ஒரு போராளியின் தாய்மை உணர்வு.

எதிரியை வெறுக்கும் யாரும் கொரில்லாவாகலாம். வெறுப்பு எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு. 

ஒரு சிறிய போராட்ட குழு எதிர்பாராத தன்மையுடன் திடீர் தாக்குதல் நடத்தி எதிரியை நிலைகொள்ளச் செய்தல் கொரில்லா போர் முறையாகும். சேகுவேராவின் பார்வையில் சொல்ல வேண்டுமானால்  பெரும்பான்மையினரால் ஆதரவளிக்கப்படும் ஆனால் சிறிதளவே ஆயுதபலம் கொண்ட தரப்பினர் தங்கள் பாதுகாப்பிற்காக அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் போராகும்". கொரில்லா தாக்குதல் என்பது ஒரு சிறிய போர். இது கி.மு.3100 முன்பு மொசபடோமியாவில் பழங்குடி மக்களுக்கிடையே நடந்ததாக கருதப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இந்த பெயர் புழக்கத்தில் வந்தது. ஸ்பானிய மொழியில் இதற்கு குடிப்போர் என்று அர்த்தம். தேசியவாதம், தாராளவாதம், சோசலிசம் மற்றும் மத அடிப்படைவாதம் போன்ற கொள்கைகளை சார்ந்தோ எதிர்த்தோ கொரில்லா போர்கள் நடைபெற்றிருக்கின்றன. ஸ்பெயினில் நெப்போலியனுக்கு எதிராக, கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, வியட்னாமில் அமெரிக்காவிற்கு எதிராக, முஜாகிதீன்களின் சோவியத் யூனியனுக்கு எதிராக, மாவோவின் செம்படை, சோவியத்தின் செஞ்சேனை, தமிழீழ விடுதலைப்புலிகள் என உலகம் பல கொரில்லா போர்களின் வரலாற்றை கண்டிருக்கிறது. 

எதிரி முன்னேறுகிறான், நாம் பின்வாங்குகிறோம்; எதிரி தங்குகிறான், நாம் துன்புறுத்துகிறோம்; எதிரி களைப்படைகிறான், நாம் தாக்குகிறோம்; எதிரி பின்வாங்குகிறான், நாம் துரத்துகிறோம் - இது மாவோவின் கொரில்லா யுத்த முழக்கம்.❗ 

இத்தகையை போரில் ஈடுபடும் ஆண்கள் கொரில்லாக்கள் என அழைக்கப்பட்டனர். பெண்கள் கொரில்லிராக்கள் என அழைக்கப்பட்டனர். பொதுவாக கொரில்லாக்கள். தனிமனிதனின் உரிமைகள் உரிமையாக இல்லாத பச்சத்தில் போராட்டங்களும் கிளர்ச்சிகளும் யுத்தமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதை வைத்து ஒருபக்கம் வியாபாரமும் நடந்து கொண்டிருக்கும். ஆண் பெண் வயது வித்தியாசம் பாராது கொரில்லாக்களும் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். அவ்வாறு ஒரு நாட்டின் அரசிற்கு எதிராக செயல்படும் கொரில்லா இயக்கத்தை சேர்ந்த ஒரு பெண் போராளியின் தாய்மை கலந்த உணர்வை அக்குழுவின் சாதக பாதக நிலையோடு இந்த திரைப்படம் விவரிக்கிறது. 

கொலம்பியாவின் காடுகளில் செயல்படும் ஒரு கொரில்லா குழுவில் 13 வயது நிரம்பிய பெண் மரியா என்ற போராளியும் இருக்கிறாள். அந்த குழுவின் தளபதிகளில் ஒருவனக்கு குழந்தை பிறக்கிறது. அக்குழந்தையை போர் நிகழும் சாத்தியமற்ற சூழ்நிலையில் காட்டிலிருந்து பாதுகாப்பாக நகரத்திற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மரியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் தன் குழுவிலிருக்கும் சகப் போராளி ஒருவனான மொரிசியோ என்பவனிடம் காதல்வயப்பட்ட அவள் நான்கு மாத கர்பிணி என தெரியவருகிறது. கருவை கலைத்துவிட அவளது காதலன் நிர்பந்திக்க மரியா மறுத்துவிடுகிறாள். அதனை தனது குழுவிற்கு தெரியாமல் மறைத்து தனக்கு கொடுத்த வேலையை செய்யத் துணிகிறாள். ஆயுதங்கள் உட்பட தனது தளவாடங்கள் நிரம்பிய ஒரு பையை முதுகில் மாட்டிக்கொண்டும், தளபதியின் குழந்தையை தன் வயிற்றிற்கு மேல் கட்டிக்கொண்டும், தனக்கு சொந்தமான சிசுவை வயிற்றிற்குள் சுமந்துகொண்டும் ஒரு சிலரோடு அடர்ந்த காட்டுவழியிலும் அபாயகரமான மலையேற்றத்திலும் நகரத்தை நோக்கி அவள் பயணத்தை தொடங்குகிறாள். எதிரிகளின் தீவிர கண்காணிப்பும் ஒருபுறமிருக்க, குழந்தை பாலுக்காக அழுதால் கூட சிக்கிக்கொள்வோம் என்ற நிலையில் அவள் நகரத்தை அடைந்தாளா? .. தனக்கு கொடுத்த போராளி வேலையை திறன்பட முடித்தாளா?... அவள் வழியில் சந்தித்த இன்னல்கள் என்ன?... என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.
 

 
குள்ளமான உருவம், குழந்தைத்தனம் மாறாத கொஞ்சம் சோகம் கலந்த முகம், முதுகில் மாட்டியிருக்கும் பை மற்றும் குழந்தையுடன் இருக்கும் மரியாவைச் சுற்றியே (கரேன் டோரஸ்) கேமரா சுழல்கிறது. அடர்ந்த காடு, அந்த காட்டின் அமைதி, அந்த அமைதியுடன் ஒரு பயணம், பேசிக்கொள்ள நேரமும் தேவையும் இல்லாத அபாயகரமான தருணம் ஆதலால் மரியாவின் உணர்ச்சிகளே பெரும்பான்மையான காட்சிகளாக இருக்கிறது. மரியாவுடன் துணைக்கு வரும் சக போராளி பைரன் (ஆண்டர்சன் கோம்ஸ்) மற்றும் சிறுவன் யூல்ட்டர் (எரிக் ரூயிஸ். இன்னமும் மனதில் நிற்கிறான், மன்னிக்கவும் பதுங்கியிருக்கிறான்). அந்த குழந்தை இவர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது. மனதிற்கு அழுத்தம் கொடுக்கும் கதைக்களத்தில் காமிலே சனாப்ரியாவின் பியானோவும், காடும் மலையும் நிழலும் இருளும் சார்ந்த செர்ஜியோ இவான் காஸ்டானோவின் ஒளிப்பதிவும் சற்று ஆறுதல் அளிக்கிறது.

Alies Maria
Diercted by - Jose Luis Rugeles Gracia
Written by - Diego Vivanco
Music by - Camilo Sanabria
Cinematography - Sergio Ivan Castano 
Country - Colombia
Language - Spanish 
Year - 2015. 

இது ஒரு கொரில்லா குழுவின் கதைதான் என்றாலும் அந்த குழுவிலிருப்பவர்களின் எண்ணங்கள், உணர்ச்சிகள், ஒழுங்கீனமற்ற செயல்களை இந்த திரைப்படம் அலசுகிறது. "நாங்கள் காட்டை குழந்தைகளைக் கொண்டு நிரப்பப் போவதில்லை" என திரைப்படத்தின் ஆரம்பத்தில் மருத்துவர் ஒருவர் சொல்ல, போராளிகள் என்ற பெயரில் சிறுவர் சிறுமிகள் இருப்பதும் (அவர்கள் அங்கேயே பிறந்தார்களா? அல்லது கட்டாயப்படுத்தப்பட்டு கொண்டு வரப்பட்டார்களா என்பது கேள்விக்குறிதான். ஆயிரம் காரணம் சொன்னாலும் எந்த குழந்தையும் வாழ்வதற்காக ஆயுதங்களை தானே தூக்குவதில்லை) அவர்களுக்கு பயிற்சியளிப்பதும், பெண் குழந்தைகள் என்றால் உடலுறவு செயல்வரை சொல்வதும், கருக்கலைப்பும் என முரண்பாடுகளையும் இந்த திரைப்படம் ஆவணமாக தாங்கியிருக்கிறது. அதைவிட தனக்குள்ளும் ஒரு உயிர் இருப்பதை பொருட்படுத்தாது, அதன் எதிர்காலம் எத்தகையது எனத் தெரியாது ஒரு குழந்தையின் உயிருக்காக போராடும் ஒரு போராளியின் தாய்மை உணர்வை இந்த மரியா என அழைக்கப்படுபவள் அழகாக உணர்த்துகிறாள்.