கடைசி வைஸ்ராயின் மனைவி.
மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வெளித் தெரியாத வரலாற்றை நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கதாபாத்திரங்களை உலாவவிட்டு வரலாற்று நாவலாக படைப்பது என்பது தனி கலைதான். ஆய்விற்காக அல்லாமல் அறிந்துகொள்ளும் நோக்கில் அதனை வாசிப்பது தனி சுகம்தான். அத்தகைய வரலாறு ஒரு தனி மனிதனின் வாழ்வியலைச் சார்ந்திருந்தாலும் அழகுதான். அதுவே எழுத்தியல் கோட்பாடுகளை புறந்தள்ளி சாதாரண வாசகனை கவரும் வகையில் அமைந்திருந்தால் கூடுதல் அழகுதான். இந்த நாவல் அத்தகைய தான் அனுபவத்தை தருகிறது.
இரண்டாம் உலகப்போர் முற்றுபெற்ற தருணத்தில் பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் காலணியாதிக்கத்திலிருந்த இந்தியாவின் சுதந்திரம் பரிசீலனை செய்யப்பட்டது. அதன் முடிவில் 1948 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தனி சுதந்திரம் வழங்க ஆவண செய்ய அதற்குள் இந்தியாவிற்குள் பிரிவினைவாதம் தலை தூக்கத் தொடங்கியது. இந்தியா- பாகிஸ்தான் என இரண்டு நாடுகளை பிரிக்கவும், பிரித்த நாடுகளிடம் ஆட்சி அதிகாரத்தை சமத்தாக ஒப்படைக்கவும், பிரிவினையால் ஏற்படும் சிக்கலான நிகழ்வுகளை சமாளிக்கவும், பிரிட்டன் சார்பாக லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மௌவுண்ட்பேட்டன் 1947 ஆம் ஆண்டு ஒரு வசந்த காலத்தில் புதுதில்லிக்கு வந்திறங்கினார். அவரே இந்தியாவின் கடைசி வைஸ்ராய் ஆவர். அவருடன் எட்வினா மௌவுண்ட்பேட்டனும் கூடவே வந்திறங்க அவரே கடைசி வைஸ்ராயின் மனைவியாவார். அந்த கடைசி வைஸ்ராயின் மனைவி இந்தியாவிற்குள் காலடி வைத்த நாள் முதல், அவர் இந்தியாவை விட்டு வெளியேறிய நாள் வரையிலான நிகழ்வை இந்த நாவல் தாங்கியிருக்கிறது.
கடைசி வைஸ்ராயிற்கு இந்தியாவில் தலைக்குமேல் அல்லது தலைபோகிற வேலையிருந்தது. ஆனால் அவரது மனைவிக்கோ அந்தகைய நெருக்கடிகள் எதுவும் இல்லாத போதிலும் முக்கிய நிகழ்வுகளிலும் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதிலும் அவர் களப்பணியாற்றினார். அதனால் அனைவராலும் பாரட்டப் பெற்றார். எட்வினா தயக்கம் நிறைந்தவர். ஆனால் விதிகளை உடைக்கத் தயங்காதவர். கோபம் வந்தால் பட்டாசு போல வெடித்துவிடுவார். அலைக்கழிக்கும் ஆன்மாவிற்கு சொந்தக்காரர். வெளிப்படையானவர், மேற்கத்திய நாகரீகத்திற்கு கச்சிதமாக பொருந்துபவர், பேரழகி, இது ஒருபுறமிக்க செல்வாக்கும் அதிகாரமும் நிறைந்தவர். எட்வினாவின் இத்தகைய குணம் அவரது கணவர் மௌவுண்ட்பேட்டனுக்கு ஒத்துவராத நிலையில் அவரை சரியாக புரிந்து கொண்டவர் ஜவஹர்லால் நேரு.
இந்தியா, பாகிஸ்தான், சுதந்திரம், பிரிவினை, சமஸ்தானங்களின் இணைப்பு, ஆட்சி மாற்றம் இவையெல்லாம் அக்காலகட்டத்தில் பேசும் பொருளாக இருக்க எட்வினாவிற்கும் நேருவுக்கும் இடையிலான உறவும் முணுமுணுக்கப்பட்டது. மொகலாய கட்டிடக்கலையின் எச்சமான வைஸ்ராயின் இல்லத்து தூண்களுக்குக் கூட காதுகள் முளைக்கத் தொடங்கியது. மக்களின் செல்வாக்கோடு ஒரு புதிய சுதந்திர நாட்டின் பிரதமாரகப் போகிறவரின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பிரதாயங்கள் நிறைந்த ஒரு நாட்டில் எதிர்ப்பு அலைகளை வீசச் செய்யக்கூடும் என்ற போதிலும் அவர்கள் இருவரின் உறவு தொடர்ந்தபடியே இருந்தது. இந்த நாவல் அவர்கள் இருவரின் உறவுவைப் பற்றி மட்டுமல்லாமல் பிரிவினை காலத்தில் நிகழ்ந்த இரு நாடுகளின் பிறப்பையும், அதனால் விழைந்த துயரத்தையும், பலகோடி மக்களின் வாழ்வை புரட்டிப் போட்ட சோகத்தையும், இரக்கமின்மையையும், வெற்றியையும், நம்பிக்கையையும், உணர்ச்சி குவியலையும், காதலையும், சில முக்கியமான சரித்திர ஆளுமைகள் பற்றியும் பேசுகிறது.
எட்வினாவின் சிறுவயது தோழியும், உலகப்போரில் தன் குழந்தைகளையும், நோய்க்கு கணவனையும் பறிகொடுத்துவிட்டு தனி மனுஷியான 'லெட்டி' என அழைக்கப்படும் 'லெட்சியா வாலஸ்' என்ற கற்பனை கதாபாத்திரமே இந்த நாவளின் கதை சொல்லி ஆவார். எட்வினாவின் செயலாலராக லெட்டி நியமிக்கப்பட்டு மௌவுண்ட்பேட்டன் தம்பதிகளுடன் சேர்ந்து இந்தியா வருகிறார். எட்வினா மட்டுமல்லாது மௌவுண்ட்பேட்டனின் அலுவலக வேலையும் அவர்களோடு முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பமும் அவருக்கு கிடைக்கிறது. அதில் பெறும் அனுபவங்களை அவர் நேரடியாக சொல்வதைப் போலவும், கடிதம் மற்றும் நாட்குறிப்பு எழுதுவது போலவும் இந்த நாவலை நகர்த்திச் செல்கிறார். அதில் நேருவின் நண்பரும் மருத்துவருமான ஹரி ரத்தோர் என்பவருடன் ஏற்படும் காதல் உட்பட தனிமனித விருப்பு வெறுப்பு சோக துக்க மகிழ்ச்சிகளை அழுத்தமாகவும் நாசூக்காவும் குறிப்பிடுகிறார். இந்த நாவலில் கதை சொல்லியான லெட்டி, மருத்துவர் ஹரி ரத்தோர், சமையல்காரர் மற்றும் உதவியாளரான ஜமுரத் கான், கோல்டி, திருமதி பிரிச்சாட், தாரிக் அலி, ஜோன் ஓவிங்டன் மற்றும் அவர்களின் குடும்பத்துடன் வரும் சில கதாபாத்திரங்கள் மட்டுமே கற்பனையானவர்களாக இருக்கிறார்கள். மௌவுண்ட்பேட்டன், எட்வினா, நேரு, ஜின்னா, படேல், காந்தி, வி.பி.மேனன் என மற்றவர்கள் அனைவரும் அவர்களாகவே உலாவுகின்றனர். நாவலில் வரும் அனைத்து கதாமாந்தர்களும் உயர்வாகவே சித்தரிக்கப் பட்டிருக்கின்றனர்.
❗முகாம்களில் ஆயிரக்கணக்கான பழுப்பு நிறக் கண்கள், விரக்தியினால் உணர்ச்சியற்று என்னை நோக்குகின்றன. காந்தி நூல் நூற்றுக் கொண்டிருக்கிறார். ஜன்னலில் இருந்து வரும் சூரிய ஒளியால் அவரைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தெரிகிறது. ஜின்னாவும், ஒளி ஊடுருவக் கூடிய ஊதா நிற உடையணிந்த அவரது மகளும் வைஸ்ராய் இல்லத்தின் ரோஜா தோட்டத்தில் நிற்கின்றனர். பதக்கங்கள் வெயிலில் பளபளக்க, டிக்கி (மவுண்ட்பேட்டன்) தன் கடற்படைச் சீருடையில் படைகளை ஆய்வு செய்கிறார். தன் மார்பில் செருகிய ரோஜா மலருடன், கண்கள் விரிய, எட்வினாவின் காலடியில் ஜவஹர் அமர்ந்திருக்கிறார்.❗
- புத்தகத்திலிருந்து.
எட்வினா நேருக்கு எழுதிய கடிதங்கள் சில திருடு போக அதை திருப்பித் தரும் ஜின்னா. கடைசி அத்தியாயத்தில் எட்வினா இறந்த செய்தி கேட்டு அவரது கடிதங்கள் அடங்கிய பெட்டியை கட்டிக்கொண்டு உடைந்து அழும் நேரு (அந்த கடிதங்கள் அடங்கிய பெட்டி தற்போது நேரு குடும்பத்திலிருக்கிறது). ஷாஜஹானின் உடைவாலிலிருந்த இரத்தினம் மற்றும் பவளக் கல்லை யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து பிரிவின் கடைசியாக லெட்டிக்கு பரிசளிக்கும் சமையல் காரன் ஜமுரத் கான். ஊசி போடுவது வன்முறை, அது சத்தியாகிரக விதிகளுக்கு எதிரானது என நம்பி நோய்வாய்ப் பட்டிருக்கும் தனது மனைவிக்கு மருத்துவம் பார்ப்பவரிடம் முறையிட்ட காந்தி. தனது கனவருக்கு சம்மதம் எனில் எனக்கும் உம் எனும் கஸ்தூரி பாய். சிறுவனுக்கு களிமண் வண்டி என்ற கதை சொல்லும் வயதான நேரு. என்ன வேலைக்கு வந்திருக்கிறோம்? எவ்வளவு காலமாகும்? எனத் தெரியாமல் வந்து இந்தியா பாகிஸ்தானை பிரிக்க வரைபடத்தில் கோடுபோடும் சிறில் ராட்கிளிஃப். 'மதத்தை சமநிலைப்படுத்த தவறி விட்டேன்' என சூழ்நிலைக்கு தக்கவாறு பேசி யானைக்கு மதம்பிடிக்க ஸ்டீராய்டு ஊசிபோட்டு சண்டைக்கு தயார்படுத்தும் ஜெய்ப்பூர் மகாராஜா. காஷ்மீர் கிடக்கட்டும் லாகூரே நமக்குதான் என நம்பிக் கொண்டிருந்த இந்திய மக்கள், என சுவையான சம்பவங்கள் பல நாவல் முழுவதும் நிரம்பியிருக்கிறது.
இந்தியாவில் இந்து மதத்தின் மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களால் மட்டுமே மலம் அள்ளப்பட்டு வந்த நிலையில், நீங்கள் பாகிஸ்தான் சென்ற பிறகு அங்கு உங்கள் மலத்தை யார் அள்ளுவார்கள்? என தைரியமாக கேட்கும் இடத்திலும், எட்வினாவை பற்றியும் நேருவைப் பற்றியும் பிரிவினை, சுதந்திரம் பற்றியும் வெளிப்படையாக விமர்சிக்கும் இடத்திலும், அகதிகள் முகாமின் நிலை மற்றும் சிறுவனது இறப்பில் மனம் கலங்கும் இடத்திலும், காந்தியின் இறந்த உடலுக்கு முன்பு மண்டியிட்டு ஜெபம் செய்யுமிடத்திலும், நான் இங்கேயே தங்கப்போகிறேன் என இந்தியாவை தேர்ந்தெடுக்கும் இடத்திலும், நாவலின் இறுதியில் தனது தோழியின் சர்ச்சைக்குறிய தோழனுக்கு தானும் ஒரு தோழிதான் என ஆறுதலாக தோள் கொடுக்கும் இடத்திலும், கற்பனை கதாபாத்திரமே என்றாலும் கதை சொல்லியான லெட்டி இந்த நாவலில் நாயகியாக மிளிர்கிறாள்.
- கடைசி வைஸ்ராயின் மனைவி
- ரியனான் ஜென்கின்ஸ் ஸேங்
- தமிழில்- பத்மஜா நாராயணன்
- நற்றிணை பதிப்பகம்.
தேன் தடவிய வரலாறு என சொல்லும் அளவிற்கு இந்த நாவலை ரியனான் ஜென்கின்ஸ் ஸேங் எழுதியிருக்கிறார். ஆலம் கேம்பல் ஜான்சன் மற்றும் மார்கரெட் போர்க் வொயிட் ஆகியோரின் கோப்புகளிலிருந்தும், டாட்டர் ஆஃப் எம்பையர்: லைஃப் அஸ் எ மௌவுண்ட்பேட்டன், எட்வினா மௌவுண்ட்பேட்டன்: எ லைஃப் ஆஃப் ஹெர் ஓன் மற்றும் நேருவின் சுயசரிதையிலிருந்தும் பல தகவல்களைத் தேடி சேகரிந்து இந்த நாவலை படைத்திருக்கிறார்.
"விதி நம்மை
கிணற்று வாளிகளைப் போல
வைத்து விளையாடுகிறது
ஒன்று நிரம்பும்போது மற்றொன்று காலியாக இருக்கிறது
ஒன்று மேலெழும்போது மற்றொன்று கீழே விழுகிறது".
என்ற கவிதை உட்பட நுணுக்கமான பல இடங்களில் சற்றும் சுவை மாறாது இந்நாவலை பத்மஜா நாராயணன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்திய சுதந்திரத்தின் கடைசி நிகழ்வை விவரிக்கும் டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸின் 'நள்ளிரவில் சுதந்திரம்' என்ற புத்தகத்தையும், குரிந்தர் சாதாவின் 'வைஸ்ராய்ஸ் ஹவுஸ்' என்ற திரைப்படத்தையும் ஏற்கனவே ருசித்திருந்தால் இன்னும் கூடுதலாக இனிக்கும் நாவல் பழமாக இந்த நாவல் இருக்கும். கையிலெடுத்த பின்பு கீழே வைக்க வைக்க மனம் வராத அளவிற்கான வரலாற்று பின்னணியில் அமைந்த இதனை நீங்களும் வாசிக்க தவறாதீர்கள்.