தேசிய சிற்றுண்டி சமோசா.

ரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே தலைவர் என எல்லாம் ஒரேடியாக மாறிக்கொண்டிருக்க ஒரே சிற்றுண்டி என அறிவிக்கும் அளவிற்கு இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு பதார்த்தம்தான் சமோசா. இந்தியா மட்டுமல்லாமல் அரபு நாடுகள், ஆசியா கண்டத்தின் நாடுகள், கிழக்கு-வடக்கு ஆப்பிரிக்க நாடுகள் என பல நாடுகளின் முக்கிய நகரங்களின் தெருக்களில் மாலை நேரத்தில் சுற்றினால் புத்தர் போல அல்லது பிடித்து வைத்த பிள்ளையார்போல தக்காளி சாஸ் அல்லது தேங்காய் மாங்காய் கொத்தமல்லி புதினா சட்னியுடன்  சமோசாக்கள் சிரிப்பதை காணலாம். ஒரு கோப்பை தேனீருடன் மாலை வேளையில் இதமாக ருசிக்க அற்புதமான சிற்றுண்டியும் இதுதான். அந்த இதத்துடன் அதன் வரலாற்றை ருசிக்கலாம் வாருங்கள். 

முன்பொரு காலத்தில் ஈரானைச் சேர்ந்த ஒரு குழு பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தது.  நீண்ட பயணத்தில் இரவு நெருங்கிய வேலையில் அந்த குழு  கொண்டுவந்த கோதுமை ரொட்டியுடன் இறைச்சியில் செய்யப்பட்ட கறியையும் இரவு உணவாக முடித்து பல ஏவ்.. ஏவ்...விட்டு விட்டு ஓய்வெடுக்கத் தொடங்கியது. மறுநாள் விடிந்ததும் பயணத்தை தொடர மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருக்க, அந்த குழுவிலிருந்த ஒருவர் (ஒருத்தியோ) முந்தைய நாள் இரவு சாப்பாட்டின் மீதங்களை சேகரித்தார். அவருக்கு அதில் கறியும் கிடைக்க அது கெடாமல் இருக்கவும், பயணத்தில் சிந்தாமல் இருக்கவும் (பாத்திரங்கள் பயணத்தில் கூடுதல் சுமை) அதனை கோதுமை ரொட்டியின் மையத்தில் வைத்து நான்கு முக முக்கோண வடிவில் பாதுகாப்பாக மடித்தார். பயணம் தொடர்ந்தது. உணவருந்தும் வேலையில் அந்த கோதுமை ரொட்டியின் நான்முக முக்கோணம் அந்த குழுவில் உள்ள சிலரது வாய்க்குள் அப்படியே போக அதற்கு பின்பு தொலைதூர பாலைவன பயணங்களில் கோதுமை ரொட்டியில் மடிக்கப்பட்ட கறியுடன் பிறந்த அந்த புதிய பதார்த்தமும் பயணிக்கத் தொடங்கியது. பிறகு வந்த காலங்களில் கோதுமை ரொட்டிக்குள் உள்ளே வைக்கப்படும் கறியின் செய்முறையும், அதன் வகைகளும், அளவும், இடமும் மாறி, கோதுமையின் பங்காளியான மைதா தலையெடுக்க அந்த பதார்த்தம் சமோசாவானது. 

'சம்பூசாஹ்' என்ற பாரசீக மொழியிலிருந்து வந்ததுதான் சமோசா. அரபி மொழியில் சாம்புசாஹ் அல்லது சாம்புசாஜ் இதற்கு பிறை போன்ற வடிவம் என்று பொருள். ஆப்கானிஸ்தானில் சம்போசா எனவும் உருது மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியா பாகிஸ்தானில் சமோசா எனவும் அழைக்கப்படுகிறது. சமூசா, சோமாசி, சிங்கதா, சிங்கரா என அதற்கு பல பெயர்கள் இருக்க பல மொழிகளில் ச சி என ஒத்த ஒலி உச்சரிப்பை கொண்டது குறிப்பிடத்தக்கது. 

9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக கவிஞர் 'இஷாக் அல் மவ்ஸ்லி' என்பவரின் கவிதைகளில் சம்பூசாஹ் பற்றிய புகழ்ச்சியான கவிதை ஒன்று இருக்கிறது (வாழ்வின் ருசியறிந்த கவிஞர் போல). மேலும் 10-13 ஆம் நூற்றாண்டு அரபு சமையல் புத்தங்களில் சான்புசாஹ் மற்றும் சான்புசாஜ் என்ற பெயரில் சமோசா செய்வது எப்படி? என்ற குறிப்புகள் இருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டு வரை சமோசா ஈரானில் புகழ்பெற்ற பதார்த்தமாக இருந்ததாகவும், அரசர், அரசி, ஆசை நாயகி, அமைச்சர்கள், அள்ளக்கைகள் மட்டுமே அதனை உண்ணவேண்டும் என இருந்ததாகவும், ஒரு சில இடங்களில் அது தடை செய்யப்பட்டதாகவும் ஈரானிய வரலாற்று ஆசிரியர் 'அபோல்பஷல் பெஹாகி' தனது 'தாரிக் இ பெஹாகி' புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 14-16 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் அது மத்திய ஆசியாவைச் சேர்ந்த வர்த்தகர்களின் தோளில் ஏறி இந்தியாவிற்குள் நுழைந்தது.  

இந்திய துணைக்கண்டத்தின் கலாச்சார வரலாற்றின் ஒரு சின்னமாக இருந்தவர் 'அமிர் குஸ்ராவ் டெஹ்லாவ்' என அழைக்கப்படும் 'அபுல் ஹசன் யமான் உத் டான் குஸ்ராவ்'. டெல்லி சுல்தானின் அரசவையிலிருந்த இவர் ஒரு சூஃபி பாடகர். காவாலி என்ற ஒருவகை பக்தி பாடல்களின் தந்தை இவர்தான். உருது இலக்கியத்தின் தந்தையுமான இவர் கவிதைகள் கட்டுரைகள் வடிப்பதிலும் கைதேர்ந்தவர். அவரது குறிப்புகளில் இறைச்சி, நெய், வெங்காயம் மற்றும் சில மசாலா பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட சமோசாவை சாப்பிட்டதாக எழுதியிருக்கிறார். 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான 'இபின் பதூதா' முஹமது பின் துக்ளக்கின் அரசவையில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சமோசா, இறைச்சி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், மசாலா நிறைந்த கலவையான ஒரு பை சாப்பிட வழங்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இடைக்கால இந்திய சமையல் புத்தகம் என அழைக்கப்படும் 'நிம்மத்னாமா - இ- நஷ்ருதீன் ஷாகி' புத்தகத்திலும், 16 ஆம் நூற்றாண்டு முகலாய ஆவணமான 'ஐன் இ அக்பரியிலும்' சாமோசாவிற்கென சில பக்கங்கள் இருக்கிறது. அதில் 'சன்பாசா' என அது குறிப்பிடப் பட்டிருக்கிறது. இறைச்சிற்கு பதில் மரக்கறி, கோதுமைக்கு பதில் மைதா, இன்னும் சில மசாலா பொருட்கள் என முகலாய சமையல் கட்டிலிருந்து அது வெகுஜன சமையல்கட்டிற்கு மாற இன்றைய சமோசாவானது. பெரும்பாண்மையினரின் கை பக்குவத்தில் நான்வெஜ் என்றிருந்த அது நான் வெஜ் என மாறியது. 

மாவுப்பகுதி அதனுள் வைக்கப்படும் மசாலா பகுதி என சமோசா அகம் புறம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது. மாவுப்பகுதி மைதாவினால் செய்யப்பட, மசாலாப்பகுதி பட்டாணி, உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறியாலும், மாட்டு இறைச்சி கோழி இறைச்சியாலும், இஞ்சி, மிளகு, கொத்தமல்லி இவைகளுடனும், இலவங்கம், பட்டை, பெருஞ்சீரகம் போன்ற நறுமணப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுகிறது. 

மாட்டு இறைச்சியில் செய்யப்படும் பாகிஸ்தானின் கராச்சி புகழ் சமோசா (ககாஸி), அதே போன்று மாட்டு இறைச்சியின் கல்லீரல் பகுதியினை மட்டும் வைத்து செய்யப்படும் வங்கதேசத்தின் சமோசா (ஷிங்காரா), இஞ்சி பூண்டு சகிதம் தேங்காய்பால் கொண்டு ரசம் போன்ற குழம்பில் மிதங்கும் பர்மியன் சமோசா, டுனா மீனைக் கொண்டு வெங்காயம் சேர்த்து செய்யப்படும் மாலத்தீவு ஸ்பெஷல் சமோசா (பாஜியா), சீனாவின் நூடுல்ஸ் சமோசா, பிலிப்பைன்ஸின் முட்டை சமோசா, ஐரோப்பிய நாடுகளின் பர்கர் சமோசா, கனடாவின் சிக்கன் சமோசா, மசித்த கொண்டைக் கடலையை உள்ளே வைத்திருக்கும் இஸ்ரேல் சமோசா,  அரபு நாடுகளில் இப்ஃதார் உணவில் இடம்பெறும் சமோசா போன்றவை உலகப் புகழ் பெற்றவை. இந்தியாவை எடுத்துக் கொண்டால் எங்கும் பரவலாக கிடைக்கும் பாட்டாணி உருளைக் கிழங்கு வெங்காயம் சேர்ந்த சமோசா. மும்பையின் ஆலு பாவ், டெல்லி கொல்கத்தா சென்னை போன்ற மாநகரில் பச்சை நிற சட்னியுடன் கிடைக்கும் சமோசா சாட், பஞ்சாபின் வெண்ணெய் சேர்த்த ஆலு சமோசா, உ.பி, ம.பியின் சமோசா கச்சோரி, ஆட்டு இறைச்சி கைமாவை வைத்து செய்யப்படும் ஹைதெராபாத் சமோசா (இது சதுர வடிவம் கொண்டது. திருமண விழாக்களில் தவறாமல் பந்தியிலிருக்கும் இது  லுகுமி என அழைக்கப்படுகிறது), தென்னிந்தியாவின் வெங்காய சமோசா (ஒரு காலத்தில் திரையரங்குகளில் மட்டுமே இதனை சுவைக்க முடிந்ததாக இருந்தது) போன்றவை பிரபலமாக இருக்கின்றன. காளான் சமோசா, காலிபிளவர் சமோசா, மீன் சமோசா, இரால் சமோசா, இனிப்பு சமோசா, சாக்லெட் சமோசா, பன்னீர் சமோசா, பாஸ்தா சமோசா, என நாக்கிற்கு ருசியான விதவிதமான சமோசா வகைகள் இருக்கிறது. 

ஒரு சமோசாவில் 200-250 கலோரி அளவுகள் இருக்கிறது. சாமோசாவா நோ... தொடக்கூடாது... நோ என்றால் நோ என்பதுதான் அனைத்து மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. அதற்கு காரணம் மைதா எனும் எமன். அடுத்ததாக உருளைக்கிழங்கு மற்றும் பொறிக்கப்படும் எண்ணெய் என சமோசா தன்னகத்தே கொண்டிருப்பதெல்லாம் உடல்நலத்திற்கு தீங்கானது. சக்கரை வியாதிக்காரர்களும் இரத்த அழுத்த ஆசாமிகளும் சமோசாவை கண்ணால் பார்க்கவே கூடாது. மற்றவர்களுக்கு குறைந்தது செரிமான பிரச்சணைகளையாவது சமோசாக்கள் ஏற்படுத்தும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. Love வோடு சமோசாவை தொடுவதைவிட அLove வோடு எடுத்துக்கொள்வதே சிறந்தது.

உத்திரபிரதேசம் மாநிலத்தின் அலிகரில் 'முகேஷ் கச்சோரி' என்ற சிறிய சமோசா கடை இருக்கிறது. காலை மாலை இரவு என அந்த கடையில் முப்பொழுதும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்க அதனை மோப்பம் பிடித்த வருமான வரித்துறையினர் மறைமுகமாக அக்கடையை சோதனையிட்டனர். அதில் அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. சாதாரணமாகவும் எதார்த்தமாகவும் இருக்கும் அந்த கடையின் ஆண்டு வருமானம் ஒரு கோடியைத் தொடும். முறையாக வரி கட்டாததாலும் GST க்கு உட்படாததாலும் அக்கடையின் உரிமையாளர் முகேஷ் மீது வருமான வரித்துறையினர் வழக்கு போட அவர்களிடம் முகேஷ் கேட்ட கேள்வி இன்னமும் அதிர்ச்சியடைய வைத்தது. அந்த கேள்வி.. 'GSTஎன்றால் என்ன?... ஏதாவது புது மசாலா கம்பேனியா?'... இது ஒருபுறமிருக்க அதே உ.பியில் சென்ற வருடம் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆழும் அமைச்சர்கள் டீயும் சமோசாவும் விழுங்கிய செலவு கணக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மொத்த தொகை 8 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 474 ரூபாய். இதுபோல் தொழில்சாலை வைத்து சமோசா தயாரித்து கோடி புரளுமளவு ஏற்றுமதி செய்பவர்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். 

"Connected by the Indian Ocean”  
“United by the Indian samosa”.

லாக்டவுன் என்ற பொது முடக்க காலத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் நமதருமை பிரதமருக்கு சமோசா வித் மாங்காய் சட்னி செய்து டிவிட்ட, அதற்கு நம்மவர் பதிலுக்கு கவிதையாக (?) டிவிட்டியதுதான் மேற்கண்டது. இவற்றையெல்லாம் வைத்து பார்க்க என்னதான் சமோசா பாலைவனத்தில் பிறந்து ஒட்டகமேறி வளர்ந்தாலும் குடித்தனம் நடத்துவதெல்லாம் இந்தியாவில்தான். ஆகவே யோசிக்காமல், வழக்கம் போல் யாரிடமும் கருத்து கேட்காமல் தீர்மானம் போடலாம். தேசிய சிற்றுண்டி சமோசா.