இது எங்கள் முறை.
சிங்கப் பெண்களை ஒன்றுதிரட்டி சிவப்பு சட்டை மாட்டிவிட்டு ஒரு கால்பந்து அணியை உருவாக்கி அதிகாரத்தை எதிர்த்து வெற்றிக் கோப்பையை வாங்கிய கதையை சினிமாவில் பார்த்து பிகிலடித்திருப்போம். இந்த டாகுமெண்டரியும் அதுபோல் ஒரு கதையைக் கொண்டது. இதிலும் ஒரு கால்பந்து அணி வருகிறது, அதில் சிங்கப் பெண்கள் இருக்கிறார்கள், கால்பந்தை மட்டுமல்ல மற்ற சிலவற்றையும் சேர்த்து அவர்கள் உதைக்கிறார்கள். அது என்ன? என்பதை இறுதியில் பார்க்கலாம்.
மேற்கு ஆப்பிரிக்காவில் கடைசியில் இருக்கிறது செனகல் நாடு. ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவின் கருப்புநிற மக்களை அடிமைகளாக வாங்கிச் செல்லும் சந்தையாக அந்நாடு இருந்தது. காலணியாதிக்கத்திலிருந்து விடுதலையான நாடுகளுக்கு எது வேதந்தம் சித்தாந்தமாக இருக்குமோ அதுபோல் லஞ்சம் ஊழலும் அந்நாட்டில் திருக்குரானாக நிலைத்திருக்க கால்பந்தாட்டமும் அங்கு பிரபலமாக இருக்கிறது. சென்ற உலகக்கோப்பை ஆண்கள் கால்பந்து போட்டியில் செனகல் நாடு பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க அந்நாட்டில் கால்பந்து விளையாட சில பெண்களுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. பெண்களா?.. இந்த பக்கம் வரவே கூடாது என பலரும் அதனை எதிர்க்கின்றனர். சொந்த வீட்டில் உள்ள உறுப்பினர்கள் கூட அவர்களுக்கு கருப்பு கொடியைக் காட்டுகின்றனர். வறுமையும் ஒருபக்கம் தனது ஊத்தைப் பல்லைக் காட்டி இளிக்கிறது. அவற்றையெல்லாம் மீறி அக்கம் பக்கத்திலிருக்கும் சில பெண்கள் இணைந்து ஒரு கால்பந்தாட்ட குழுவை உருவாக்கின்றனர். இத்தனைக்கும் அவர்கள் வெவ்வோறு சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் மற்றும் ஆரம்பக் கல்வியோடு படிப்பதற்கு தடை செய்யப்பட்டவர்கள். 'லேடிஸ் டேர்ன்' என பெயரிடப்பட்ட அவர்களது அணிக்கு நல்ல உள்ளம் படைத்த சில ஆண்களும் உதவுகின்றனர். சரி! எல்லாம் ஆயிற்று பெண்கள் தங்கள் குழுவின் பலத்தை காட்ட வேண்டுமே அதற்கு ஏதாவது போட்டியில் விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். ஆனால் செனகலில் இருப்பதோ ஒரே ஒரு மற்றும் முதலாவதான பெண்கள் கால்பந்து அணி, என்ன செய்வதென்று காத்திருக்க 2009 ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் ஆண்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு அமைகிறது. அதாவது உள்ளூர் ஜாம்பவான் அணிக்கு எதிராக பெண்கள் அணி விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. அது அதிரடியாக நுழைவதால் ஏற்படுகிறது. இது கால்பந்தாட்ட விதிமுறைக்கு எதிரானது என்ற போதும் அந்த போட்டியினைக் காண அங்குள்ள புதிய விளையாட்டு அரங்கத்திற்கு மக்கள் வருகின்றனர். சுவாரசியமான அந்த போட்டியில் லேடிஸ் டேர்ன் பெண்கள் கால்பந்து அணியினர் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதையும், போட்டிக்கு முன்பு அவர்கள் எடுத்துக்கொண்ட பயிற்சியையும், பெண்கள் தங்கள் அணியை எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதையும் கால்பந்து போட்டியைப் போன்றே இந்த டாகுமெண்டரி விறுவிறுப்பு குறையாமல் காட்டுகிறது.
இன்றளவும் பல நாடுகளில் பெண்கள் கால்பந்து விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கின்றன. பண்பாடு, கலாச்சாரம், மதம், மண்ணாங்கட்டி, களி உருண்டை என அதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றையெல்லாம் இந்த டாகுமெண்டரி பொய்யாக்குகிறது. இந்த டாகுமெண்டரியை வெறும் விளையாட்டாக கடந்து விட முடியாது. பெண்களின் விடாமுயற்சியையும், துணிவையும், போராட்டத்தையும், தன்நம்பிக்கையும், வெற்றியையும் அதன் மூதலீட்டையும் அவர்களது முழு சக்தியையும் இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
- LADIES TURN
- Directed by - Helene Harder
- Written by - Helene Harder
- Music by - Floy Krouchi
- Cinematography - Matthieu Cupillard, Helene Harder
- Country - France
- Language - Wolof and French
- Year - 2012.
செனகலில் இன்று பெண்களுக்கென்று பல கால்பந்தாட்ட அணிகள் இருக்கின்றன. லேடிஸ் டேர்ன் என்ற அந்த முதலாவது அணியுடன் இணைந்து அனைவரும் ஓரே குழுவாக செயல்படுகின்றனர்.
❤பெண்கள் கால்பந்து விளையாட வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல்.
❤பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியினை ஊக்குவித்தல்.
❤ஆண் பெண் இருவருக்குமான பாலின வேறுபாட்டை கலைந்து சமத்துவத்தை உணர வைத்தல்.
என்பதை குறிக்கோளாக் கொண்டு அவர்கள் விளையாடி வருகின்றனர். இதற்கொல்லாம் ஆரம்பமாக அந்த முதல் போட்டியே அமைந்தது. 'இது எங்கள் முறை' என அந்த முதல் போட்டியில் கலந்து கொண்டு அதன் முடிவு சாதகமாக இல்லாவிட்டாலும் கால்பந்தோடு சேர்ந்து அந்த பெண்கள் உதைத்தது மேலே குறிப்பிட்ட அந்த மூன்று செயல்களைக்கு முட்டுக்கட்டையாக இருந்த அத்தனை தடைகளையும்தான்.