லென்சிற்கு பின்னால்.
ஏதோவொரு தாக்கத்தையும் மெலிதான சலனத்தையும் ஏற்படுத்தாத படைப்புகள் சிறந்தாக இருக்காது. இது புகைப்பட கலைக்கும் ஏகப் பொருந்தும். இயற்கையை, அழகியலை, மகிழ்ச்சியை, துயரத்தை, அழிவை, வறுமையை, அரசியலை, போராட்டத்தை, சுதந்திரத்தை, ஏன்! ஒரு நாட்டின் போரையே நிறுத்திய புகைப்படங்கள் இருக்கின்றன. அத்தகைய புகைப்படங்களை எடுத்தவர்கள் பலராலும் பாராட்டப் பெற்றாலும் அவர்களது புகைப்படம் மற்றவர்களைக் காட்டிலும் அவர்களுக்குள்ளும் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தியிருக்கும்.
"புகைப்படக் கலைஞன் தனது மூன்றாவது கண் வழியாக ஒரு புதுவித உலகைக் காண்கிறான்"
இதனையும் தவிர்த்து பாராட்டுதலுக்காகவும் தொழில் முறைக்காகவும் மட்டுமே புகைப்படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த குறும்படத்தில் வருபவரும் ஒரு புகைப்படக் கலைஞரே. அவர் எத்தகையவர்? அவர் எடுத்த புகைப்படங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?.
தெற்கு ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் குப்பை பொறுக்கும் ஒரு வயதான மனிதரிடமிருந்து இந்த குறும்படம் தொடங்குகிறது. சொல்லப்போனால் குப்பைத் தொட்டியில் தொடங்குகிறது. தேவையற்றதெனவும் இருக்கிறதென அலட்சியத்தாலும் மிதமிஞ்சிய நுகர்வாலும் வீசியெறியப்படும் குப்பையில் கூட புதையல் கிடைக்குமென நம்பியிருக்கும் பல ஆன்மாக்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அந்த குப்பைத் தொட்டியை ஆராய, அதில் அவர்களுக்கு தேவையான சில பொருட்கள் கிடைக்கிறது. அவைகள் கிடைத்தபோது உருவாகும் அவர்களின் உணச்சிகளை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமரா மூலம் ஒரு புகைப்படக்காரர் படம் எடுக்கிறார். அதனை சேகரித்து காட்சிக்கு வைக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்கள் எத்தகையது? அது என்ன விளைவை ஏற்படுத்துகிறது? என்பதையே இந்த குறும்படம் காட்டுகிறது.
- THE BLIND PHOTOGRAPHER
- Directed by - Carl Houston Mc Millan
- Written by - Carl Houston Mc Millan
- Music by - Jonathan Hunter, Zaki Ibrahim
- Cinematography - Christian Denslow
- Country - South Africa
- Language - English
- Year - 2011.
பகல் இரவு இவற்றிற்கு உண்டான வேறுபாடுகளைப் போல வறுமை செழுமை என இரண்டு பக்கங்களைக் கொண்டது நகர வாழ்க்கை. இது எல்லா நாட்டிற்கும் பொருந்தும். அந்த நகர வாழ்வை இந்த குறும்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த குறும்படத்தின் இயக்குனரும் ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். ஆரம்ப காலகட்டத்தில் வறுமையையும் அழுக்கு நிறைந்த முகங்களையும் படம் பிடித்த அவர் அப்புகைப்படங்களுக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கையை உணரத் தொடங்கினார். அதனை முன்னிருத்தி லென்சிற்கு பின்னால் இருக்கும் விசயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாத ஒரு புகைப்படக்காரனை அவரது கண்ணோட்டத்தில் பார்வையற்ற புகைப்படக் கலைஞனாக இந்த குறும்படத்தில் சித்தரித்திருக்கிறார். ஒரு புகைப்படத்தின் லென்சிற்கு பின்னால் அப்படி என்ன இருக்கக்கூடும்?... நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.