இந்த பிரபஞ்சத்திற்கு வெளியிலாவது ஒரு நாள்.




நீயோ! 
நானோ!
யாரோ ஒருவர்
விட்டுக் கொடுத்து
விளையாடியிருக்கலாம்.
உன் 
ஆந்தை நினைவுகளுக்கு
பகலில்
என்ன வேலை?
உனக்கென நான்
எனக்கென நீ
நமக்கென நாம் வைத்து 
கொஞ்சிக் குலாவிய
செல்லப் பெயரிரண்டும் 
என்ன செய்துகொண்டிருக்கும்? 
கரைப்பவள்
கரைத்தது போக
மீதம்தான்
இந்த கல். 
இந்த மேகம்
உன்னையும் கடந்தால்
நாம் மழை. 
அப்படித்தான் 
காதலித்தோம்
அப்படித்தான்
காதலிக்கிறோம்
அது தொடர
அப்படித்தான்
காதலிப்போம்.
ஒரு அழகான ஊரில் 
தொடங்கியதுதான்
நம் கதையும்.
சற்றுபொறு
கடைசி கவிதை
உனக்கே 
உனக்கானதுதான். 
அதே நாள்
அதே நேரம்
அதே இடம்
அதே காதல்
அழைப்பிதழ் வாசிக்க
வந்துவிடுகிறேன்.
மறந்து விடாதே
சந்திப்பதாய் சொல்லியிருக்கிறாய்
இந்த பிரபஞ்சத்திற்கு
வெளியிலாவது
ஒரு நாள்.