கவிதையே குறும்படமாக.
ச்..சே!.... கவிதை மாதிரி இருக்கிறது இந்த குறும்படம்... என சிலவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இதில் கவிதையே குறும்படமாக இருக்கிறது. குறும்படங்களில் Narated Visual Story என சொல்லுவார்கள். அதாவது சொல்லவந்த செய்தியினை அழகான காட்சியமைப்புகளுடன் இசை சேர்த்து பின்னணியிலிருந்து குரல் கொடுத்து அமைப்பதாகும். அது சிறுகதை அல்லது பயணம் அல்லது அறிமுகம், ஆவணம், விளம்பரம் என ஏதாவது ஒன்றை தாங்கியிருக்கும். அதுபோல புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளை காட்சிப்படுத்துவது Cinematic Poetry Shortfilms எனப்படுகிறது. அத்தகைய வடிவில் அமைக்கப்பட்ட குறும்படங்கள்தான் இவைகள்.
❤
பனிமழையில் நடுங்க வைக்கும் ஷேக்ஸ்பியரின் 'பென்வேயில் ஒரு குளிர்காலம்'
(பனிமூடிய ஒரு பேஸ்பால் விளையாட்டு மைதானம்தான் இதன் காட்சிப்பொருள்),
❤
லிலியன் மெஹ்ரேவின் 'சொற்களுக்கிடையில்' (இதில் ஒரு பெண் நியூயார்க்
நகரில் தனக்கான வீடு ஒன்றை தேடுகிறாள். கூடவே அந்நகரத்தின் மனிதநேயத்தையும்
சேர்த்து),
❤ அருந்ததி ராயின் 'வாழ்க்கைச் செலவு' ( இராஜஸ்தானை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை இது சித்தரிக்கிறது),
❤
ஆலன் வாட்ஸின் 'குழந்தை பருவத்திற்கு திரும்பச் செல்லுங்கள்' என தொடங்கும்
கவிதை (அதே குழந்தை பருவத்துடன் பாகிஸ்தான் நாட்டின் பயண அனுபவமாக
படைக்கப்பட்டிருக்கிறது),
❤
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பெர்னாண்டோ பெசோவாவின் கவிதை (கடலும்
கடல்சார்ந்த அதிசயங்களையும் இந்த குறும்படம் காட்டுகிறது. கடலுக்கு
முன்னால் நிற்கும்போது ஒரு பிரமிப்பு ஏற்படுத்துவதை அப்படியே உணர
வைக்கிறது),
❤
பாகிஸ்தான் கவிஞர் ஹசன் முஸ்தபாவின் "ஐந்தாவது அவென்யூ"(மன்ஹாட்டனில் 5
வது அவென்யூவில், ஹரே கிருஷ்ணா பக்தர்கள் அணிவகுத்துச் சென்றதை ஒரு கோடை
நாளில் ஹசன் கண்டவுடன் இந்த குறும்படம் விரிகிறது),
❤
டி.எஸ். எலியட்டின் கைவிடப்பட்ட நிலம் (இங்கு கைவிடப்பட்ட நிலம் என்பது
கடைசியாக நாம் சென்று சேரும் இடமான சுடுகாட்டை குறிக்கிறது. இந்த
குறும்படம் கல்லரைத் தோட்டத்தையே சுற்றிவருகிறது),
❤
பிலிப் லார்க்கின் " இங்கே" (பெயரிடப்படாத ஒரு கிராமம், ஒரு நகரம், ஒரு
கடற்கரை காட்சிகளுடன் சிறிய கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது),
❤
வாழ்வு தொடங்கும் இடமும் வாழ்வு முடியும் இடமும் இதுதான் என வாரணாசியைப்
பற்றிய நிதின் தாஸின் கவிதை (இந்தியாவின் ஆன்மீக தலைநகரமும் பழமையான
நகரமுமான வாரணாசியை இரண்டு நிமிடம் கவிதையுடன் சுற்றிக் காட்டுகிறது),
இவற்றை
இந்த குறும்படங்கள் தாங்கியிருக்கின்றன. கவிதையா? காட்சியமைக்கப்பட்ட
விதமா? பின்னணியின் குரலா? மயக்கும் இசையா? அல்லது அனைத்துமா? என காரணம்
தெரியாது ரசித்த குறும்படங்கள் இவை. இங்கு பாட்டன் பாரதி முதல் வண்ணதாசன்
வரை பலரும் இருக்க அவற்றையெல்லாம் நாமும் இவ்வாறு உருவாக்கினால்
எப்படியிருக்கும் என்ற ஆற்றாமையில் தங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.