ச்..சே.. என்னவொரு வாழ்க்கை.
ஆடை கிடக்கட்டும் நவீனத்திற்கும் கலாச்சாரத்திற்கும் விட்டுப்போன தையல் அது. காலில் செருப்பு கூட இல்லாத எளிமை,
மேய்வது மேயட்டும் நாமும் கொஞ்சம் அசைபோடுவோமே என்ற ஆசுவாசம்,
மூச்சு வாங்கினாலும் இயற்கை காற்றை உள்ளிழுத்தபடியான சொகுசுப் பயணம்,
தோலில் கைபோட்டு கதைபேசி நடப்பதில் தெரியும் இலகுவான தோழமை,
அத்தனை கூர்மையாக புத்தியைத் தீட்டி அதையே ஆயுதமாக்கி எல்லாவற்றையும் புடுங்கினாலும் என்னிடம் இருப்பது உங்களுக்கும் சேர்த்து சோறுபோடுவதுதான் என சொல்லாமல் சொல்லும் அந்த மெலிந்த கம்பீரம்,
நீங்கள் மிதப்பது கனவில் நான் நிஜத்தில் என அலைகளோடு பேசும் நளினம்,
சீக்கரம் வா போகலாம்... அம்மா தேடுவாள்.. நீயும் எங்களுடன்தான் என்ற உறவு,
என மூன்றாவது கண்ணில் சிக்கிய சில புகைப்படங்கள் இவை.
பறக்க ஆசைப்பட்டு இருப்பதை தொலைத்துவிடும் வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வாங்கு வாழ்தல் என்பது எளிமையாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
Simplicity is the ultimate sophistication
இவர்களை பார்த்தபோது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. எளிதாகச் சொல்வதென்றால்...ச்..சே.. என்னவொரு வாழ்க்கை அப்படித்தான் தோன்றியது.