அட!... இவர் வாய்ஸ் தானே செம்ம..ல்ல..
அந்த இளம் பாடகர் சென்னையில்தான் பிறந்தார். நாம பறக்கிறோமா எனத் தெரியாத வயதில் அவருக்கு ஒரு வயது இருக்கும்போது சான்பிரான்ஸிஸ்கோவிற்கு பறந்துவிட்டார். அங்கு அவரது அம்மா கர்நாடக சங்கீதம் கற்றுத்தருபவராக வேலை பார்க்க ச ரி க ம ப த நி எல்லாம் செர்லாக் ஹார்லிக்ஸ் பூஸ்ட் காம்ப்ளானுடன் சேர்த்து அவருக்கு ஊட்டப்பட்டது. நான்...வளர்கிறேனே.. அம்மா.. என தெளிவாக தமிழ் மொழியின் உச்சரிப்பும் அவருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. வளர்ந்து பெரியவனானதும் அவர் இசைக்கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். மேடை நிகழ்ச்சிகளில் பற்றுபெற்று பரிசுகளை குவித்தார். இசையை எதிர்கால வாழ்க்கையாக்கிக் கொண்டார். நன்றாட பாடத் தெரியும், இசையமைக்கத் தெரியும், பரதநாட்டியம்கூட தாம்...தக்க... தைய தக்க...தை.
வருடத்திற்கு ஒருமுறையாவது அவர் இந்தியா வருவார். குறிப்பாக சென்னையில் நிகழும் மார்கழி மகா உற்சவ விழாவில் கலந்து கொண்டு கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை பாடிவிட்டு சர்க்கரைப் பொங்கலுடன் சுண்டல் சாப்பிட்டுவிட்டு செல்வார். அவ்வாறு ஒருமுறை அவர் இங்கு வந்து பாடிவிட்டு செல்ல அவரது மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி வந்திருந்தது. அதில் நான் உங்களது பாடலை கேட்டேன், உங்கள் குரல் வளத்தை சோதித்தேன், ரசிக்கும்படியும் மயக்கும்படியும் இருந்தது, எனது அடுத்த படத்தில் ஒரு பாடலை உங்களால் பாட முடியுமா என ஒரு இசையமைப்பாளர் கேட்டிருந்தார். அந்த இளம் பாடகருக்கு முதலில் அதனை நம்ப முடியவில்லை. பிறகு உண்மைதான் என அறிந்தபோது அவருக்கு தலை கால் புரியவில்லை. அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியது இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர் ஒருவர். நான் தான் இசை, நான் தான் உங்களை தினமும் தூங்க வைக்கும் தூக்க மாத்திரை, துக்க மாத்திரை, நான்தான் எல்லாம், என்றெல்லாம் தற்பெருமை கொள்ளாதவர். இசையை நேசிப்பவர், புதுப்புது விசயங்களை தேடிச் செல்பவர் அதனை தனது படைப்புகளில் புகுத்துபவர், சோதனைக்காரர், புதியவர்களை முன்செலுத்துபவர், இரண்டு கையிலும் தூக்கமுடியாத அளவிற்கு பரிசு கிடைத்தாலும் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பவர். ஆகவே அந்த இளம் பாடகர் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். பின்நாட்களில் இசையமைப்பாளரும் அவர் எப்படி பாடவேண்டும் என்பதை தூரத்திலிருக்கும் அவருக்கு இணையம் வழியாக சொல்லிக் கொடுத்தார். அவரும் பறந்து வந்து தனது முதல் சினிமா பாடலை பாடிவிட்டு சென்றார்.
சொர்க்கம் விட்டு பூமி வந்தா
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா
நான் விழிச்சுப் பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ?
என்ற வரிகளின் சோகத்தைப்போல
அந்த முதல் பாடல் பெரிதாக சோபிக்கவில்லை குறிப்பிட்ட சிலரைத்தான் கவர்ந்தது. இருந்தும் யாருப்பா அந்த பையன் என பல இசையமைப்பாளர்களை கேட்க வைத்தது. மீண்டும் சில காலங்களுக்கு பின்பு அந்த இசையமைப்பாளர் தனது மற்றொரு திரைப்படத்தில் அந்த இளம் பாடகரை பாடவைத்தார். இந்தமுறை அவரது குரல் விருதுகளை தட்டிச் சென்றது. அந்த பாடல் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இன்ஸ்டன்ட் காதல் செய்யும் இளசுகளின் காலர் டியூன் ஆனது. இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தது. சரியான சந்தர்ப்பத்திற்காக தன்னிடமிருக்கும் குறைகளை சரிசெய்து காத்திருக்க இரண்டு வருடங்களுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அதனை கச்சிதமாக பிடித்துக்கொண்டு அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றவையாக மாறியது. இன்று அவர் தமிழ் மட்டுமல்லாது மளையாளம் தெலுங்கு என தென்னிந்தியாவின் பிரபலமான இளம் பாடகராக இருக்கிறார். இவர் வாய்ஸ் தானே செம்ம..ல்ல என சொல்லும் அளவிற்கு தனி அடையாளமும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
சரி!...யார் அந்த இளம் பாடகர்?
அடியேனை கவர்ந்த அவரது குரலில் ஒலித்த பாடல்களை இங்கு தொகுத்திருக்கிறேன். அதனை பார்த்து கேட்டு நீங்களே சொல்வீர்கள் ...அட!... இவர் வாய்ஸ் தானே...செம்ம..ல்ல..