மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்.
வேட்டையாடி உணவு சேகரிக்க, பயிர்தொழில் செய்ய, வணிகம் புரிய, பொருளீட்ட, நாடு பிடிக்க, புது இடங்களை கண்டுபிடிக்க, ஆராய்ச்சி செய்ய, சுற்றிப் பார்க்க, பொழுபோக்க, அரே.. ஓ... சம்போ என கடைசி காலத்தில் கடவுளை அடைய ஆதிகாலம் தொட்டு இன்றுவரை மனிதன் பயணம் மேற்கொண்டுதான் வருகிறான். பயணம் என்பது தேடல். அங்கு என்ன கிடைக்கிறது அல்லது என்ன இருக்கிறது என அறிதல். அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்றால் பயணம் என்பது ஒரு அனுபவம். மார்க்கோபோலோ, யுவான் சுவாங், கொலம்பஸ், இபின் பாதுஷா போன்றவற்களைப் பற்றி நமக்கு ஓரளவிற்கு தெரிந்திருக்கும். அவர்களின் பயண குறிப்புகளே உலக வரலாற்றை அறிந்துகொள்ள ஆவணங்களாக இருக்கிறது. பயணம் ஒருவகையில் வரலாறும் கூட. அத்தகைய வரலாற்று பயணிகளில் ஒருவர்தான் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'பிரான்ஸிஸ் பெர்னியர்'.
பிரான்ஸிஸ் பெர்னியர் 1620 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கோனார்ட் அருகேயுள்ள ஜோ என்ற ஊரில் பிறந்தார். சிறுவயதிலேயே அவர் பெற்றோரை இழந்துவிட தனது சொந்த முயற்சியில் மருத்துவம் கற்றார். மருத்துவம் தவிர்த்து வானியல் தத்துவம் என பலவற்றை கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு இருந்தது. அதைவிட உலகில் இருக்கும் பலவிதமான நிலவியல் அமைப்பையும் சூழ்நிலைகளையும் பலவித மனிதர்களையும் சந்திக்கும் உத்வேகமும் இருந்தது. நண்பரின் மூலம் போலந்து நாட்டு தூதர் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்து அவரோடு உலகை சுற்றித்திரிய தொடங்கினார். இருபது வயதில் அவர் தொடங்கிய பயணம் அறுபத்தெட்டு வயதுவரை தொடர்ந்தது. ஐரோப்பா மற்றும் அரபு நாடுகள் ஆப்பிரிக்கா ஆசியாவின் சில நாடுகள் என அவர் சென்ற இடங்களில் எல்லாம் படிப்பையும் பயிற்சியையும் எடுத்துக்கொண்டார். தனது முப்பத்தோராவது வயதில் இந்தியா வந்த அவர் 'டேனிஷ் மெண்ட்கான்' என்பவரின் நண்பராகவும் மருத்துவராகவும் விளங்கினார். அவரின் மூலம் முகலாய பேரரசரான ஷாஜஹானின் அரசவைக்குள் நுழையும் வாய்ப்பு பெர்னியருக்கு கிடைத்தது. குறிப்பாக ஷாஜஹானின் பிள்ளைகளைப் பார்த்து பேசிப் பழகும் சந்தர்ப்பம் அமைந்தது. பெர்னியர் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் (1656-1668) இந்தியாவில் இருந்தார். அப்போது ஷாஜஹானின் இறுதிகால வாழ்க்கையையும் ஔரங்கசீப் தன்னை ஒரு பேரரசராக நிலைநாட்டிக்கொள்ள பாடுபட்ட ஆரம்ப காலகட்டத்தையும் அருகிலிருந்து பார்க்கும் அதிஷ்டம் அவருக்கு கிடைத்தது. அரசவை மட்டுமல்ல மொகலாய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தையும் சுற்றித்திரிந்தார். அக்காலத்தில் அரச குடும்பத்தின் நடவடிக்கை மட்டுமல்லாது சமூகத்தில் நடைபெற்ற மாறுதல்களையும் அவர் கண்காணித்தார். அதனை அவர் பின்நாட்களில் பிரெஞ்சு மன்னருக்கு கடிதம் எழுதுவதைப்போல பயணக் கட்டுரையாக எழுதி வைத்தார். 1670 ஆம் ஆண்டு அவரது கட்டுரைகள் புத்தகமாக வெளியிட பிரான்ஸ் மன்னர் உரிமம் வழங்க, அந்த புத்தகத்தின் தமிழாக்கம்தான் மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்.
பெர்னியரின் பயணக்குறிப்பின் மூலம் ஷாஜஹானுக்கு பின்பு ஆட்சிப் பொறுப்பில் யார் அமர்வது என்ற அவரது மகன்களுக்கு இடையே நிகழ்ந்த சதுரங்க போட்டியில், நகரும் வெட்டுபடும் சாமர்த்தியமாக தப்பித்துக்கொள்ளும் காய்களைப் பற்றியும், விளையாட்டு யுக்தியையும், முடிவையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். மேலும் முகலாய மன்னர்களுக்கிடையே இருந்த மாறுபட்ட எண்ணங்கள், அச்சங்கள், அவர்களது உறவுகளுக்கிடையே இருந்த சிக்கல்கள், ஒருவரை ஒருவர் பழிதீர்த்துக் கொள்ளும் எண்ணங்கள், கொலைகள், தியாகங்கள் என அனைத்தையும் அறிந்துகொள்ளலாம்.
கிட்டதட்ட நாற்பது வருடங்கள் போரே இல்லாத இடமாக ஷாஜஹான் ஆண்டுவந்தது...தனக்கு பிறகு தனது மகன் தாராவை காட்டிலும் பேரனான சுலைமான் ஷிகோதான் ஆட்சிக்கு வரவேண்டும் என அவர் நினைத்தது... ஔரங்கசீப்பின் கோல்கொண்டா அமைச்சர் அமீர் ஜும்லா போலியான ஒரு பெயரில் வைர வணிகம் செய்து வந்தது... அவர் தொடர்பு கொண்டிருந்த சுரங்கங்களிலிருந்து கிடைத்த அளவிட முடியாத வைரக் கற்களை சாக்கு மூட்டையில்தான் கட்ட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது... போர் சமயத்தில் இராஜாபுத்திர வீரர்களுக்கு வழக்கத்தை விட இருமடங்கு அபின் வழங்கப்பட்டது... அதே இராஜபுதன வீரர்களை தங்களது சேனையில் மொகலாய மன்னர்கள் வைத்துக்கொண்டது...
தாராவை கொல்லும் பணி நாசர் என்ற பெயருடைய ஓர் அடிமைக்கு அளிக்கப்பட, அதனை நிறைவேற்றி தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்து வருமாறு ஔரங்கசீப் சொன்னது.... வெட்டப்பட்ட தலையில் இருந்த இரத்தம் தண்ணீரல் கழுவப்பட்டவுடன் சந்தேகத்திற்கிடமின்றி அது தாராவின் தலைதான் என்று தெரிந்ததும் அதைப் பார்த்து கண்ணீருடன் 'ஓ பாவப்பட்டவனின் தலை! இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி எனது கண்களிலிருந்து அகலட்டும். இதனை எடுத்துச் சென்று ஹிமாயூனின் கல்லறை அருகே புதையுங்கள்' என்று ஔரங்கசீப் கூறியது... தாராவின் மகளை தனது மூன்றாவது மகன் அக்பருக்கு மணமுடித்து வைக்க ஔரங்கசீப் நினைத்தது.... தனது தந்தையை கொன்றவனின் மகனை திருமணம் செய்வதை விட தற்கொலை செய்வதே மேல் என தாராவின் மகள் நினைத்தது...புரட்சிக்காரன் என கருதப்பட்ட சிவாஜி சிறைபிடிக்கப்பட்டு தப்பிச் சென்றதிற்கு ஔரங்கசீப்பும் உதவினார் என்ற கருத்து அரண்மனையில் நிலவியது...சூரத் கொள்ளை நடந்தபோது பரங்கியர்கள் நல்லவர்கள் அவர்களை நான் தாக்க மாட்டேன் என சிவாஜி கூறியது.... அதுபோல ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர் வீடுகளை அவர் தாக்காமல் விட்டது...சிவாஜி தனது வாளால் தலையில் கொடுத்த அடியை பொறுத்துக்கொண்டு தன்னிடமுள்ள பொருளை வெளிக்காட்டாத யூதன் பின்நாட்களில் பெரும் வணிகராக மாறியது...என பல அறிய நிகழ்வுகளை பெர்னியர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவில் பெரிய மனிதர்களை யாரும் வெறுங்கைகளுடன் சென்று பார்பதில்லை. மாண்புமிகு மொகலாய மன்னர் ஔரங்கசீப் அவர்களின் உடையை முத்தமிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது, எனது மரியாதையைத் தெரிவிக்கும் விதத்தில் அவருக்கு எட்டு ரூபாய்களை அன்பளிப்பாக அளித்தேன்.
📖 புத்தகத்திலிருந்து.
டில்லிக்கு ஷாஜஹான் வைத்த பெயர் ஜஹானாபாத் இதற்கு ஷாஜஹானின் குடியிருப்பு என்று பொருள்... டெல்லியில் ஷாஜஹானின் மூத்த மகள் கட்டிய மிகப்பெரிய கட்டிடம் பேகம் சாராய்... பாப்பி காய்களை நசுக்கி தண்ணீரில் இரவு முழுவதும் ஊர வைத்து மரண தண்டனைக்கான விஷம் தயாரிக்க படுகிறது (இராஜ விஷம் - ஔரங்கஷிப்பின் சாகோதர குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கு அந்த விஷம் கொடுக்கப்பட்டது)... கடைசியில் ஒரு கிருஸ்தவராக சாக வேண்டும் என விருப்பட்ட ஜஹாங்கீர்... வருடந்தோறும் சுமார் முப்பதாயிரம் குதிரைகள் போருக்காகவே இறக்குமதி செய்யப்பட்டது... ஷாஜஹானை சந்திக்க வந்த அமீர் ஜூம்லா மன்னர் கொடுத்த 756 பிரிட்டிஷ் கேரட் வைரம் (கோஹினூர் வைரம்)... தண்ணீரை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட வெடி உப்பு... என பல குட்டித் குட்டி தகவல்களும் பெர்னியரின் குறிப்புகளில் புதைந்து கிடக்கின்றன.
1666 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூரிய கிரகணம், மூன்று தீ விபத்துகள், காஷ்மீரின் குளிர்ச்சி, டெல்லியின் வெப்பம் என அக்காலகட்ட வானிலையையும், எளிய மக்களின் வாழ்க்கையையும், சிறு சிறு குட்டி கதைகளையும், சிங்க வேட்டை, மான் வேட்டை, யானை சண்டை போன்ற பொழுதுபோக்குகளையும் அவர் உண்ணிப்பாக கவனிக்க தவறவில்லை. மேலும் மார்புக்கு குறுக்கேயேயும் இடுப்பைச் சுற்றியும் கட்டப்படும் வெள்ளை மற்றும் கருப்பு நூலுக்கு இடையேயான தொடரும் பார்ப்பனர் சூத்திரர் பாகுபாடு, இது நாக்கின் தூண்டுதல் வயிற்றின் வேலை செரிக்குமா என பார்த்துக் கொள்(ல்) என்ற அறிவியல் தெரியாமால் தொடரும் மாட்டுக்கறி பிரச்சனை, பண மதிப்பீடோ இழப்பீடோ என்ன கரும பீடோ அதிபாதாளத்திற்குள் சென்று கொண்டிருக்கும் பொருளாதாரம், என தற்காலம் வரை தொடரும் சர்ச்சைகளையும் பெர்னியர் அப்போதே ஆராய்ந்து பார்த்திருக்கிறார். இந்தியாவில் நிலவிய மதம் சார்ந்த கொள்கைகள், வேளாண்மை, கலை, வானியல், ஜோதிடம், வணிகம், சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம், மூட நம்பிக்கைகள் இவற்றையும் அவரது கண்ணோட்டத்தில் குறிப்புகளாக எழுதியிருக்கிறார்.
பெர்னியரின் அத்தகைய பயணக்குறிப்புகளை வாசிக்கும் போது திருப்பங்கள் நிறைந்த ஒரு நாவலை கையில் எடுத்த அனுபவத்தை தருகிறது. வெறும் பயணக்கட்டுரை என சாதாரணமாக கடந்து போகாமல் வரலாற்று பெட்டகமாக அது இருக்கிறது. 'வின்சென்ட் ஏ ஸ்மித்' என்பவரின் ஆங்கில மூலத்திலிருந்து அதனை 'சிவ. முருகேசன்' தமிழாக்கம் செய்திருக்கிறார். தமிழுக்கு அற்புத வரவு இந்த புத்தகம். பெர்னியர் தனது நண்பரான 'எம்.டீ.மெர்வில்லிஸ்' என்பவருக்கு எழுதிய ஒன்பது கடிதங்களும், 'டிரைடன்' என்பவர் எழுதிய 'ஔரங்கசீப்பின் சோகக்கதை' என்ற நாடகத்தின் கதையும் இந்த புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதைவிட பின்குறிப்புகளும் அதன் விளக்கங்களும் கூடுதல் வரலாற்றை நமக்கு அள்ளி அள்ளித் தருகிறது.
- மொகலாய பேரரசில் பெர்னியரின் பயணங்கள்
- வின்சென்ட். ஏ. ஸ்மித்
- தமிழில்- சிவ. முருகேசன்
- சந்தியா பதிப்பகம்.
ஐயா,
மாண்புமிகு மன்னர் அவர்களை மகிழ்விக்கும் பொருட்டும், கடினமான அரசாங்க அலுவல்களுக்கிடையே சற்று ஓய்வினை அளிக்கும் பொருட்டும் நான் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளேன். நான் சொல்லப்போவது ஒரு சோகக்கதை. இதன் நிகழ்வுகள் நடந்தேறியது உலகின் மிகப்பெரிய அரசாங்கத்தில். இந்நிகழ்வுகள் புகழ்மிக்க ஆசிய அரச குடும்பங்களைச் சேர்ந்தவை. இவற்றை மேலான ஒரு நடையில் நான் எழுதவில்லை, மேலும் இவை நன்றாக தொகுக்கப்படவும் இல்லை. சொல்லப்பட்டிருக்கும் செய்திகளுக்கே மாண்புமிகு மன்னர் அதிக மதிப்பளிப்பார் என நினைக்கிறேன்.
-என பெர்னியர் தனது பயணக் கட்டுரையை இவ்வாறு தொடங்குகிறார். பெர்னியர் ராஜ விசுவாசி அல்ல, அவர் தலைசிறந்த வியாபாரி அல்ல, மதம் பரப்பும் மதமெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லை, இருந்த போதிலும் யாருக்காக அவர் இந்தியா வந்தார்? எதற்காக எழுதினார்? என்ன இலாபம் அவருக்கு கிடைத்தது? என்பது கேள்விக்குறிதான். பயணம் என்பது அவரது ஆழ்மனதோடு பொருந்த, அது வரலாறாக மாறும் என அவர் முன்கூட்டியே யூகித்திருக்கலாம். ஆம்! பயணம் ஒருவகையில் வரலாறும் கூட.