ஒட்டகச்சிவிங்கி.


இதுவரை எனது இடம்... அது உனது... என யாதும் ஊரே யாவரும் கேளீரை அழித்துவிட்டு தமக்கு எட்டியவரை கோடுகளை வரைய முற்படும்போது எல்லைகள் ஆரம்பிக்கிறது. பக்கத்து வீடு தொடங்கி பக்கத்து நாடுவரை இந்த எல்லை என்றாலே தொல்லைதான். ஆனால் பறவைகள் விலங்குகள் மனிதனைத் தவிர்த்த மற்ற உயிரினங்களுக்கு எல்லைகள் எதுவும் கிடையாது. உலகின் மிகப்பெரிய தீர்க்க முடியாத எல்லைச் சண்டையை எடுத்துக்கொண்டால் அது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு இடையில் நடப்பதாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின்பு பல நாடுகள் பாவம்யா அந்த இனம்.. என உச்.. மேலும் சில உச்..உச்..கொட்டியதோடு நிறுத்திக்கொள்ள என்ன இருந்தாலும் அவர்கள் எனது சகோதர இனம் என நினைத்து பாலஸ்தீனம் கொஞ்சமாக இடத்தை  கொடுத்தது. பிறகு இஸ்ரேல் மடத்தை பிடிங்கிக் கொண்டதெல்லாம் சென்ற நூற்றாண்டின் சோக வரலாறு. ஐம்பது வருடத்திற்கு முந்தைய உலக வரைபடத்தையும் தற்போது இருக்கும் வரைபடத்தையும் ஒப்பிட்டு பாலஸ்தீன நாடு எங்கிருக்கிறது எனத் தேடினால் உண்மை விளங்கும். இது வெறும் இடப் பிரச்சனை மட்டுமா? அல்லது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் வேறு ஏதேனும் பகை இருக்கிறதா? என தெரிந்துகொள்ள இரண்டு நாடுகளின் எல்லைகளை சுற்ற வேண்டியிருக்கும். இஸ்ரேல் பாலஸ்தீன எல்லைகளை சுற்றுவது அவ்வளவு சுலபமாக இருக்காது. ஏனென்றால் உலகின் மிகவும் பதற்றமான எல்லையும் அதுதான். அந்த எல்லையைத் தாண்டி இரண்டு மனங்கள் இணைந்தால் எப்படியிருக்கும்? அதுதான் இந்த திரைப்படத்தின் அடிநாதம். 

பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் வசிக்கும் கால்நடை மருத்துவரான 'யாசின்' அங்கு மிஞ்சியிருக்கும் ஒரு மிருகக்காட்சி சாலையை பராமரித்து வருகிறார். அவருக்கு 'ஜியாத்' என்ற பத்துவயது நிரம்பிய அவரது மகன் உதவியாக இருக்கிறான். அந்த மிருகக்காட்சி சாலையில் 'பிரௌனி' மற்றும் 'ரீட்டா' என்ற ஒரு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள் இருக்கின்றன. மருத்துவரின் மகன் ஜியாத் அவைகளின் மீது தனி பாசத்தை வைத்திருக்க அவன் படிக்கும் பள்ளியிலும் அவன் வசிக்கும் தெருவிலிருப்பவர்களும் அவனை கிராபி என பட்டப்பெயர் வைத்து அழைக்கின்றனர். இதற்கிடையில் ஒரு நாள் ஒரு பிறந்தநாள் விழாவின் கொண்டாட்டத்தின் போது இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் வான்வழி தாக்குதல் நடத்துகிறது. அந்த தாக்குதலில் மற்றவர்கள் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்தாலும் அதிர்ச்சியில் ஒட்டகச்சிவிங்கிகளில் ஒன்றான பிரௌனி இறந்துவிடுகிறது. ஒட்டகச்சிவிங்கி இனத்தில் தனித்திருப்பது என்பது அபூர்வமானது அதனால் பிழைத்திருக்கும் பெண் ஒட்டகச்சிவிங்கி ரீட்டா சாப்பிடாமல் தன்னை வருத்திக் கொள்கிறது. இதனை உணரும் ஜியாத் ஒட்டகச்சிவிங்கி இறந்த சோகத்தில் தனது தந்தையுடன் கோபம் கொள்கிறான். அது மீண்டும் சாப்பிடத் தொடங்கும் வரை தானும் எதுவும் சாப்பிடப் போவதில்லை என கடவுளிடம் சத்தியம் செய்கிறான். மகனை சமாதானப்படுத்த அவனது தந்தை இஸ்ரேலில் இருக்கும் வனவிலங்கு பூங்காவிலிருந்து ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கியை கடத்திக் கொண்டுவர முடிவு செய்கிறார். அதற்கென இஸ்ரேலில் இருக்கும் தனது சக மருத்துவ தொழில் நண்பன் யோஹாவ் என்பவரை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார். ஆனால் பதட்டம் நிறைந்த எல்லையை கடந்து அதனை கொண்டுவருவது சவாலாக இருக்க, தனது தோழியும் பிரெஞ்சு பத்திரிக்கை புகைப்பட கலைஞருமான லாராவின் உதவியை நாடுகிறார். லாராவும் மருத்துவரின் மகன் மீது உள்ள அன்பால் இத்திட்டத்தில் இணைகிறாள். மருத்துவர் அவரது மகன் மற்றும் லாரா மூவரும் புறப்பட்டு சோதனைச்சாவடியை கடந்து இஸ்ரேல் செல்கின்றர். அங்கு தனது நண்பரை சந்திக்கும் மருத்துவர் ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கியை பெறுகிறார். அதனை பாலஸ்தீனத்திற்கு குறுக்கு வழியில் மூவரும் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வரும் வழியில் தடைகளை சந்திக்க இஸ்ரேலின் ஆண் ஒட்டகச்சிவிங்கி பாலஸ்தீனத்தின் பெண் ஒட்டகச்சிவிங்கியோடு இணைந்ததா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை. 
 

 
மனிதனின் குணம் சற்று பிசங்கும் போது விலங்கின் குணத்தோடு ஒப்பிடுகிறோம். ஆனால் விலங்கின் குணம் மனிதனை விட எப்போதும் மேம்பட்டதாகவே இருக்கிறது. ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பசு ஒன்று கன்றை ஈன காத்திருக்க கடவுளிடம் பதற்றமாக பிரார்த்தனை செய்வதும், அது பிரசவித்தவுடன் அகம் மகிழ்வதும், தன்னை கிராபி என கேலி செய்பவர்களிடம் சீறுவதும், தந்தையுடனும் இஸ்ரேல் இராணுவத்துடனும் கோபம் கொள்வதும், தன் தந்தை தோழியான லாராவுடன் இருப்பதைக் கண்டு காழ்ப்புணர்ச்சி கொள்வதும், பிறகு தந்தையுடன் கொஞ்சுவதும், கடைசி காட்சியிலும் சிறுவன் ஜியாத்தாக நடித்த நீல நிற கண்களைக் கொண்ட 'அஹமது பயத்ரா' இந்த திரைப்படத்தில் முதலாவதாக மனதை கவர்கிறான். கலவர பூமியே ஆனாலும் 'புன்னகையே பேராயுதம்' என தன் கடமையிலும் தனது மகனுடனும் பல சோதனைகளிலும் அந்த புன்னகை மாறாமல் இருக்கும் கால்நடை மருத்துவராக நடித்த பிரபல பாலஸ்தீன நடிகர் 'சலே பக்ரி' இரண்டாவதாக மனதை கவர்கிறார். தைரியமான வேலை இருந்தாலும் துப்பாக்கியை பிடித்தவுடன் பதற்றப்படுவதும், பல சோதனைகளில் தோழியாக கூடவே இருப்பதுவும் என பத்திரிக்கையாளர் லாராவாக நடித்த 'கிளர்மண்ட் டோனெர்ரே' மூன்றாவதாக மனதை கவர்கிறார். இராணுவ வீரர்களின் முன்பு வாழைப்பழத்தையும் கடலையையும் தூக்கியெறியும் அந்த தள்ளுவண்டி வியாபாரி, பாதுகாப்பான நிம்மதியான வாழ்க்கையை இஸ்ரேலில் வாழும் 'யோஹாவ் அலோன்' மற்றும் ஆண் பெண் ஒட்டகச்சிவிங்கிகளும் மனதை கவர்கிறது.

  • Girafada
  • Diercted by - Rani Massalha
  • Written by - Xavier Nemo
  • Music by - Benjamin Grospiron
  • Cinematography - Manuel Teran 
  • Country - Palestine
  • Language -  Hebrew, Arabic
  • Year - 2014. 

இஸ்ரேல் தாக்குதலின் அதிர்ச்சியில் இறந்து போகும் ஒட்டகச்சிவிங்கியின் மனநிலையை இயக்குனர் 'ரனி மாஷல்லா' பாலஸ்தீன மக்களின் மனதோடு முடிச்சு போடுகிறார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே கட்டப்படும் அந்த பெரிய சுவர், நகரத்து பின்னணியில் ஆடும் ஊஞ்சல், இஸ்ரேலுக்கு எதிராக கிறுக்கப்பட்ட சுவர் செய்திகள், ஆங்காங்கே தென்படும் பாலஸ்தீன கொடிகள், கொடியின் வண்ணங்கள், தூரத்தில் தனித்து தெரியும் மசூதி, சிதிலமடைந்த கட்டங்கள் என பல மறைமுக குறியீடுகளை இத்திரைப்படம் தாங்கியிருக்கிறது. ஆழ்ந்து யோசிக்க இந்த திரைப்படத்தின் முக்கியஸ்தரான ஒட்டகச்சிவிங்கிகளே ஏதோ! குறியீடாகத் தோன்றுகிறது. இந்த திரைப்படம் கலவரமான பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் முழுவதும் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒலி ஒளி சார்ந்த தொழில்நுட்பங்களும் கச்சிதமாக இருக்க அது அமைதியான மனநிறைவைத் தருகிறது. மனித உயிர்களே மலிதாக இருக்கும்போது மற்ற உயிரினங்களுக்கு மதிப்பு என்பதே கிடையாது. பாலஸ்தீனப் பகுதியில் அது நிகழ்ந்து கொண்டிருக்க இயக்குனர் ரனி மாஷல்லா பாலஸ்தீன விடுதலைக்காக போராடுபவர்களுக்கு இந்த திரைப்படத்தை சமர்ப்பித்திருப்பது சிறு விளைவையாவது நிச்சையம் ஏற்படுத்தக்கூடும்.