என்ற வள்ளுவனின் வாக்கையும், பெற்றோர்களின் கனவுகளையும் தங்களது எதிர்காலத்தையும் பேக் பேக்கில் சுமந்து செல்லும் குழந்தைகளின் மனநிலை எப்படியிருக்கும். அதைத்தான் இந்த டாகுமெண்டரி தொடர்கள் உணர்த்துகின்றன.
உலகின் மிக உயரமான இடமான நேபாளத்தில் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சமூகத்தின் தொடர்ச்சியாக வெளியுலக தொடர்பற்று இயற்கையோடு இணைந்து வாழும் கம்பூர் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்த குழந்தைகள்,
பனி போர்த்தி நதி உறங்கும் நிலத்தை கடந்து வசந்தகாலத்தின் புத்தாண்டை கொண்டாட தங்கள் இனத்தின் அடையாளமான குதிரையில் புறப்படும் நாடோடிச் சிறுவன் துகுல்தூர் மற்றும் மங்கோலியப் பெண் டெல்கெர்ட்.
இந்திய சீன எல்லையான பதற்றமான லாடாக்கில் பாறைகளுக்கும் உறைந்த பனிகளுக்குமிடையே வருடத்திற்கு இரண்டுமுறை பள்ளியின் விடுதியிலிருந்து தனது சொந்த கிராமத்திற்கு சென்று திரும்பும் இமயமலைச் சிறுவன் 'மோட்டாப்'.
பள்ளிக்கு செல்ல மோட்டார் சைக்கிள் கார் என வாகனங்களுக்கு ஆகும் செலவு அதிகம் என்பதால் வழுக்கும் பாசியையும் தொங்கும் மர வேர்களையும் கொண்ட செங்குத்தான மலையை குறுக்கு வழியாக தேர்ந்தெடுக்கும் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஜம்போங்கா டெல் நோர்டே தீபகற்பத்திலிருக்கும் மடிபாகோவைச் சேர்ந்த ஏபிள் என்பவளும் அவளது சகாக்களும்,
யானையின் துகிக்கை நுனியைப் போல வட அமெரிக்கா கண்டத்தின் நுனியிலிருக்கும் உலகின் மிகவும் ஏழ்மையான நாடான நிகரகுவாவின் கிழக்கு கடற்கரையில் வாழும் சகோதரிகள் ஜூலியா, யூலிசா, மற்றும் கென்யா,
அதோ!..பார்.. அதுதான் ஆர்டிக் என பார்த்தால் பக்கத்தில் தெரியும் அளவிற்கு பனியின் நெருக்கத்தில் இருக்கும் ரஷ்யாவின் மிக குளிர்ந்த பிரததேசமான சைபீரியாவின் கடைகோடி ஓம்ஜாகானை சேர்ந்த அல்ஜோஷா,
ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்குள் நூற்றாண்டுகளாக சிக்கித் தவிக்கும் கொலம்பியாவின் வடக்கே பாஜோ காகா காட்டுப் பகுதியைச் சேர்ந்த கெண்டிஸ் மற்றும் ஜூவான்,
நாகரீகமும் வளர்ச்சியும் கிட்டத்தட்ட முற்றிலும் தடுக்கப்பட, கென்யா மற்றும் தான்சானியா எல்லையில் மாசாய் என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் வாழும் காசியோல் கிராமத்தை சேர்ந்த மொசேகா என்பவளும் அவளது நண்பர்களும்,
காலணியாதிக்கத்திற்கு முன்பிருந்த தங்களது தாய் மொழியான 'புக்கினாவை' அழியாமல் பாதுகாக்கும் யூரோ இனத்தின் இன்றைய தலைமுறையான பெரு நாட்டைச் சேர்ந்த விடல் என்ற சிறுவன் மற்றும் அவனது சகாக்கள்,
ஆண்டிஸ் மலைகள் அமேசான் காடுகளை சந்திக்கும் தென் அமெரிக்காவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் யுங்காஸ் பள்ளத்தாக்கை ஒட்டிய கிராமத்தை சேர்ந்த பொறியாளராக ஆக வேண்டும் என கனவிலிருக்கும் எல்மர், மற்றும் பள்ளத்தாக்கின் மறுபுறமிருக்கும் ஹெலன், மரியலா சகோதரிகள்,
விவசாயம் கால்நடை வளர்ப்பு இவற்றை மட்டுமே கொண்டு வாழும் வட மேற்கு மெக்ஸிகோவின் சியரா மேட்ரே ஆக்ஸிடெண்டலைச் சேர்ந்த ராரமுரி பழங்குடி மக்களில் ஒருவனான லிட்டில் லோரென்சோ, மற்றும் தெரசா, ஏஞ்சலா, பிலோமினா,
தகதகக்கும் வெப்பம் மற்றும் எப்போதும் மூச்சுவிட்டுக் கொண்டேயிருக்கும் எரிமலை இவைகளைக் கொண்ட வடக்கு எத்தியோபியாவின் டானாகில் பாலைவனப் பகுதியின் லூயிட்டா மற்றும் அவளது சகோதரி கதிகா,
பசிபிக் பெருங்கடலின் தீவான உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளைக் கொண்ட தேசமான பப்புவா கினியாவைச் சேர்ந்த ஜூனியர் மற்றும் ரூத்,
என உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழலில் வசிக்கும் சில குழந்தைகள் காடு மலை ஆறு பள்ளத்தாக்கு பாலைவனம் வழியாக, நீச்சல் மலையேற்றம் குதிரை சவாரி படகோட்டுதல் பனிச் சறுக்கு என மிகவும் ஆபத்தான செயல்களை செய்து, விலங்குகள் பூச்சிகள் பாம்புகள் இவற்றிற்கு தப்பித்து, மைனஸ் ஐம்பதிற்கும் குறைவான குளிர் கொட்டும் மழை சுட்டெரிக்கும் வெயில் என மாறும் நிலையற்ற பருவ நிலை மாற்றங்களை எதிர்கொண்டு, இருக்குமிடத்திலிருந்து வெகு தொலைவிலிருக்கும் தங்கள் பள்ளிக்கு எவ்வாறு செல்கிறார்கள் என்பதையே இந்த டாகுமெண்டரி தொடர்கள் காட்டுகிறது. இத்தனைக்கும் அந்த குழந்தைகள் அனைவரும் ஆரம்பக் கல்வியறிவு பெறவே இத்தகைய சவால்களை சந்திப்பது குறிப்பிடத்தக்கது. இந்த டாகுமெண்டரி தொடர் வெறும் பயணம் மட்டுமல்லாது ஆர்வம், போராட்டம், மகிழ்ச்சி, குறிக்கோள் இவற்றை தாங்கிய அந்த குழந்தைகளின் உணர்ச்சிகளையும், அவர்களது அன்றாட வாழ்க்கை முறைகளையும், கலாச்சாரத்தையும், இருப்பிடத்தின் நிலையையும், அவர்களின் பெற்றோர்களின் மனநிலையையும், அவர்கள் பயிழும் பள்ளிகளின் தரத்தையும் கலவையாக விவரிக்கிறது.
The Most Dangerous Ways to School
Country - Germany
Language - German and English
Year - 2013.
ஜெர்மனியை சேர்ந்த Quintus Media என்ற நிறுவனம் மொத்தம் 13 டாகுமெண்டரிகளைக் கொண்ட இந்த தொடரை Planet TV -க்காக தயாரித்திருக்க, உலகில் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கிறதா? என நினைக்கும் அளைவிற்கான காட்சியமைப்புகள் வியக்க வைக்கிறது. அது 'போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்' என்பவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் புதுவித அனுபவத்தை தருகிறது. போர், உள்நாட்டு கலவரங்கள், ஸ்திர தன்மையற்ற ஆட்சி, வறுமை, நோய், அறியாமை, அடிப்படை வசதியின்மை போன்ற காரணங்களால் உலக அளவில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 5 கோடியைத் தாண்டும் என ஆய்வரிக்கை குறிப்பிடுகிறது. அதனோடு கல்வியே குளறுபடியான இந்த வேலையில் குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இவர்களோடு கல்வியிலும் அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கும் இந்த டாகுமெண்டரி தொடர் பாடமாக இருக்கிறது.