என் மண்ணே. நீ எனது காதல்.
இந்த வருடத்தின் பிடித்த பத்து பாடல்களை வரிசைபடுத்த தேடியபோது குறைவான எண்ணிக்கையே கிடைத்தது. காரணம் எல்லோருக்கும் தெரிய, அதற்கு பதிலாக இந்த வருடம் அதிகம் முணுமுணுத்த பாடல் ஒன்றினை மட்டும் எழுதலாமே எனத் தோன்றியது. அந்த பாடல் கேசரி திரைப்படத்தில் இடம்பெற்ற 'தேரி மிட்டி' எனத் தொடங்கும் பாடல். என்னது! வேற்று மொழியா?...வேற்று மொழி பாடலா?... ஒழிக... என உடனே தார் டப்பாவை தூக்க வேண்டாம். மேலும் இரயில் மறியல் செய்து ஒவ்வொரு நாளும் சராசரியாக 63 புதிய நபர்கள் வட மாநிலத்திலிருந்து பிழைப்பிற்காக இங்கு வருவதையும் அவர்களில் சிலர் இங்கிருக்கும் மொழியை கற்றுக்கொள்வதையும் தடுக்க வேண்டாம். இசைக்கு மொழியெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. வறுமைக்கும் அதனை அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
அக்ஷைகுமார், பிரிநிதி சோப்ரா நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் கேசரி. 1897 ஆம் ஆண்டு பஷ்தூன் பழங்குடி படையினரை எதிர்த்து பிரிட்டீஷ் படையைச் சேர்ந்த 21 சீக்கியர்கள் போராடிய சாகர்ஹரி போரைப் பற்றி இந்த திரைப்படம் விவரிக்கிறது. இந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இந்த பாடல் ஒரு சில நிமிடங்களே ஒலித்தது. இந்த பாடலுக்கு மனோஜ் முந்தாஷிர் வரிகொடுக்க, ஆர்கோ இசையமைக்க, பி.ப்ராக் என செல்லமாக அழைக்கப்படும் பிரதிக் பச்சன் பாடியிருந்தார். இந்த பாடல் தனது தாய் மண்ணையும் தனது நாட்டையும் நேசிப்பவர்களின் குரலாக இருந்தது. மேலும் தாய் மண்ணிற்காக தனது உயிரை அற்பணிக்கும் ஒவ்வொரு வீரருக்கும் அஞ்சலியாக இருந்தது. அழகான இசை, தேசபக்தியைத் தூண்டும் வரிகள், ஆத்மார்த்தமான குரல் என இந்த பாடல் உணர்வுப்பூர்வமாக பலரை கவர்ந்தது. தனது மண் அதைச் சார்ந்த பண்பாட்டு செருக்கோடு இருப்பவர்களின் இதயங்களை எல்லாம் நிரப்பியது.
என் வாழ்க்கை தங்கியிருந்தாலும்
இல்லாவிட்டாலும்
என்மண்ணே. நீ எனது காதல்
உன் காதல் என் இரத்தத்தில் ஓடுகிறது.
உன் நிறம் ஒருபோதும் மங்காது.
திரைப்படம் வெளிவந்த சில மாதங்களுக்கு பிறகு இந்த பாடலை தனியாக வெளியிட்டிருந்தனர். மேலும் ஆண் குரலாக ஒலித்த இந்த பாடலை நாயாகி பிரிநிதி சோப்ரா தனது சொந்த குரலில் பாடியும் அசத்தியிருந்தார். அவருக்கு பாடவும் தெரியும் என்பது அப்போது உணர, இந்த பாடல் பொது முடக்க காலத்தில் மருத்துவ சேவையாற்றியவர்களுக்கும் காவல்பணியாற்றியவர்களுக்கும் துப்புறவு தொழிலாளர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"சிட்ய நல் ஜெ பாஸ் லடவன், சவ லக் தே ஏக் லடவா தா குரு கோவிந்த் சிங் நம் கஹாவா”
இது, பஞ்சாபி மொழியில் ஒரு சீக்கியர் 1.25 இலட்சம் வீரர்களுக்கு சமமானவர்கள் என்ற அர்த்தத்தை கொண்டது. அதுபோல்
நாம் ஜபோ
கிராத் கர்னி
வாண்ட்கே ஷாக்கோ
என்ற மூன்றும் அவர்களது கொள்கையாக இருக்கிறது. அதாவது தெய்வத்தின் பெயரை தினமும் உச்சரித்தல், நேர்மையாகவும் கண்ணியமாகவும் எல்லா பணிகளையும் செய்தல், ஒருவர் பெற்ற பலன்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் என்பனவாகும். இதனோடு சேர்த்து அன்பு, ஆக்ரோஷம், தாய்நாடு, தனது மண், தனது இனம், தனது பண்பாடு, தனது வீரம், தனது டர்பன் உட்பட சீக்கியர்கள் எப்போதும் தன்னிலை மாறாதவர்கள். இவைகளுக்கு தீங்கு என வருமெனில் களத்தில் இறங்கி போராடவும் உயிர் விடவும் துணிந்தவர்கள். அதனை முன்னிறுத்தி தற்போது கடும் குளிரோடு சேர்ந்து தலைநகரையே அவர்கள் உறைய வைத்திருக்க, இன்றைய சூழ்நிலையில் இந்த பாடல் அவர்களுக்கும் சமர்ப்பணமாக இருக்கும் என நினைக்கிறேன்.