கேள்விக்குறி.

நீர்நிலைகளை தூர்வாரியதைப் பற்றி பெருமையாக எழுத அதற்குள் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்து மறுபடியும் அடப்போங்கடா நீங்க எப்பவுமே திருந்தப் போவதில்லை என நினைக்க வைத்திருக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக இச்சட்டத்தை எதிர்த்து இந்தமுறை வடக்கு கொந்தளிக்க அங்கு என்ன நடக்கிறது என தெற்கிற்கு தெரியாதவாறு எல்லா மீடியாக்களின் எல்லா ஓட்டைகளையும் N95 மாஸ்க்கை மாட்டி மூடியிருக்கிறார்கள். N95 என்பது 95 சதவீதம் காற்றின் துகள்கள் எதையும் நுழையவிடாது என்பதாகும். ஆரம்பத்தில் ஒரு N95 மாஸ்க் 250 ரூபாய்க்கு விற்றதுபோக தற்போது 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படி என்றால் Standard என்ற அதன் தரம் என்னவாக இருக்கும்?.. எல்லா மாஸ்க்கும் N95 எனத் தகுக. K95, S95 மாஸ்க்கெல்லாம் கடையில் கிடைக்கிறது. K என்பது கந்தசாமி, S என்பது சுடலைமாடன். 

ஒரு விவசாயி இயற்கையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். ஏற்கனவே விதைகள், இடுபொருட்கள், அட! ஏன்? தண்ணீருக்கு கூட ஆழ்பவர்களிடம் கையேந்தும் நிலையில் இருக்க தற்போது விளைந்த பொருட்களை விற்பனை செய்வதற்கும் ஏகப்பட்ட குளறுபடிகளை விதித்திருக்கிறார்கள். "அறுவடை முடிந்த ஆறாம்நாள்" என எங்கள் ஊரில் சொல்லுவார்கள். அதாவது அதற்குள் பயன் கிடைத்துவிட வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி ஒரு பக்கம் சுகோய் அல்லது மிக் விமானத்திலேறி அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது, பொருளாதாரம் அடல் டனலுக்குள் சென்றுவிட்டது, தலைமையோ நாட்டு நடப்புகளை பார்க்காமல் வாத்து நடப்புகளை பார்த்துக் கொண்டிருப்பது அதைவிட கொடுமை. பற்றாக்குறைக்கு போட்டோ சூட்டுகள் வேறு. ஒவ்வொரு நாளும் இருப்பை எப்படியோ தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் போல. ஜிம்முக்கு போடும் டிராக் சகிதம் பின்புறத்தை காட்டினாலும் சரி. ஜோடிகளை எடுத்துக்கொண்டால் Post Wedding , Pre Wedding அதையும் தாண்டி போர்வை ஒன்றே போதுமென Pre First Night போட்டோ சூட்டுகளுக்கு சென்றுவிட்டார்கள். நமக்கேன் வம்பென அதனை கொஞ்சம் விட்டுவிட்டு சென்ற பதிவில் கடைசியாக சொல்லியிருந்த WWE என்ற மல்யுத்த விளையாட்டிற்கு தாவுவோம்.  

அடிப்பதைப் போல குத்துவதைப் போல உதைப்பதைப் போல விழுவதைப் போல இப்படி குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த போட்டியினை கலந்து நாடகம் போல WWE (World Wresling Entertainment) என மாற்றியவர் ஜெஸ் மெக்மஹோன். மகன் மகள் மாப்பிள்ளை என குடும்ப சகிதம் பிரேவ் ஹார்ட், ஸ்டோன் கோல்டு, ராக்கிடம் அடிவாங்கிச் செல்வரே மிஸ்டர் மெக்மஹோன் அவரின் தாத்தாதான் இவர். தற்போது மிஸ்டர் மெக்மஹோன் WWE நிறுவனத்தின் தலைமையாக இருக்க அதன் வரவு செலவு சொத்து பத்து பதினொன்று பன்னிரண்டு பதின்மூன்றெல்லாம் வாயை பிளக்க வைப்பவை. இது ஒருபுறமிருக்க இதெல்லாம் ஒரு விளையாட்டா? எல்லாம் சூதாட்டம் என இதனை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். மாரிமுத்துக்கு 50 பைசா, சத்திய மூர்த்திக்கு 1 ரூபாய், நடுக்குழி தண்ணி கோலியை தூக்கினால் 2 ரூபா என மரத்தடி கோலி விளையாட்டு மாதிரி ஒவ்வொரு வீரரின் தலைக்கும் சில ரூவாக்கள் கட்டி சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு ஆன்லைன் நிறுவனமே 222 கோடிக்கு விளையாட்டு போட்டியை எடுத்து நடத்தும்போது தெரிந்தே செய்யப்படும் மல்யுத்த போட்டிக்கு என்ன குறைச்சலாம்? என்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் ஒருவரை அடிப்பது வன்முறையைத் தூண்டும். ஏற்கனவே மனித மனங்கள் முழுவதும் வன்மங்கள் நிறைந்திருக்கிறது. ஸ்பைடரில் வரும் 5 சதவீதத்தை நாம் எப்போதோ தாண்டிவிட்டோம். சினிமா, சீரியல், வெப் சீீரியஸ், மொபைல் கேம்கள் என பொழுதை போக்கினாலும் அதிலும் வெட்டு, குத்து, இருட்டு, ரத்தம், சத்தம், காமம், பழிவாங்குதல் பக்கத்தை மட்டுமே ரசிக்க பழகிவிட்டோம். ரியாலிட்டி ஷோக்களிலும் அஃகுதே. சீீசனுக்கு புதுப்புது சரக்காக இறக்கிவிட்டு அதிலும் ஒன்று சூப்பர் பீஸென ஹார்மோன் செயல்பாட்டை சோதிக்கிறார்கள். இதையெல்லாம் வீட்டில் பார்க்கக்கூடாது என தடை உத்தரவு போட்டுவிட்டு அதையும் மீறி ஜொல்லிட்டு பார்த்தால் அபூர்வமாக கிடைக்கும் நைஸ் தோசைக்கும் சிறப்பான நிலக்கடலை சட்ணிக்கும் ஒரு ஆஃப்பாயில் போடேன் என்பதற்கும் பங்கம் வந்துவிடுகிறது. WWE மல்யுத்தமும் இந்த குரூரத்தில் வருவதால் முதலில் இதை தடை செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பு இருக்கிறது. 

ஒருவிதத்தில் பார்த்தால் அதுவும் உண்மைதான். ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வயதில் யாரோ ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறாள் என்ற செய்திகள் தயிர் சாதத்தையும் சில்லி பிரியாணியாக மாற்றிவிடும். அப்படித்தான் காரசாரமாக கிறுக்கியது நினைவிருக்கிறது.

தாயெது
தாரமெது
தமக்கையெது
மகளெது
இனமெது
பிணமெது தெரியாது புணர
தலை தொடும்வரை  
புடைக்கும் குறி
ஆச்சரியக் குறியல்ல
கேள்விக்குறி.

இங்கு கேள்விக்குறி என்பது கேள்விக்குறிதான். அந்த குறியை என்ன செய்வது?.. நந்தா சூர்யா அவதாரம் எடுத்துவிடலாம் என்றால் வெட்ட வெட்ட வேறொரு பக்கம் முளைத்துக் கொண்டே இருக்கும்.  ஆகையால் ஒரு பக்கம் மட்டும் பார்ப்பது முறையாகாது. 

அன்பெது
பண்பெது
காதலெது
காமமெது
கலையெது
வீரமெது வீரியமெது
தடவிப் பார்க்காமல்
நீளும் தற்குறிகளை 
கவ்விக்கொள்ளும் யோனிகள்
நல்லினத்தை பிறசவிப்பதில்லை.

என இரண்டிற்கும் பொதுவாவோம். 

நல்ல விதைகளை நாம் முளைக்க விடுவதேயில்லை. நடப்பதையெல்லாம் பார்க்க நல்லினமும் அப்படி முளைக்காமல் போயிருக்கலாம். 

2015 ஆம் ஆண்டு BBC நிறுவனத்திற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லி உட்வின் என்பவர் India's Daughter (இந்தியாவின் மகள் - இந்த தலைப்பை வைத்தற்கே அவருக்கு பூங்கொத்து கொடுக்கலாம்) என்ற ஒரு டாகுமெண்டரியை தயாரித்து கொடுத்திருந்தார். மார்ச் 8 மகளிர் தினத்தன்று உலகம் முழுவதும் அதனை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் அது தடை செய்யப்பட்டது. 800 என்ன அதையும் தாண்டி பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்ற தேக்குமர மேசைகளும் நாற்காலிகளும் வழக்கம்போல் தட்டுக்கள் வாங்கியது. ஆனால் BBC நிறுவனமோ முன்கூட்டி மார்ச் 4 ஆம் தேதியே இந்தியாவைத் தவிர மற்ற சில நாடுகளில் அந்த டாகுமெண்டரியை ஒளிபரப்பியது. இலவசமாக யூ டியூபிலும் வெளியிட்டார்கள் (அதுவும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இப்போது தேடினாலும் கிடைக்காது). அதற்குபின் இந்திய மானம் காற்றில் பறந்தது எனதான் சொல்ல வேண்டும். 
Trailer
 
India's Daughter என்ற டாகுமெண்டரி 2012 -ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் நள்ளிரவில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தை அலசி ஆராய்ந்திருந்தது. நிர்பயா என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த சம்பவத்தின் குற்றவாளிகளை சிறைச்சாலையில் சந்தித்த நேர்காணலும், அவர்களின் தைரியமான பதிலும், டெல்லி போராட்டமும் அதில் இடம்பெற்றிருந்தது. மேலோட்டமாக பார்த்தால் ஒழிக என்று கூறத் தோன்றினாலும் அச்சம்பவத்தின் கண்ணாடியாகவே அந்த டாகுமெண்டரி இருந்தது. நாம்தான் கண்ணாடியை ஆழ்ந்து பார்ப்பதே இல்லையே!. நிர்பயா என்றால் தைரியமானவர்கள் என்று அர்த்தம். தற்போது ஹாத்ராஸ். இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள் இடம்பெறுமோ தெரியவில்லை?. அவையெல்லாம் வரலாற்றில் கலங்கமாகவே இருக்கும். அவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அல்லது பெண் குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம் ஒருவித பயம் கலந்த எண்ணம் உருவாகிறது. முதலில் அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். எண்ணம் நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும். உலகின் நல்லது கொட்டது அனைத்தையும் சேர்த்துதான். 

இயற்கையின் விதிகளை புரிந்துகொண்டு அதனை மீறாமல் அதோடு கைகுலுக்கி ஒத்துப்போகிற எண்ணம்தான் நல்ல எண்ணம். Life energy vibration என சொல்லுவார்கள் அதாவது நம் வாழ்க்கை சங்கிலித் தொடர்போல உணர்வு பூர்வமாக இணைக்கப் பட்டிருக்கிறது. ஒருவருடைய உடம்பிற்கோ மனதிற்கோ பாதிப்பு ஏற்படுவதாக வைத்துக்கொண்டால் அது அவனுக்கு ரத்த சம்மந்தமுள்ள (Blood Related) அல்லது கடமை சம்பந்தமுள்ள (Duty related) மற்றவர்கள் உடலையும் மனதையும் பாதிக்கும். டாக்டருக்கு படிக்கும் ஹீரா இருமினால் முரளிக்கு இதயம் வலிக்கும். இயற்கையின் விதியே அதுதான். என்னப்பா இது... ஒரே கொலை, கொள்ளை, கற்பழிப்பு என உலகமே கெட்டுக் கிடக்குது... என ஒருவன் புலம்பினாலோ, அதைப்பற்றி சிந்தித்தாலோ, பக்கம் பக்கமாக எழுதினாலோ, அது அடுத்தவர்களையும் பாதிக்கும். அடுத்தடுத்தவரும் அதையே பிடித்துக் கொண்டால் அனைவரையும் பாதிக்கும். இந்த கெட்ட எண்ணங்களே நடக்கும் கொடுமைக்கெல்லாம் காரணமாக இருக்கின்றன. முன்பே சொன்னதுபோல் நாம் சிந்திப்பதெல்லாம் வெட்டு, குத்து, இருட்டு, ரத்தம், சத்தம், காமம், பழிவாங்குதல் பக்கங்கள்தான். 

The atmosphere can bear negative thoughts only to a certain extent and finally bursts in to crisis, riots wars!

இந்த அண்டவெளி குறிப்பிட்ட அளவிற்குத்தான் கெட்ட எண்ணங்களை தாங்கிக்கொள்ளும். அது மீறினால் எல்லாம் அப்படித்தான் நடக்கும். நண்பர் ஒருவர் கொஞ்சம் வயதானவர் அவரிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது வேடிக்கையாகச் சொன்னார்... இந்த உலகமே ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறது தெரியுமா? ... ஏன்னா?..இந்த உலகத்தில் இருக்கும் முக்கால்வாசி மக்களை ஆழ்வது முட்டாள்களே... 

கொஞ்சம் வயதானவர் என்பவரிடம் நிறைய அனுபவங்கள் இருக்கும். தாத்தாக்களை எடுத்துக் கொள்வோமே. புகழ்பெற்ற இயக்குனர் பிலிப் மயல் இயக்கத்தில் வெளிவந்த The Nightingale என்ற சீன நாட்டு திரைப்படம் ஒன்று இருக்கிறது. வயதான ஒருவர் தனது மனைவியின் கடைசி ஆசையை நிறவேற்ற தான் வளர்க்கும் பறவையை தனது சொந்த கிராமத்தில் விடுவதற்காக புறப்படுகிறார். அவருடன் நகர சூழ்நிலையில் வளர்ந்த பேத்தியும் கூடவே செல்கிறாள். இருவருக்கும் இடையிலிருக்கும் அழகியலை பயணமாக இந்த திரைப்படம் தாங்கியிருக்கிறது. பயணம் மட்டுமல்லாது தாத்தாவிடம் வாழ்க்கை அனுபவத்தை பெறும் அந்த பேத்தி நிச்சையம் அதிஷ்டசாலியாகத்தான் இருக்கவேண்டும். இந்த திரைப்படத்திற்கு அர்மாண்ட் அமர் என்பவர் இசையமைத்துள்ளார். அவரது இசையை நீங்கள் எங்கோ கேட்டதுபோல் இருக்கிறதென நிச்சையம் உணரலாம். 
Trailer

 
அர்மாண்ட் அமர் பிரான்ஸை சேர்ந்தவர். Amen, Live and Become, Days of Glory, Welcome, London River, The Source, Belle and Sebastian, History of Love, Bab Aziz போன்ற இவர் இசையமைத்த திரைப்படங்கள் பெரும்பாலும் ஆஸ்கார் பந்தையத்தில் ஓடிய குதிரைகள். டம்படோரா என அழைக்கப்படும் கியூபாவின் ஒருவகை டிரம்ஸ்ஸை வாசிப்பதில் இவர் கில்லாடி. இந்தியாவின் தபேலாவையும் ஒரு கை மன்னிக்கவும் இரண்டு கை பார்த்துவிடுவார். அர்மாண்ட் அமர் ஆரம்பகட்டத்தில் Photo essay என சொல்லப்படுகிற புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்கள் தாங்கிய குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதில் லிவான் மினாசியனும் இணைந்து ஸ்டீவ் மெக்கரியின் புகைப்படங்கள் தாங்கிய Photo essay குறும்படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. 
அர்மாண்ட் அமரின் இசையில் ஒன்று:


பச்சைநிற கண்கள் கொண்ட ஆப்கானிஸ்தான் பெண் ஷர்பத் குலாவின் புகைப்படம் மோனாலிசா ஓவியத்திற்கு அடுத்து உலக புகழ்பெற்றதாக கருதப்படுகிறது. அந்த புகைப்படத்தை எடுத்தவர்தான் ஸ்டீவ் மெக்கரி. உங்களுக்கு புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருந்தால் தயவு செய்து அவரது இணையதள முகவரிக்கு சென்று விடாதீர்கள். பிறகு வருத்தப்பட்டு கேமராவைத் தொட பல நாட்கள் ஆகக்கூடும். 

ஸ்டீவ் மெக்கரியின் இணைய முகவரிக்கு செல்ல: Click Here 👇

ஒரு சிறந்த புகைப்படத்திற்கு தேவை ஒளி அமைப்பும் வண்ணங்களுமே . கருப்பு வெள்ளையும் வண்ணங்கள்தான். அவற்றைக்கொண்டு உள்ளதை உள்ளபடியே எடுக்க வேண்டும். உள்ளது உள்ளபடி இருக்க வேண்டும். ஸ்டீவ் மெக்கரியின் தொகுப்பில் அவற்றையெல்லாம் காணலாம். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் பாலுமகேந்திராவைத் தவிர ஒளியையும் வண்ணங்களையும் செயற்கையில்லாமல் பதிவு செய்தது யாருமில்லை எனலாம். ஒளி ஓவியர் என அவரை அழைப்பது தவறொன்றும் இல்லை. வீடு தொடர்ந்து அவரது சந்தியாராகம் திரைக்கதை புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. புத்தகத்துடன் அதன் டிவிடியும் இலவசமாக கிடைக்கிறது. கதையை வாசித்துவிட்டு திரைப்படத்தை பார்ப்பதில் ஒரு புது சுகமிருக்கிறது. அந்த திரைப்படம் சொக்கலிங்கம் என்ற கிழவனும் அவரது கதையும்தான். பாலுமகேந்திரா கருப்பு வெள்ளையில் அதனை படைத்திருந்தார். சென்ற வருடம் ஒளிப்பதிவிற்காக பல விருதுகளை வாங்கிய குறும்படம் The Sun. கல்லூரி அளவில் போட்டிகளுக்காக மாணவர்களால் எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தின் களம் வேறாக இருந்தாலும் பாலுமகேந்திராவின் இயற்கை சாயலிலே இருக்கிறது. 
அந்த குறும்படம்

 
சிலவருடங்களுக்கு முன்பு கொடைக்கானல் சென்றபோது ஒரு அனுபவம் கிடைத்தது. குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு மேலே மலைப்பகுதியில் நடைபோட அங்கு பிரம்மாண்ட இயக்குனரின் திரைப்பட படபிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பாதுகாப்பு பலமாக இருக்க வெளியாட்களை அனுமதிக்க மறுத்திருந்தனர். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி பல சோதனைக்குப் பின்பு படபிடிப்பை பார்க்க நேர்ந்தது. மலையைச் சுற்றி புள்வெளி பகுதியில் மரத்தால் போடப்பட்ட அழகான வீட்டில் நாயகனும் நாயகியும் பேசிக்கொண்டிருப்பது போன்ற சில காட்சிகள் படமாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பின்பு அந்த திரைப்படம் வெளிவந்து கொடைக்கானலில் எடுக்கப்பட்ட காட்சிகளை திரையில் பார்க்க பிரமிப்பாக இருந்தது. அந்த மரவீடு, அதைச்சுற்றி துலிப், லாவண்டர் டெய்ஸி, ரோஜா இன்னும் பெயர் தெரியாத பூக்களின் தோட்டம், பின்புறம் பச்சை பசேல் மலைகள், அதில் விழும் அருவி, பறவை பறக்கவில்லை என்றால் எப்படி?.. அதுவும் என தொழில்நூட்பத்தை கொண்டு அந்த காட்சியை பட்டி டிங்கரிங் செய்திருந்தார்கள். நிஜத்தில் பார்த்ததற்கும் திரையில் பார்த்ததற்கும் வித்தியாசங்கள் தலைகீழாக இருந்தது. ஒரு சிறிய அறையில் பச்சைநிற திரைக்குப் பின்னால் 99 வயதிலும் தள்ளாடி தள்ளாடி நடித்து கொடுத்தாலும் தொழில்நுட்பத்தைக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலைகூட தற்போது வந்துவிட்டது. தொழில்நுட்பத்தைக் கொண்டு அனைத்தையும் சாத்தியமாக்கலாம் ஆனால் சத்தியமாக்க முடியாது. புகைப்படம் சினிமா மட்டுமல்ல எல்லா துறையிலும் தான். 

டெக்னாலஜி  பூக்கள் மனப்பதில்லை.  

பூ என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. துலிப் லாவண்டர் டெய்ஸி ரோஜா என பிரமாண்டத்திற்கு சென்றுவிட்டதால் கனகாம்பரம் டிசம்பர் செவ்வந்தி வாடாமல்லியை எல்லாம் ராமராஜன் காலத்து டூயட் பூக்களாக மறைந்துவிட்டது. செம்பருத்தி பரவாயில்லை சீரியலாக தொடர்கிறது. தும்பைப்பூவை எடுத்துக் கொள்வோம். உங்கள் பயணத்தில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இந்த விளம்பரத்தை கவனிங்க என பேருந்தில் ஜலதோசம், நீர்கோர்வை, நெஞ்சு சளி, தலைவலிக்கு தைலம் விற்பவர்கள் குறிப்பிடுவதெல்லாம் தும்பைச் செடியைப் பற்றிதான். 

ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணையை விட்டு, அதனுடன் கடுகை சேர்த்து, வரமிளகாய் பூண்டு இவற்றை தட்டிப்போட்டு, தும்பைச் செடியின் இலைகள் மற்றும் பூக்களை சேர்த்து வதக்கி, பிறகு புளி கரைசலை அதில் ஊற்றி, மஞ்சள், சீரகம், பெருங்காயம், மிளகு, சீரக பொடிகளை தூவி, நீர்விட்டு, உப்பு போட்டு கொதிக்க வைத்து இறக்கினால் தும்பை ரசம் ரெடி. கிராமத்தில் இந்த ரசமும் இதே பாணி துவையலும் மூலிகை ருசியியலாக பிரபலமாக இருந்தது. காய்ச்சல், பித்தம், வாயுத்தொல்லை, கண்நோய், விஷமுறிவு என எல்லாவற்றிருக்கு சிறந்ததென மூலிகைகுணம் நிறைந்திருக்க காட்டுச் செடியாக எல்லா இடங்களிலும் காணப்பட்ட அத்தகைய தும்பையை தற்போது பார்ப்பதே அரிதாகிவிட்டது. சங்க இலக்கியத்தில் தும்பைத் திணை என்ற அளவிற்கு பெயர்பெற்றிருந்தது. 

வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்.

இரு நாட்டு வீரர்களும் தேவையில்லாமல் எல்லையில் கைகலப்பு செய்யாமல் ஒரு நல்ல நாள் குறித்து பொது இடத்தில் போர் செய்வது தும்பைத் திணையாகும். அப்போது வீரர்கள் மட்டுமல்லாது மன்னர்களும் தும்பைப்பூவை மாலையாக சூடியிருப்பார்களாம். 

மற்றும் வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான்.

இராவணன் போருக்கு சென்றபோது தும்பைப்பூ மாலையை சூடியிருந்தானாம். இராமனும் தன் பங்கிற்கு துளசி மாலையுடன் தும்பைப்பூ மாலையை சூடியிருந்தானாம் என கம்பர் குறிப்பிடுகிறார். ஒருகாலத்தில் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படுவார் எனத் தெரிந்தால் இராமன் பாயோகிராபிக்கு (அதுவும் ரீமேக்) கம்பர் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். இராமன் மட்டுமல்ல அனைத்து புராண புருஷர்களின் கதையும் இனி அதே (அதோ) கதிதான். அட! ஏன்? ஆயிரம் வருடத்திற்கு முன்பு ஆண்ட அரசனைக்கூட விட்டுவைப்பதில்லை. கண்டதெல்லாம் கன்டெண்ட் என எதையாவது பிடித்துக்கொண்டு நன்றாக பொழுது போகிறது.  எதுவுமே கிடைக்கவில்லை என்றால் அந்த புத்தகத்தில் 156 ஆம் பக்கத்தில் என்ன சொல்லியிருக்கு தெரியுமா? என சீண்டிவிட்டால் போதும், நேற்றுவரை கண்ணம்மா எப்போது பிள்ளை பெறுவாள், ஆதி எப்போது ஷேவ் செய்வான், அர்ச்சனாவிற்கு என்னவாயிற்று என்றிருந்தவர்கள் எல்லாம் புரட்சி பாதைக்கு திரும்பிவிடுவார்கள். அப்படியே அடுத்தடுத்த மதத்தவர்களையும் இதில் கோர்த்துவிட்டால் தீபாவளி சரவெடிதான். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அப்படியொரு புத்தகம் இருப்பதே இப்போதுதான் தெரிந்தது. இந்த துன்பத்திலிருந்து மீண்டு தும்பைக்கு வருவோம். 

அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான்.

இலக்கியமெல்லாம் வேண்டாம், எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் பட்டாம்பூச்சிகளும் தட்டான் பூச்சிகளும் தேன் பூச்சிகளும் வந்தமர்ந்து பறந்த தும்பையை தேடும் அளவிற்கு இருக்கிறோம். வாழ்க்கையில் கைக்கு எட்டிய தூரத்திலிருந்த அற்பமானவற்றை எல்லாம் அபூர்வமாக்கி என்ன செய்யப் போகிறோம்?...நீளும் சில கேள்விக்குறிகளுக்கு விடை தேடுவது கடினமல்லவா?.