பணம் பத்தும், பாதகமும் செய்யும்.


ரு பொருளுக்கு மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டம் மாற்றும் வழக்கம் மறைந்து அதற்கு பதிலாக ஏதாவது ஒரு பொருளை மதிப்பு வாய்ந்ததாக கருதும் வழக்கம் வந்தபோது ஒரு நேரத்தில் இந்த உலகத்தை பணம் என்ற கடவுள்தான் ஆட்சி செய்வார் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது நிகழ்ந்திருக்கிறது. இன்று இவ்வுலகின் கடவுள் பணம்தான். கடவுள் என்றால் மதம் பிடிக்கும் அல்லவா? அதற்கு தகுந்தாற்போல நமக்கெல்லாம் இந்த மதம் பிடித்து அதனைச் சுற்றியே சுழல பணத்தின்மீது இருக்கும் பற்றுதலை விட்டால் வாழ்க்கை அழகாகும் என்கின்றனர் அனுபவம் வாய்ந்தவர்கள். அது எப்படி வைட்டமின் M மீது அசையில்லாமல் இருவனால் இருக்க முடியும் என்றால்?, அது வரும் வழியில் ஆசை வையுங்கள். அதாவது அறவழியில் பணத்தை தேடுங்கள் என்கின்றனர். தகாத வழியில் வரும் பணத்திற்கு வந்தவழி நிச்சையம் தெரியும் அவ்வழியே அது திரும்பிச் செல்லும். இதைத்தான் பணம் பத்தும் செய்யும், பணம் பாதகம் செய்யும் என்றெல்லாம் சொல்லியிருக்கின்றனர். இப்படித்தான் ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் பணத்தைப் பற்றி போதனை செய்து கொண்டிருந்தார். என்ன நிகழ்ந்தது என கதைக்குள் செல்வோம் வாருங்கள்.

ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார். வாழ்க்கை பாடத்தை நன்கு கற்ற அவர் சொல்வதை அந்த ஊரில் உள்ளவர்கள் கேட்டு நடந்தார்கள். ஒருமுறை அவர் பணத்தைப் பற்றி ...பணம் பத்தும் செய்யும்.. பாதகமும் செய்யும்... அதுமட்டுமல்லாமல் உறவுகளையும் நண்பர்களையும் விரோதிகளாக மாற்றிவிடும்... என சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். அதனை கேட்ட நான்கு இளைஞர்கள் அவர் சொன்னதை மறுத்து பேசினர் ...பணத்தால் எதுவும் செய்ய முடியாது... குறிப்பாக சிறுவயதிலிருந்து நண்பர்களாக இருக்கும் எங்களை பணத்தால் பிரிக்கவே இயலாது... என அவர்கள் அந்த பெரியவரிடம் வாதம் செய்தனர். இதனை கேட்ட பெரியவர் காலம் பதில் சொல்லும் என தனது சொற்பொழிவை முடித்தார்.

நாட்கள் கடந்தது. ஒருநாள் மலைப்பகுதியில் அந்த நான்கு இளைஞர்களும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். அப்போது முனிவர் ஒருவர் அங்கிருக்கும் குகை ஒன்றிலிருந்து ... அய்யோ! என்னை சாவு துறத்துகிறதே... அய்யோ! என்னை சாவு துறத்துகிறதே... என சொல்லிக் கொண்டே ஓடினார். இளைஞர்களுக்கு ஒன்றும் புரியாமல் அந்த முனிவர் இருந்த குகைக்கு சென்று அங்கு என்ன இருக்கிறதென பார்த்தனர். அந்த குகையில் வைரம் தங்கம் வைடூரியம் முத்து பவளம் மாணிக்கம் என விலைமதிக்க முடியாத செல்வங்கள் கொட்டிக் கிடந்தன... இதனை பார்த்தா அந்த முனிவர் பயந்து ஓடினார்?... என அந்த இளைஞர்கள் செல்வக் குவியலை கையால் அள்ளிப் பார்த்தனர். ஒவ்வொருவரின் கண்ணிலும் ஒளிக்கீற்று மின்னியது. இதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என கிடைத்ததை சரிசமமாக பங்கு போட்டு எடுத்துச் செல்ல நினைத்தனர். ஆசை அப்போதுதான் துளிர்விட, அந்த இளைஞர்களில் ஒருவன் நான்தான் அதனை முதலில் பார்த்ததால் தனக்கு கொஞ்சம் அதிக பங்கு வேண்டுமென கேட்கத் தொடங்கினான். மற்ற ஒருவன் இல்லை.. இல்லை.. நான்தான் முதலில் இதனை பார்த்தேன்.. அதனால் எனக்கே அதிக பங்கு... என கேட்கத் தொடங்கினான். மீதமிருந்தவர்களும் தான் நான் என சொல்ல, நால்வருக்கும் வாக்குவாதம் தொடங்கியது. வாய் சரசம் கை சரசத்தில் முடிந்தது. அந்த நால்வரும் கையில் கிடைத்ததை எடுத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள அதில் ஒரு இளைஞன் இறந்துபோனான். மற்றொருவன் படுகாயமடைய, அவர்களது சண்டை சிவப்பு பார்த்து நின்றது. 

நடந்தது நடந்துவிட்டது... இறந்தவன் தொலைந்தான்... இனி நடக்க வேண்டியதை யோசிப்போம்... இருப்பதை மூன்று பங்காக போட்டுக் கொள்வோம்.. என மீதமிருப்பவர்கள் முடிவு செய்தனர். நேரம் கடந்தது. படுகாயமடைந்தவனுக்கு தாகம் எடுத்தது, மற்றவர்களுக்கு பசியெடுத்தது. 

இளைஞர்களில் ஒருவன் சாப்பாடும் தண்ணீரும் அங்கிருக்கும் செல்வங்களை மூட்டை கட்ட சாக்குப் பையும் வாங்கிவர புறப்பட்டான். திரும்பி வருவதற்குள் இவர்கள் இருவரும் இருப்பதை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வதென்ற சந்தேகம் அவனுக்கு உள்ளுக்குள் இருந்தது. அவன் சென்ற பிறகு படுகாயமடைந்த இளைஞனுக்கு தாகம் அதிகரித்தது. தண்ணீர் தண்ணீரென முனகத் தொடங்கினான். பக்கத்திலிருந்த மற்றொருவன் அதை கண்டுகொள்ளாமல் சாகட்டும் பார்க்கலாம் என்றிருந்தான். காயமடைந்தவன் முனகியபடியே சிறிது நேரத்தில் இறந்துபோனான். 

வெளியில் சாப்பாடும் தண்ணீரும் வாங்கப்போனவன் திரும்பி வந்தான். குகைக்குள் நுழைய முற்பட்டபோது அவனது தலையில் இடியாக மரக்கட்டை ஒன்று இறங்கியது சுருண்டு விழுந்து அவனும் இறந்தான். மீதமிருப்பது ஒரு ஆள், ஒரே பங்கு.

மீதமிருக்கும் அந்த இளைஞன் வாங்கிவந்த சாப்பாட்டை சாப்பிட்டான். மூச்சு முட்ட தண்ணீரைக் குடித்தான். வங்கி மோசடி செய்துவிட்டு விடிந்தால் நாட்டைவிட்டே ஓடிப்போக நினைக்கும் தொழிலதிபர் போல இருப்பதையெல்லாம் மூட்டை கட்டினான். புறப்பட தயாரானபோது அவனுக்கு தலை சுற்றியது, மயக்கம் வருவதுபோல் இருந்தது. சாப்பாடு வாங்கச் சென்றவன் அதில் விஷத்தை கலந்தது தெரிவதற்குள் இரத்த வாந்தியெடுத்து அவனும் அங்கேயே விழுந்தான். கடைசியில் அந்த செல்வம் கேட்பாரற்று அங்கேயே இருந்தது. 

இது கதைதான் என்றாலும் தற்போது நிஜத்திலும் செல்வங்கள் சில இடங்களில் கேட்பாரற்று கிடக்கிறது. எட்டாயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, பதினெட்டாயிரம் கோடி ஊழல் என்ற தகவல்கள் எல்லாம் வெறும் செய்திகளாய் கதைகளாகவும் அந்த குகைக்குள் இருப்பதைப் போல மிஞ்சியிருக்கிறது. 

அந்த பெரியவர் சொன்னது போல் பணம் பாதகம் செய்திருக்கிறது. நண்பர்களை எதிரிகளாக மாற்றியிருக்கிறது. மேலும் அந்த குகையிலிருந்து ஓடிவந்த முனிவர் நினைத்ததும் நடந்திருக்கிறது. 

பணம் பத்தும் செய்யும் என்றாரே, அந்த பத்து என்ன?

1. பேராசை

2. தீய இச்சை 

3. கஞ்சத்தனம்

4. காதல்

5. அகம்பாவம்

6. பொய்

7. பொறாமை 

8. ஆடம்பரம்

9. கர்வம்

10. கெடுமனம் 

கடைசியாக கோல்ட்டஸ் என்பவர் பணத்தைப் பற்றி கூறியதோடு முடிப்பது நல்லது. 

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!