை மூடி
கண்களுக்கு தாழிடுங்கள்,
இரு புருவத்தின் மத்தியில்
சிந்தனைக்கு அழைப்புவிடுங்கள்,
அழைப்பு மறுத்தால்
மதம் பிடித்த கடவுள்
பிடித்த மதக் கடவுள்
நேசிக்கும் நபர்
கவர்ந்த பொருள் அல்லது
வெற்றிடத்தையாவது 
அங்கு வரவழையுங்கள்,
நாசி திறங்கள்,
மூச்சு விடுங்கள்,
வேகத்தை அதிகப்படுத்துங்கள்,
ஒருமுறை,
மறுமுறை,
இன்னும் ஒருமுறை,
மீண்டும்,
மீண்டும்,
....
....
நடப்பதையெல்லாம் பார்க்க
இதுதான் 
நல்லதென தோன்றுகிறது.
பெரும்பாலான நேரங்களில்
விளையாடிக் களிப்பது
சூசையப்பர் தேவாலயத்தில்,
உணவென வந்துவிட்டால்
மூக்கை நுழைப்பது
ஆண்டகை தர்காவில்,
தீபநாயக ஜீனாலயத்தையும்
சூடாமணி விகாரத்தையும்
ஒருமுறையேனும்
வலம் சுற்றி இடம் வர,
உறவுகொள்வதும்
உறங்குவதும்
உறைவதும்
அகிலாண்டேஷ்வரி திருக்கோயிலில்,
அப்படியிருக்க
ஆமாம்!..அந்த புறா
என்ன மதம்?
எங்களுக்கு முளைக்காத கொம்பு
உங்களுக்கு அதிஷ்டவசமாக 
முளைத்திருக்கிறது
மூளையை எடுத்துக்கொண்டால் 
காதுவழி அவ்வபோது
சீழாக வழிந்தோடும்
உங்களது புறக்கண்கள் 
எதையுமே ஆழ்ந்து பார்ப்பதில்லை
பார்த்ததில்லை 
தேவையில்லாத இடம்
ஊசிமுனை அளவிருந்தாலும் 
உங்கள் மூக்கு 
எறும்புத்தின்னி மூக்கைவிட 
எளிதாக நுழைந்துவிடும்
வாய் கன்னம் முடியும்வரை நீண்டிருக்கிறது
பல்லிற்கு மேல் நாக்கு படுத்திருக்கிறது
அதில் அசைபோடுவது சைவமானாலும்
கக்குவது அனைத்தும் அசைவமே
இருதயம் மார்புக் கூட்டிலே
அதிலே 
அன்பு கருணை 
இரக்கம் தெய்வீகம் 
இருக்கிறதெனச் சொல்வார்கள்
உங்களுக்கு இதயம்
ஆசனவாய்க்கு வெகு அருகில்
வயிற்றிலிருப்பதெல்லாம்
உங்களுக்கு 
உங்களுக்கே சொந்தமானவையல்ல
முலை
குறி
யோனி
பிட்டத்தையெல்லாம் விமர்சிப்பது
கற்புகாக்கும் நாட்டில்
கலாச்சார ஆபாசமாகிவிடுவதால்
உங்கள் கையின் வேலை 
வாளைந்து கும்பிடுவதும்
நொளிந்து யாசிப்பதும்
கால்கள் மண்டியிடுவதற்கும்
தொடைநடுங்கி பயந்தோடுவதற்கும்
உண்மைதான்
நீங்கள் எங்களைவிட
விசித்திரமானவர்கள்,
நீங்கள் எங்களை விட
முதன்மையானவர்கள், 
நீங்கள் எங்களைவிட
உயர்ந்தவர்கள்.
பிறவிப் பணக்காரனுக்கு
நடிக்கத் தெரியாது என்பதை
உண்மையாக்கி
இயல்பாய் இருத்தலை
இயல்பாய் கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் உடையில் நாகரீகம்
தெரியவில்லை
நடையில் அதிகாரம்
தெரியவில்லை
அதிர்ந்து பேசினாலும்
அமைதியாக பேசினாலும்
மழலைச் சொல் கேளீர் 
எனத்தான் கேட்கிறது
கை குலுக்கள்கூட
லாவகரமாக இருக்கிறது
தட்டிக் கொடுத்தலிலும்
கட்டிக் கொள்வதிலும்
அன்பு ஒன்றே அடித்தளமாக இருக்கிறது
ஐந்து இலட்சமென்ன
அதற்குமேலும் காளான் சாப்பிடும்
வசதியிருந்தாலும்
எளிய கைப்பக்குவத்தையும்
இலைவாழை சாப்பாட்டையும்
பந்தி வைத்தவர் 
தொந்தி நிறைய
அவர்களோடு சேர்ந்து ருசிக்கிறீர்கள்
நாற்காலி கிடக்கட்டும்
நான்கு ஆட்டக்கால்
மண்தரையும் 
கோரைப்பாயும் தரும் குளிர்ச்சியை
அனுபவிக்கிறீர்கள்
நியாயமான போராட்டங்களுக்கு
தோல் கொடுப்பது அருட்பெருஞ் செயல்
காது கொடுப்பது அதைவிட பெருஞ் செயல்
இவைகள்தான் எங்களது தேவை
இவைகள்தான் நாங்கள் என்பதை
நீங்கள் மறக்கமாட்டீர்கள்
உங்களைச் சுற்றியிருப்பவர்கள்
உங்களைச் சுற்றியிருப்பது
உங்களைச் சுற்றயிருப்பது
எதுவாயினும் 
மனிதம் என்ற அளவுகோலில்
உங்களின் உயரம் 
ஒவ்வொருநாளும் 
கூடிக்கொண்டே செல்கிறது
அது இன்னமும் உயர
எனக்கு என்னமோ! 
உங்களை பிடித்துவிடும் போலிருக்கிறது 
பப்பு.
ஒரு ரூபாய் இட்லி ஆயா
பத்து ரூபாய் சாப்பாட்டு தம்பதிகள்
முப்பது ரூபாய் டாக்டர்
பிரசவ இலவச ஆட்டோகாரர்
பிர சவ அடக்க மளிகை கடைக்காரர்
தண்ணீர் அளக்கும் ஓட்டுனர்
மரம் விதைக்கும் நடத்துனர்
விபத்தா இதோ உதவி சைக்கிள் கடைக்காரர்
இரத்தம் வேண்டுமா மில்லு ஓனர்
படிப்பு தேவையா வேலையில்லா பட்டதாரி
இன்னும்
பெயர் தெரியாதவர்கள்
முகம் காட்டாதவர்கள்
பலன் எதிர்பார்க்காதாவர்கள்
அவர்களுக்கும்தான் இந்த பூமி
அவர்களுக்குத்தான் இந்த பூமி.