நிதானிக்க வைத்ததைத் தவிர.


 
 


 
என்னங்க... 
என்னோட பழைய பிரண்ட் ராஜியை
ரொம்ப நாளைக்குப் பிறகு 
இப்பதான் பார்த்தேன்
நீங்களும் பேசுறீங்களா?.
மடப்புரம் சித்தி வந்திருக்காடா 
உன்ன கேட்டுக்கிட்டே இருக்கா
இரு அவகிட்ட கொடுக்கிறேன்.
மாமா மூஞ்சி 
எப்படியிருக்கு காட்டுங்க
ஊ ...வ்வூ...
அம்மும்மா இப்படித்தாண்ணே
அடிக்கடி செய்யிரா.
இது இனியன் வரைஞ்ச டிராயிங். 
இது பூர்ணிமா செஞ்ச 
ஓரிகாமி கொக்கு.
மச்சான்... 
நம்ம காலேஜ் வாட்சப் குருப்ல 
சீதாபழம் மாரிமுத்துவும்
சேர்ந்திருக்கான்டா. 
சார்... 
நான் நாராயணன் 
என்ன நியாபகம் இருக்கா?
ஜனசாகாப்தியில ஒரு தடவ 
டிராவல் பண்ணுணோமே.
ராஜியும்
மடப்புரம் சித்தியும்
அம்மும்மாவும்
இணியனும் பூர்ணிமாவும்
சீதாபழம் மாரிமுத்துவும்
தாமதமாக நினைவுக்குள் வந்த
நாராயணனும்
பெரிதாக
ஒன்றும் செய்துவிடவில்லை
பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த
ஒரு நாளின் 
ஒருசில நிமிடங்களை நிறுத்தி 
நிதானிக்க வைத்ததைத் தவிர.