ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை.
வாத்தியார் (சுஜாதா) ஸ்டைலில் வித்தியாசமாக ஒரு புத்தகத்தை லயித்து வாசித்து வெகுநாட்களாயிற்று. அதுபோல் ஒரு புத்தகத்தை முடித்து அதனை செல்லம் கொஞ்சியும் நாளாயிற்று. ஒரு புத்தகத்தை பிரிப்பது என்பது காதலியை சந்திப்பதைப் போன்றது. அந்த சந்திப்பில் சுவாரசியம் இருக்கலாம், இல்லாமல் போகலாம், வழக்கம் போலத்தானே என சலிப்பு ஏற்படலாம். செல்லம் கொஞ்சுவதெல்லாம் உச்சகட்ட களிப்பு ரகம். ஃபெர்னான்டோ ஸோரன்டினோ சிறுகதைகளைத் தாங்கிய இந்த புத்தகம் அத்தகைய உச்சகட்ட அனுபவத்தையே தந்தது.
ஃபெர்னான்டோ ஸோரன்டினோ அர்ஜென்டினா நாட்டில் ப்பூனஸ் அயரஸில் பிறந்தவர். ஸ்பானிஷ் மொழியில் இவர் எழுதிய சிறுகதைகளின் முதல் தொகுப்பான Zoological Regression வெளிவந்தபோது அனைவராலும் அறியப்பட்டார். இவரது படைப்புகள் அதீத கற்பனையும் நகைச்சுவையும் இரண்டர கலந்தது என பலர் சொல்வதுண்டு. சிலரோ சற்று நம்பகத்தன்மையற்று விகாரமானதாக இருந்தாலும் உண்மையின் தோற்றத்தை கொண்டிருக்கிறது என பாராட்டியிருக்கிறார்கள். ஃபெர்னான்டோ ஸோரன்டினோ தனது முதல் படைப்பைப்பற்றி தானே குறிப்பிடும்போது "ஊகிக்கும் திறனுடைய வாசகர்களைத் திருப்திப்படுத்த இக்கதைகளை எழுதினேன். அதன் பிறகு மீண்டும் அந்தத் தவறைச் செய்யவில்லை. என்னுடைய அடுத்த தொகுதியில் நானே படித்து மகிழும் கதைகள் மட்டுமே இடம்பெற்றன. எதுவும் நுட்பமாக தெளிவாக இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம். சந்தேகத்திற்கு இடமிருக்கக்கூடாது. என்னுடைய கதைகளில் பல சம்பவங்கள் விசித்திரமாக இருந்தால்கூட கதாபாத்திரங்களை நான் ஸ்தூலமாகவே படைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இவர் இதுவரை ஆறு சிறுகதை தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு குறுநாவல், சிறுவர்களுக்கான இரண்டு தொகுப்புகள், இரண்டு நேர்காணல், அர்ஜென்டினா இலக்கியத்தைப் பற்றிய சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள் ஆங்கிலம், போர்த்துகீசு, இத்தாலி, ஜெர்மன், பிரெஞ்ச், பின்னிஸ், ஹங்கேரியன், போலிஷ், வியட்நாமீஸ் என பல மொழிகளில் வெளிவந்திருக்கிறது. அதனோடு இந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே (இந்த புத்தகம் ஒன்றே) வெளிவந்திருப்பது சிறப்பிற்குறியது.
The best of All Possible World, Stories of the Liar, Sanitary Centennial போன்றவை இவரது சிறுகதை தொகுப்பில் புகழ்பெற்றவையாகும்.
இந்த புத்தகம் ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் வெவ்வேறு தொகுப்பின் 11 சிறுகதைகளை தாங்கியிருக்கிறது. *அவன் என்னை குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்* என்ற முதல் சிறுகதையே புத்தகத்தை கீழே வைக்க மறுப்பு தெரிவிக்கிறது. அக்கதையின் நாயகனை ஒருவன் குடையால் அடிக்கத் தொடங்குகிறான். ஆரம்பத்தில் அது எரிச்சலூட்டினாலும் பிறகு குடையால் அடிவாங்குவதை நாயகன் விரும்பத் தொடங்குகிறான். "அந்த அடிகள் இல்லாமல் என்னால் வாழ முடியாது" என இறுதியில் அவனுக்கு அது வழக்கமாகவே மாறிவிடுகிறது.
இரண்டாவது சிறுகதை *ஒரு நீதிக்கதை*. சிறுவர் கதைபோல தோன்றினாலும் கதையில் வரும் நேர்மையான பிச்சைக்காரன் அது இஷ்டத்திற்கு செல்லும் வாழ்க்கையின் அதிஷ்டத்தை உணர்த்துகிறான்.
மூன்றாவது சிறுகதை *ஹார்ன் இசைப்பவன்* ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் புகழ்பெற்ற சிறுகதையாகும். கொஞ்சம் சோகம் இழையோடினாலும் ஒன்றை மறக்க மற்றொன்றிற்கு அடிமையானவனின் கதையைக் கொண்டது. மற்றொன்றும் அவனுக்கு மறக்கத் தகுவதாகவே மாறிவிடுகிறது.
தேதி பத்தை தாண்டிவிட்டது, வேலை பார்த்தற்கு இன்னமும் சம்பளம் வரவில்லை, கேஷியரைக் கேட்டால் பண்ட் இல்லை என ஹாயாக பொறிகடலை தின்றுகொண்டே பதில் கூறுகிறார், அட்வான்ஸ் - கிட்வான்ஸ்...ம்கூம்?, முதலாளியை பார்க்கலாமே என்றால் வந்தால்...தானே?. வாடகை, ஸ்கூல் பீஸ், கரண்ட் பில், கேபிள், மளிகை, ரேஷன் மற்றும் தெரியாமல் சிக்கிக் கொண்ட தவணை என மாதத்தின் முதல் பத்துநாட்களின் தலைசுற்றல், வாந்தி, மயக்கம், படபடப்பு அனுபவம் இருந்தால் இந்த புத்தகத்தின் நான்காம் சிறுகதையான *ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை* பிடித்துப்போகும்.
நான் ஒரு கொசுவின் அதிகாரத்திற்குட்பட்டிருக்கிறேன் என தொடங்கும் *ஒரு தீர்வுக்கான காத்திருப்பு* என்ற ஐந்தாம் கதையும், பக்கத்து வீட்டில் புதிதாக குடிவந்தவர்களை நல்லமுறையில் கவனிக்கும் *தற்காப்புக்காக* என்ற ஆறாம் சிறுகதையும் நகைச்சுவையின் உச்சம் எனலாம்.
*வெறும் சூசகம்* என்ற ஏழாவது சிறுகதை ஒருபக்க அளவில் சூசகமாக இருக்கிறது. *வருகை* என்ற எட்டாவது சிறுகதை திரில்லர் வகையைச் சேர்ந்தது.
*நியாயமற்ற அச்சம்* என்ற சிறுகதையும், காலக்கினாஸ் என்ற பறவையை வைத்து எழுதிய *ஒரு அறிவுப்பூர்வமான புத்தகம்* என்ற சிறுகதையும், ஒரு கற்பனை செடியான *ஆர்டிசோக்கின் வளர்ச்சி* என்ற சிறுகதையும் அக்மார்க் மன்னிக்கவும் அர்ஜென்டினா மார்க்
ஃபெர்னான்டோ ஸோரன்டினோ ஸ்பெஷல் எனலாம்.
- ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை
- ஃபெர்னான்டோ ஸோரன்டினோ
- தமிழில்: எம்.எஸ்
- காலச்சுவடு பதிப்பகம்
இந்த சிறுகதைகளை ஆங்கில மூலத்திலிருந்து எம்.எஸ் என அழைக்கப்படும் எம். சிவசுப்ரமணியன் அவர்கள் (கிழவனும் கடலும் புகழ்பெற்ற நாவலை நமக்கு அறிமுகப்படுத்தியவர்) தமிழில் தொகுத்துள்ளார். ஒரு சிறுகதை அல்லது ஒருபக்க கதையை எப்படி தொடங்க வேண்டும். மேலும் அதை எப்படி முடிக்க வேண்டும், அது எப்படி இருக்க வேண்டும் என்ற எழுத்துலக நீதி நியாயம் தர்மம் நாட்டாமை எல்லாம் ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் கதைகளுக்கு கிடையாது எனலாம். ஹார்ன், குடை, கொசு, சிலந்தி, பறவை, செடி, என அற்பமானவைகளே இவரது சிறுகதைகளில் முதன்மையாக இருக்க மேலோட்டமாக வாசித்தால் சிரிப்பு மட்டுமே மிஞ்சுகிறது. அதுவே ஆழ்ந்து அவற்றோடு நம்மை பொருத்திப் பார்த்தால் ஒரு மனிதனின் பயம், இயலாமை, போராட்டம், அவஸ்தை, அடிமைத்தனம் என அத்தனையும் விளங்குகிறது. ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை பெற மட்டுமல்லாது ஸோரன்டினோனாலஜி (இது அடியேன் வைத்த பெயர்) என புதிய கதை சொல்லும் யுக்தியையும் தெரிந்துகொள்ள கடுகளவே இருக்கும் இந்த புத்தகத்தை கையிலெடுக்கலாம்.