பஜ்ஜி மிளகாயும் ஒரு பேச்சுலர் ரெசிபியும் .

பொருட்காட்சி என்றதுமே நமக்கு சட்டென நினைவுக்கு வருபவை ராட்டினமும் பெரிய அப்பளமும் கண்முன்னே சுற்றப்படும் பஞ்சு மிட்டாயும் ஆகும். இதனையும் தவிர்த்து மிளகாய் பஜ்ஜியும் பொருட்காட்சியின் சிறப்பம்சமாகும். இது நிஜமா அல்லது பிளாஸ்டிக் பொம்மையா! என்ற அளவிற்கு வெளிர் பச்சை நிறத்தில் பெரிய பெரிய மிளகாய்கள் தொங்கிக் கொண்டிருக்கும் கடையில் அதனை வாங்கி சாப்பிட்ட பால்ய கால அனுபவம் பலருக்கும் இருக்கும். மேலும் பெரிய மிளகாய் சாப்பிட்டதில் பெரிய கௌரவமும் இருந்திருக்கும் என நினைக்கிறேன். அத்தகைய பெரிய மிளகாயைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நீண்ட நாட்களாக இந்த பெரிய மிளகாய் பஜ்ஜி செய்வதற்கு மட்டுமே என நினைத்துவர பல இடங்களில் நாக்கை நீட்டிய பின்புதான் அதனை வைத்து செய்யப்படும் பதார்த்தங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. அவற்றையும் சேர்த்து ருசிக்கலாம் வாருங்கள். 

Banana Pepper அல்லது Yellow Wax Pepper அல்லது Banana Chili அல்லது Sweet Frying Pepper இவைதான் இதன் ஆங்கிலப் பெயர்கள். வெளிர் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கு வாழைப்பழம் போல் இருப்பதால் Banana Pepper என்ற பொதுப் பெயரில் இருக்கிறது. ஹிந்தியில் கேலா மிர்ச். சில இடங்களில் வழக்கத்திற்கு கறி மிளகாய், ஊட்டி மிளகாய் என சொல்வதுண்டு. நமக்கு நன்கு தெரிந்தது பஜ்ஜி மிளகாய் அதனால் அப்படியே வைத்துக் கொள்வோம். 

இது Chilli என்ற மிளகாய் குடும்பத்தையும் Capsigum Annuum என்ற பேரினத்தையும் சேர்ந்தது. கேப்சிகம் பேரினத்திற்கும் மனிதனுக்கு உள்ள உறவு கி.மு 7500 வருட பழமையானது. அதன் குடும்பமான மிளகாயின் வரலாற்றை தெரிந்துகொள்ள 6000 வருடம் பின்நோக்கி மெக்ஸிகோ பக்கம் சென்று பிறகு கொலம்பஸூடன் கப்பலில் ஏறி ஐரோப்பா வந்து போர்த்துகீசியரின் புண்ணியத்தில் இந்தியா திரும்ப வேண்டும். அதுபோல மிளகாய் குடும்பத்தில் இருப்பவர்களைப் பற்றி ஒவ்வொருவராய் தெரிந்து கொள்ளவும் பல வருடங்கள் ஆகும். (பஜ்ஜி மிளகாயில் மட்டுமே 51 வகை இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்). ஆகையால் பஜ்ஜி மிளகாய்க்கு மட்டும் வருவோம். இது பிறந்தது சென்ற நூற்றாண்டில்தான். இதன் தாயகம் ஹங்கேரி. 1932 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ளூர் தோட்டக் காய்கறியாக அறிமுகப் படுத்தப்பட்டது. 1940 வாக்கில் இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு (சுயமரியாதை திருமணம்தான்) ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டது. உலக சந்தைகளில் இனிப்பு மிளகாய் என 1980 களில் பிரபலமானது. இந்தியாவிற்குள் நுழைந்து நம் பார்வையில் விழுந்ததெல்லாம் முன்பே பார்த்த பொருட்காட்சி பஜ்ஜி கடையில்தான். 

சங்ககாலத்தில் தமிழர்கள் காரத்திற்கு மிளகை பயன்படுத்தி வந்தனர்.... *கருங்கொடி மிளகின் காய்ந்துணர்ப் பசுங்கறி*.... 
மிளகாய் குடும்பமே பாரினர்ஸ் என்பதால் எட்டுத்தொகை பத்துப்பாட்டில் அதனை தேடுவது சிரமம்தான். காந்தாரி மிளகாய் என்று ஒன்று இருக்கிறது. அது நம்ம ஊர்தான் பா... என சொல்பவர்கள் இருக்கிறார்கள். 

இருப்பதிலேயே சமத்து மிளகாய் இதுதான். மிளகாயின் காரத்தை SHU என்ற அலகால் அளவிடுகின்றனர். அதன்படி இதன் மதிப்பு 0 - 500 SHU என மிகக் குறைவானதுதான். பஜ்ஜி மிளகாய்க்கு பெப்பரோன்சினி (Pepperoncini) மற்றும் ஹங்கேரியன் வேக்ஸ் மிளகாய் (Hungarian Wax Pepper) என்ற இரண்டு பங்காளிகள் இருக்கின்றனர். பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தெரியும் இவர்கள் கொஞ்சம் காரசாரமானவர்கள். வாங்குபவர்கள் யாராக இருக்கும்?.. என குழப்பமடைந்தாலும் விரும்புவது பஜ்ஜி மிளகாயைத்தான்.

❗சுகோவில் அளவுகோல் (Scoville Scale) என்பது மிளகு, மிளகாய் போன்ற மசாலா பொருட்களின் கார சுவையை அதாவது கார வெப்பத்தை அளவிட உதவும் அளவீட்டு முறையாகும். இதனை SHU (Scoville Heat Unit) என குறிப்பிடுகின்றனர். அமெரிக்க மருந்தாளர் வில்பர் சுகோவில் (Wilbur Scoville) என்பவர் இதனை உருவாக்கினார்❗ 

வெப்பமண்டல இடங்களில் சிறிய இலைகளுடன் 2-3 அடி உயரம் கொண்ட செடியில் சுமார் 70 காய்கள் காய்த்து இது வளர்கிறது. ஹங்கேரி இதன் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்க அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா இருக்கிறது. இந்தியாவில் கர்நாடகாவிலும் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி, மாயார், வாழைத்தோட்டம்,  கூக்கல்துரை போன்ற ஊர்களிலும் கொடைக்கானல் மற்றும் சிவகங்கை பகுதிகளிலும் பெருவாரியாக பயிரிடப்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரை அமெரிக்க பாணியில் எல்லா ஊர்களிலும் வீட்டுச் செடியாக இதனை வளர்க்கலாம். 

பஜ்ஜி மிளகாய் 92% நீரையும் 5% கார்போ ஹைட்டிரேட்டையும் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் புரதத்தையும் கொண்டது. இது வைட்டமின் சி யின் சிறந்த மூலமாகும். இது ஒரு ஆண்டி ஆக்சிடன்ட். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கொலோஜன் தயாரிக்கவும் உதவுகிறது. இதில் மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு தாதுக்களும் தயமின், ரிபோபுளோவின், போலேட், நியாசின் போன்ற விட்டமின்களும் அடங்கியிருக்கிறது. பஜ்ஜி மிளகாய் செரிமானத்திற்கும் ஆரம்பகட்ட சளித் தொல்லைகளுக்கும் சிறந்தது. இரத்த அழுத்தத்தை குறைத்து நேர்மறை எண்ணத்தை தோற்றுவிக்கிறது. 

❗Simply It's a natural mood booster.❗

பஜ்ஜி மிளகாயை பச்சையாக சாலடுகளுக்கு பயன்படுத்தலாம். ஹாட் டாக், பீஸா, சாண்ட்விச்சுகளை அழகு படுத்தலாம். சால்சாவில் கலக்கலாம். கோழி பன்றி இறைச்சி வறுவலுடன் சேர்க்கலாம். முட்டைகோஸ் வெங்காயம் பாலாடைக் கட்டிகளோடு சேர்த்து சமைக்கலாம். ஊருகாய் போடலாம். ஐஸ்கிரீம் தயாரிப்பிலும் இதன் பங்கு இருக்கிறது. 
 
பஜ்ஜி மிளகாயை இரண்டாக பிளந்து அதிலிருக்கும் விதைகளை நீக்கி, பூண்டு வெங்காயம் தக்காளி சேர்த்த மசாலாவுடன் பாலாடைக்கட்டி துருவலை அதனூள் நுழைத்து செய்யப்படும் Stuffed banna pepper என்ற ஹங்கேரியன் பதார்த்தம் உலகப் புகழ் பெற்றது. அதில் உள்ளே வைப்பதைப் பொறுத்து ஏகப்பட்ட வகைகள் இருக்கிறது. உருளைக் கிழங்கு வறுவலை அதில் நுழைத்து பல்குத்தும் குச்சியைக் கொண்டு இணைத்து பார்வா மிர்ச்சி என்ற பெயரில் டெல்லி மும்பை கல்கத்தா வங்க தேசங்களின் சில பகுதிகளில்  சாலையோர உணவாக விற்பனை செய்யப்படுகிறது. வாழ்வின் ஒருமுறையாவது சுவைத்துப் பாருங்கள் எனதான் அதை சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து செர்பியாவின் கிரில்டு மிளகாயும் (ஒருமுறை சென்னையின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரால் கிரேவியை துணைக்கு தொட்டு சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது), பீன்ஸ் கொத்தவரை போல கடுகு மஞ்சள் கொஞ்சம் தயிர் சேர்த்து செய்யப்படும் தென்னிந்திய கூட்டு மற்றும் மிளகாய் மோர் குழம்பு, பிரட் தூள் முட்டை மிளகாய்த்தூள் கலந்து அரைத்த மாவில் செய்யப்படும் வட இந்திய பஜ்ஜி, இலங்கையின் கறிமிளகாய் கிரேவி போன்றவையும் பஜ்ஜி மிளகாயைக் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்களில் உலகப் புகழ் பெற்றவை. இத்தாலியின் சாஸும் வினிகர் ஊருகாயும் இதில் அடங்கும். 

கடைசியாக சமையலுக்கு வருவோம். ஒரு வாணலியில் சிறிதளவு .... அதற்கு முன் தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். 

பஜ்ஜி மிளகாய் - 5 
பெரிய வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் பால் - 250 மி.லி
புளி கரைசல் - 50 மி.லி
பூண்டு - 6 பல்
மிளகாய் மல்லி தூள் - 2  டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிளை - சிறிதளவு
உப்பு - தே. அ
சமையல் எண்ணெய் - தே.அ

பஜ்ஜி மிளகாயை நன்கு கழுவி குறுக்கே வகுந்து வைக்க வேண்டும். பெரிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கியும், பூண்டு பல், கடுகு, கறிவேப்பிலையை தனியே எடுத்து வைக்க வேண்டும். அதுபோல் மிளகாய் மல்லித்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு இவற்றை தனியே எடுத்து வைக்க வேண்டும். தேங்காய் பால் பிழிந்தும், புளி கரைசலையும் தயாராக வைத்திருக்க வேண்டும். 

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் பஜ்ஜி மிளகாயை மூன்று அல்லது நான்கு நிமிடம் அதன் தோல் சுறுங்கும் அளவு முதலில் வறுக்க வேண்டும். பிறகு வெங்காயம் பூண்டு கடுகு கறிவேப்பிலை கூட்டணியை அதனுடன் கலந்து அதே மிதமான சூட்டில் கிளறிவிட வேண்டும்.  மிளகாய் மல்லி தூள் மஞ்சள் உப்பு கூட்டணியை சேர்க்க மறந்தால் ருசியியல் என்னாவது அதனால் அதனையும் சேர்த்து அதே சூட்டில் கிளற வேண்டும். இறுதியாக புளி கரைசலையும் அதற்கு பின்பு தேங்காய்பாலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி செமி கிரேவியாக ஆக்கினால் சுவையான ஸ்பைசியான பஜ்ஜி மிளகாய் கிரேவி ரெடி. காரம் வேண்டுவோர் இன்னும் ஒரு டீஸ்பூன் மிளகாய் மல்லித் தூளுடன் கரம் சேர்க்கலாம். 

வழக்கமாக முட்டையுடன் வெங்காயம் அல்லது முட்டைகோஸ், பச்சை மிளகாய், மிளகு தூள் சேர்த்து ஆம்லெட் போடுவோம். அதற்கு பதிலாக பஜ்ஜி மிளகாயை மட்டும் பொடியாக நறுக்கி அதனில் ஆம்லெட் போட்டு பாருங்களேன். அண்ணே!.. இதுல ஒன்னு எடுத்துக்கவா?.. என சாலையோர பஜ்ஜி கடையில் தொங்கிய பெரிய மிளகாயை கொண்டுவந்து அடியேன் கண்டுபிடித்த பேச்சுலர் ரெசிபி இது. பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.