பாலைவனத்தின் இசை.

வாடி ஃபரன் என்பது எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலிருக்கும் பாலைவன நதி பள்ளத்தாக்கு ஆகும். இந்த பள்ளத்தாக்கு குளிர்காலத்தில் நீர் நிறைந்து பசுமையாக காட்சியளிக்கும். அதுவே கோடைக்காலத்தில் வறண்டு பாலை நிலத்திற்கு உண்டான தன்மைக்கு மாறிவிடும். அதன் வாழ்க்கை இந்த இரண்டு பக்கங்களை கொண்டது. மேலும் இந்த பள்ளத்தாக்கு நதியானது கலவரமான மூன்று நாடுகளின் எல்லைகளை எந்தவித அனுமதியின்றி கடக்கிறது. அதற்கு முன்பு நாமெல்லாம் வெறும் தூசு என்ற அளவிற்குதான் என உணர்ந்து, இசையும் அப்படித்தான் அதற்கு எல்லைகளே கிடையாது என இஸ்ரேலைச் சேர்ந்த இந்த மூவரும் தங்கள் குழுவிற்கு அந்த பள்ளத்தாக்கு நதியின் பெயரையே ஃபரன் (Faran) என வைத்திருக்கின்றனர்.
  
ராய் ஸ்மைலா, ரிஃபேல் பென் ஜிக்ரி, காட் திதர் என்ற மூன்று இஸ்ரேலிய கலைஞர்கள் இணைந்து 2009 ஆம் ஆண்டு உருவாக்கியதே ஃபரன் இசைக்குழுவாகும். இவர்கள் மூவரும் கமஞ்சே, பெரிய தாளம், அவுட் போன்ற பழமையான மேற்கத்திய பாரம்பரிய இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்கள்.  

கமஞ்சே (ராய் ஸ்மைலா).

வயலின், பைசண்டைன் வகையைச் சேர்ந்த கமஞ்சே என்பது பண்டைய பாரசீகத்தின் ஒரு இசைக் கருவியாகும். தற்போது இது துருக்கி, அசர்பைஜான், ஆர்மீனியா பகுதிகளில் இசைக்கப்படுகிறது. கண்ணனே கதி, அதுவே விதியென இருந்த நார்த் இன்டியன் ஆண்டாளான மீரா பாய் கையில் வைத்திருப்பாரே தம்புரா அதுபோலிருக்கும் கருவியில் வில் போன்ற அமைப்பைக் கொண்டு இது இசைக்கப்படுகிறது. கமன் சே என்ற பாரசீக வார்த்தைக்கு வளைந்த வில் என்று பொருள். 

பெரிய தாளம் (ரிஃபேல் பென் ஜிக்ரி).

பாரசீகத்தைச் சேர்ந்த பழமையான தோல் கருவிதான் இந்த தாளம். ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட இது நமது தப்பை ஒத்தது (பெரிய தப்பு). நாட்டுப்புற அரேபிய இசைகளில் இதனை உணரலாம். தாளம் ஆன்மாவோடு ஒத்ததென்ற கருத்து உலகமெங்கும் இருக்கிறது.

அவுட் (காட் திதர்).

கி.மு 3 ஆம் நூற்றாண்டு ஆதாரமெல்லாம் இந்த இசைக்கருவிக்கு இருக்கிறது. இது லூட் என சொல்லப்படுகிற இசைக் கருவியிலிருந்து பிறந்தது. கிடாரை கையில் வைத்துக்கொண்டு மேடையில் பாடும் என்பதுகளின் இந்திய சினிமா நாயகர்களைப் போன்று மிகுந்த ஒப்பனையில் கையில் லூட் சகிதம் இருக்கும் பெண்களின் ஓவியம் எகிப்தில் இருக்கிறது. வீணை, கிடார் இவற்றிற்கெல்லாம் எள்ளுத் தாத்தா இந்த அவுட். அரபு, துருக்கி மற்றும் யூத மரபுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாம் ஐரோப்பாவில் பரவ லா அவுட் என அழைக்கப்படுகிறது. அரபு மொழியில் வுட் என்றால் மரம். இது பார்ப்பதற்கு பேரிக்காய் வடிவில் இருக்கும் மரத்தால் செய்யப்பட்ட கம்பிக் கருவியாகும். 

இந்த மூன்று இசைக் கருவிகளைக் கொண்டு இவர்கள் மூவரும் அற்புதமான இசையை அளித்து வருகின்றனர். கார்கோவின் யூத கலாச்சார விழா, ஜெருசலேமின் புனித இசை விழா, உலக இசை விழா என பல விழாக்களில் கலந்துகொண்டு சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் இந்தியாவில் ராஜஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தனர். 

இவர்களின் இசை ஏதோ மந்திரித்ததைப் போல மாய ஒலிகளைக் கொண்டிருக்கிறது. அது சூபி பாடல்களைப் போல ஆன்மீகத் தேடலுக்கு வழிவகுக்கிறது. வெம்மை நிறந்த பாலைவனம் தொடங்கி பச்சை பசேல் மலைத் தொடர்கள் கடந்து நகரத்தின் பரபரப்பான இடங்கள் வரை அது வியாபிக்கிறது. வெயில், குளிர், பகல், இரவென காலநிலைகளையும் கடக்கிறது. இயற்கையின் இசை என்றே அவற்றைச் சொல்லலாம். அதனை கேட்கும் நம்மை தொலை தூரத்திற்கு அல்லது அந்த பாலைவன பள்ளத்தாக்கிற்கு அலாவுதீன் பறக்கும் கம்பளத்தில் அழைத்துச் செல்வதுபோல் இருக்கிறது. பாரம்பரியத்திற்கும் பழங்கால வாழ்க்கை முறைக்கும் அது கைப்பிடித்து... இல்லை... இல்லை... காதை பிடித்து கூட்டிச் செல்கிறது. ஏதோவொரு தேடலில் இந்த ஃபரன் இசைக்குழுவின் பாலைவன இசை அடியேனுக்கு கிடைத்து அதில் மயங்க, நீங்களும் செவிகொடுத்து பாருங்களேன். கொஞ்சம் தனிமை இருந்தால் இன்னும் சிறப்பு.