இது தனி உலகம்.
காதலைவிட முக்கியமானது உலகில் எதுவுமில்லை
காதல் காற்றைப் போன்றது.
இதுவும் ரூமியுடையதுதான்.
காதால் காணவும்
கண்ணால் கேட்கவும்
கற்றுத் தந்தது
காதல்
இது கலில் ஜிப்ரானுடையது.
காதலைப்பற்றி யார் சொன்னாலும் எப்படி சொன்னாலும் காதல்தான்.
காதலுக்கென்று தனி உலகம் இருக்கிறது. கருந்துளை, பெரும் வெடிப்பு, பிரபஞ்சம், இணை பிரபஞ்சம் என விஞ்ஞானத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட அவ்வுலகம் கற்பனைகளால் ஆனது. ஜேம்ஸ் கேமரூன் அல்லது சங்கர் என தங்கள் வசதிக்கு தகுந்தவாறு கிராபிக்ஸ் செய்து கொள்ளவும். பிரிவே ஆயினும் நினைவுகளோடு கைகோர்த்து உலா வரும் காதலர்களைக் கொண்ட அவ்வுலகத்தில் தனித்திருப்பவர்களுக்கு இடமேயில்லை. கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக தெரிந்தாலும் உண்மையும்தான். அத்தகைய உலகத்திலிருக்கும் ஒரு ஜோடியின் கதைதான் இந்த குறும்படம்.
தேவ் மற்றும் சாரா என்ற ஜோடியுடன் ஒரு மனநல காப்பகத்தில் இந்த குறும்படம் தொடங்குகிறது. அங்கிருக்கும் நோயாளிகளான இருவரும் தங்களது அன்பை பறிமாறிக் கொள்கின்றனர். இருவரும் அவர்களின் வாழ்வை கற்பனையாக வாழத் தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் எது நிஜம் எது கற்பனை என்ற குழப்பத்திற்கு உட்படுத்தி அவர்களது உலகத்திற்குள் நம்மையும் கூட்டிச் செல்கின்றனர். இறுதியில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து குறும்படத்தின் முடிவை நம்மிடம் விட்டுவிடுகின்றனர்.
கொலம்பியாவைச் சேர்ந்த வெப் சீரியஸ் புகழ் ஜுலியன் ட்ரூஜிலோ தேவாகவும் (ச்சே...எவ்வளவு பொருத்தமான முகம்), நடிகை டயானா விஸ்வெல் சாராவாகவும் (ச்சே...எவ்வளவு பொருத்தமான அந்த சிரிப்பு) நடித்திருக்க அவர்களுக்கு ஒரு பாதி பூங்கொத்தை கொடுக்கலாம். அனா மரியா வர்காஸின் பியானோ, பெலிப் ரியானோ ட்ரிவினோவின் கிடார், கரேன் பெர்மடேஸின் வயலின் கலந்த இசைக்கு (ச்சே...எவ்வளவு பொருத்தமான இசை) மறுபாதி பூங்கொத்தை கொடுக்கலாம். காதல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும் பின்னணியில் ஒலிக்கும் குரலைத் தவிர இந்த குறும்படத்தில் வெட்டிப் பேச்சிற்கு இடமேயில்லை. அதுவே அழகாக இருக்கிறது.
- Our World
- Diercted by - Juan Francisco Pérez Villalba
- Written by - Juan Francisco Pérez Villalba
- Music by - Ana María Vargas
- Cinematography - Liliana Avendaño,
- Juliana Castro Duperly,
- Juan Sebastián Torregrosa.
- Country - Colombia
- Language - English
- Year - 2012.
அப்படித்தான்
காதலித்தோம்
அப்படித்தான்
காதலிக்கிறோம்
அது தொடர
அப்படித்தான்
காதலிப்போம்.
இது இந்த குறும்படத்திற்காக அடியேன் கிறுக்கியது. முன்பே பார்த்ததுபோல காதலைப்பற்றி யார் சொன்னாலும் எப்படி சொன்னாலும் காதல்தான். காதலுக்கென்று தனி உலகம் இருக்கிறது அல்லவா.