நாங்களும் மில்லினியர்கள்தான்.

குந்தருக்கு 375 மில்லியன் டாலர், க்ரம்பிக்கு 99.5 மில்லியன் டாலர்,  ஒலிவியா பென்சனுக்கு 97 மில்லியன் டாலர், கிகோவிற்கு 15 மில்லியன் டாலர் அளவிற்கான சொத்துக்கள் இருக்கிறது. ஏம்பா!இதெல்லாம் ஒரு பெரிய சொத்தா? சாதாரணமாக ஐந்து வருடம் ச.ம.உ பதவியிலிருந்தாலே இதைவிட அதிகமாக சொத்து சேர்த்துவிடலாம் என நினைத்தால் மேற்கண்ட நால்வரும் மில்லினியர்கள்தான். அதிலும் உலகிலேயே முதன்மையானவர்கள். அது எப்படி?... யார் அவர்கள்?... அவர்கள் எவ்வாறு சம்பாதித்தார்கள்?...

குந்தர் வம்சத்தின் நான்காம் குந்தரிடம் யாரும் வாலாட்ட முடியாது. அவர் வாலாட்டினால் உண்டு. ஜெர்மன் செபர்டு இனத்தை சேர்ந்த நாய்தான் இந்த குந்தர். ஜெர்மன் கவுண்டஸ் கார்லோட்டா லீபென்ஸ்டைன் என்பவர் இந்த இனத்தின் நாயான மூன்றாம் குந்தரை வளர்த்து வந்தார். 1991 ஆம் ஆண்டு தான் சாகும் முன்பு அந்த நாய்க்கு 106 மில்லியன் டாலர் சொத்துக்களை அவர் எழுதி வைத்தார். இந்த சொத்துக்கள் அறங்காவலர்களால் பாதுகாக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு 375 மில்லியன் டாலர் ஆகும். மூன்றாம் குந்தரும் இறந்துவிட சொத்துக்கள் அனைத்தும் அதன் மகனான நான்காம் குந்தருக்கு சென்றது. சொல்லப்போனால் நான்காம் குந்தர்தான் உலகிலேயே அதிக சொத்துக்களை கொண்ட வளர்ப்பு பிராணியாகும். இது இன்னமும் அறங்காவலர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிரபல பாடகி மடோனா இதற்கு 3 மில்லியன் டாலருக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்திருக்கிறார். தினமும் 1500 டாலர் மதிப்புள்ள சிறப்பான உணவு குந்தருக்கு அளிக்கப்படுகிறது. அதை டூ பீஸ் வேலைக்கார பெண்கள் பரிமாற, சாப்பிட்டுவிட்டு ஹாயாக படுத்துக்கொண்டே ஷேர் மார்க்கெட் ஏறுதா இறங்குதா என பார்ப்பதுதான் இந்த மில்லினியரின் வேலை. 

குந்தரைப் போல க்ரம்பிக்கு அவர் அப்பா எந்த சொத்துக்களையும் விட்டுச் செல்லவில்லை. ஆனால் க்ரம்பி தனது சொந்த முயற்சியால் உழைத்து 97 மில்லியன் டாலர் சொத்துக்களை சேர்த்து பூனைகளிலே செல்வாக்கு மிக்க பூனையாக பெயர் பெற்றிருக்கிறது. கலப்பினத்தை சேர்ந்த க்ரம்பியின் நிஜப்பெயர் தர்தார் சாஸ் என்பதாகும். தபதா புந்தேசன் என்பவர் க்ரம்பியை வளர்த்து வந்தார். ஒரு நாள் அவர் க்ரம்பியின் சேட்டையை இணையதளத்தில் பகிர அது வைரலானது. அவர் மேலும் மேலும் பல வீடியோக்களை பகிர க்ரம்பிக்கு எக்கசக்க ரசிகர்களை பெற்றுத்தந்தது. க்ரம்பி கேட் வொர்ட்ஸ் கிரிஸ்துமஸ் எவர் என்ற ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அதற்கு கிடைத்தது. சினிமாவில் நடித்தால் சொல்லவா வேண்டும். க்ரம்பி 2019 ஆம் ஆண்டு மே மாதம் தனது ஏழாவது வயதில் இறந்துபோனாலும் ரசிகர்கள் மனதில் ஸ்டாராகவும் மில்லினியராகவும் இன்றும் நிலைத்திருக்கிறது. 

க்ரம்பி இறக்க உலக மில்லினியர் பூனை பட்டம் தற்போது ஒலிவியா பென்சனிடம் இருக்கிறது. ஸ்காட்டிஷ் இனத்தை சேர்ந்த வெள்ளை நிறம் கொண்ட இந்த பூனையின் சொந்தக் காரரும் அழகான பூனைதான். ஆமாங்க! பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் இந்த பூனையை வளர்க்கிறார். இவரிடம் மெரிடித் கிரே என்ற மற்றொரு பூனை இருந்தாலும் டெய்லருடன் படுக்கையில் தூங்கும் அதிஷ்டம் ஒலிவியாவிற்கே இருக்கிறது. பணக்கார வளர்ப்பு ஒருபுறமிருந்தாலும் டெய்லருடன் இணைந்து பல விளம்பரங்களில் தலைகாட்டி, நடை நடந்து (பூனை நடை) மாடலிங்கில் ஒலிவியா பென்சன் 97 மில்லியன் டாலர் சொத்துக்களை சம்பாதித்து வைத்திருக்கிறது. 

நாய் பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு மில்லியன் கணக்கில் சொத்துக்கள் இருப்பது ஒன்றும் பெரிதல்ல, ஆனால் கிகோவிற்கு 15 மில்லியன் டாலர் சொத்துக்கள் இருப்பது அதிசயம்தான். கிகோ ஒரு பெண் கோழி. பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபரான மைல்ஸ் பிளாக்வெல் இதனை வளர்த்து வர தான் இறந்ததும் கிகோவை பராமரிக்க 15 மில்லியன் டாலர் சொத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார். இதுவரைக்கும் மஞ்சூரியன் அல்லது 65 ஆகாமல் தனக்கு கிடைத்த சொத்துக்களை நற்காரியங்களுக்காக இந்த கிகோ செலவு செய்து வருகிறது. 

மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எதுவும் தமக்காக சொத்து பத்துக்களை சேர்ப்பதில்லை. விதிவிலக்காக மனிதர்களோடு பழகியதால் என்னவோ இவைகளுக்கும் சொத்துக்கள் சேர, மேற்கண்ட நால்வரும் மில்லினியர்கள்தான்.