நமக்கு நண்பர்கள் யார்?
'ஆயிரம் நண்பர்களை தேடிக்கொள்ளுங்கள் இறுதியில் பத்து நண்பர்களாவது உடனிருப்பார்கள்'
கல்லூரி பருவத்தின் முதல்நாளன்று உயிர் வேதியியல் துறையின் விரிவுரையாளர் கூறிய இந்த வார்த்தை பின்நாட்களில் அப்படியே பலித்தது. சரி போகட்டும்.
நமக்கு நண்பர்கள் யார்?
நமக்கு கிடைக்கும் நண்பர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அதாவது
பனை மரம்
தென்னை மரம்
பாக்கு மரம்.
இது ஏதோ பட்டப்பெயர் போல இருக்கிறதே! என்றால் நிச்சையம் இல்லை. மதிக்கத்தக்கவரும் அறிய கதைகளையும் தகவல்களையும் நம் காது வரை கொண்டுவந்து சேர்த்தவருமான தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் சொன்னதை இங்கு குறிப்பிடுகிறேன்.
பனை மரம் இருக்கிறதே அது தானாகவே முளைக்கும். தானாகவே வளரும். தனக்கு தேவையான தண்ணீரை தனாகவே எடுத்துக் கொள்ளும். தனி கரிசனமெல்லாம் அதற்கு எப்போதும் தேவைப்படாது. அதையெல்லாம் பொருட்படுத்தாது அது நல்ல பலன் கொடுக்கும். நட்டவர்க்கு மட்டுமல்லாமல் வெட்ட வருபவர்களுக்கும் பயன் தருவது பனை. அதுபோல் பிரதிபலன்களை எதிர்பார்க்காமல் நமது சுக துக்கங்களில் வலிய வந்து தோள் கொடுக்கும் நண்பர்கள் இந்த ரகத்தை சார்ந்தவர்கள்.
அடுத்ததாக தென்னை மரம். அதற்கு எப்போதாவது தண்ணீர் விட்டால் போதும். சில மாதங்கள் அதனை கவனிக்காமல் விட்டாலும் தென்னை தன்னை சரி செய்து கொள்ளும். சிறப்பான பலன் கிடைக்க மட்டுமே அதன் மீது அக்கறை செலுத்த வேண்டும். அதுபோல எப்போதாவது ஒருமுறை உதவி செய்ததை நினைவில் வைத்துக் கொண்டு இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு உதவி செய்யும் நண்பர்கள் தென்னை மரத்தை சார்ந்தவர்கள்.
பாக்கு மரத்திற்கு பக்குவம் தேவை. தினமும் அதற்கு தண்ணீர் விட்டு வளர்க்க வேண்டும். அதன் பலனெல்லாம் முழு அக்கரை மற்றும் உழைப்பினால் மட்டுமே கிடைக்கும். இடம் பொருள் என வாழும் தன்மையும் கொண்டது. நாம் கவனித்தால் நம்மை கவனிக்கும் நண்பர்கள் அந்த பாக்கு மரத்தை போன்றவர்கள்.
உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரேமத்திமர்தாம் தெங்குதனை மானுவரே—முத்தலரும்ஆம் கமுகு போல்வார் அதமரவர்களேதேன் கதலியும் போல்வார் தேர்ந்து.
நண்பர்களை இந்த வகையில் நிச்சையம் அடையாளம் கண்டு கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் பனை மரமா? தொன்னை மரமா? பாக்கு மரமா? என நாமும் சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.
நமக்கு நண்பர்கள் யார்?
நண்பர்களுக்கு நாம் யார்?