அப்பாவின் டிரக் வண்டி.

திர்படும் தடைகளை எல்லாம் உடைத்து ஆபத்தான வழிகளை கடந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பற்றி பார்த்து முடித்திருக்க, இந்த குறும்படத்தில் வரும் சிறுமி ஒருத்தி பள்ளியை பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறுகிறாள். அதற்கு காரணம் என்னவாக இருக்கக் கூடும்?

மக்களை சிந்திக்க விடாமல் பார்த்துக்கொள்ளும் ஆறு துறைகளைப் பற்றி மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஒருமுறை பேசியிருந்தார். அதில் கல்வியையும் குறிப்பிட்டிருந்தார். நம்மை எங்கும் போகவிடாமல் அங்கேயே கட்டி வைத்து, அவர்களை நினைப்பதை மட்டும் தலைக்குள் ஏற்றி, அதை ஒழுங்காக வாந்தி எடுக்கிறார்களா? என பார்த்து, வாந்திக்கு மதிப்பெண்கள் வழங்கி, வெளியுலகம் தெரியாது வெளியனுப்புவதுதான் இன்றைய கல்விமுறை என அவர் தாக்கியிருந்தார். அவர் கூறியது போல இன்றைய கல்விமுறை பொருளாதாரத்தை உயர்த்துமே தவிர, தனி ஒருவனது பண்பு நலன்களை ஒரு படியாவது உயர்த்திவிடுமா? என்பது நிமிர்த்தவே முடியாத கேள்விக்குறிதான். குறிப்பாக அன்பு, மனிதநேயம் இவற்றை கல்வி நிலையங்கள் போதிப்பதேயில்லை. 

வியட்நாமின் ஒரு பள்ளியில் படிக்கும் பத்துவயது சிறுமி மை வைக்கு அன்றைய நாளின் பள்ளி அவ்வளவு சிறப்பாக அமைய மறுக்கிறது. அங்கிருந்து வெளியேறும் அவள், டிரக் வண்டி ஓட்டுனரான தன் தந்தையுடன் இணைந்து வடக்கு கிராமப் புறத்திற்கு பயணிக்கிறாள். நீல நிறத்தில் இருக்கும் ஒரு பழைய டிரக் வண்டியினை வைத்திருக்கும் அவளது தந்தை அதில் அன்றாடம் வேலைக்கு செல்லும் சிலரை பணம் பெற்றுக்கொண்டு ஏற்றிச் செல்கிறார். அந்த நிகழ்வில் மை வை தனது தந்தைக்கு உதவ, தொடரும் பயணத்தில் தன் தந்தையின் மனிதாபிமானமற்ற செயல் ஒன்றையும் அவளால் காண நேறிடுகிறது. அது அவளுக்குள் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதன் மூலம் வகுப்பறையைத் தாண்டிய உலகத்தின் எதார்த்தத்தை அவள் உணர்கிறாள்.

நகரம் மற்றும் கிராமம் இவற்றின் வேறுபாடுகள், தந்தை மகள் என இரு தலைமுறையின் இடைவெளி, இரக்கமின்மை மற்றும் மனிதாபிமானம் இவற்றிற்கான அளவீடு, வகுப்பறையின் நிழலுக்கும் அதற்கு வெயியே இருக்கும் நிஜத்திற்கும் உண்டான தொலைவு, என இருவேறு எதிரெதிர் துருவங்களை இந்த குறும்படம் கொண்டிருக்கிறது. தனது சிறுவயது நினைவுகளை இயக்குனர் சொல்ல நினைத்திருக்க, சிறுமி, அவளது தந்தை, அந்த நீல நிற டிரக் வண்டி, வடக்கு வியட்நாமின் கிராமங்கள், இறுதியில் வரும் ஓவியங்கள்  அனைத்தும் அழகு சேர்த்திருக்கின்றன.  

  • MY FATHER'S TRUCK
  • Diercted by - Mauricio Osaki
  • Written by - Mauricio Osaki
  • Music by - Michelle Agnes
  • Cinematography - Pierre de Kerchove
  • Country - Brazil 
  • Language -  Vietnamese, English, Portuguese
  • Year - 2013.   

"உனக்கு நீ எதை செய்ய விரும்ப மாட்டாயோ, அதை பிறருக்கும் நீ செய்யாதே" 

 "நீ நிற்க வேண்டுமென்றால் பிறரை நிற்க வை" 

சீன தத்துவஞானி கான்பூஷியசின் இந்த வார்த்தைகள் மனிதநேய செயல்களுக்கு சரியாக பொருந்த, 'தான் வாழ' எனும் சுயத்தால் அது இன்று மரணிக்கும் தருணத்திற்கு முந்தைய மூச்சுவிடுதல் முனகல் என்ற நிலையில் இருக்கிறது. குறும்படத்தில் வரும் சிறுமியின் கதகதப்பில் அவ்வபோது தலை தூக்கிப் பார்க்கும் நாய்க்குட்டியைப் போல அது அன்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.