சேரியில் பூனை.
இங்கு பூனை என்பது பூனைதான் குறியீடாகக் கூட இருக்கலாம். சேரி என்பது யூதர்களுக்காக ஹிட்லர் ஏற்படுத்திய வதை முகாம்.
ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி என்ற நோக்கத்துடன் செயல்பட்டால் அது சர்வாதிகாரம் ஆகிவிடுகிறது. ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம் அதுதான். இந்த உலகம் பல சர்வாதிகாரிகளைக் கண்டிருக்கிறது கண்டுவருகிறது. அதில் ஹிட்லர் கொஞ்சம் வித்தியாசமானவர். அவருக்கும் ஒரே பிடித்திருக்க ஒரே ஜெர்மனி என்ற அகண்ட கனவினை அவர் கண்டார். அதை நினைவாக்க இரண்டாம் உலகப்போருக்கு ஸ்வஸ்திக் சுழி போட்டார். போர் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க யூத இனத்தை அழிப்பதற்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். யூதர் இல்லாத உலகம் என்ற கொசுறு கனவும் அவருக்கு இருந்தது. ஹிட்லருக்கு யூதர்களை ஏன் பிடிக்காமல் போனது என்பதற்கான காரணம் புதிராகவே இருந்தாலும் உலக வரலாற்றில் கொடூரமாக அழிக்கப்பட்ட இனங்களில் யூதர்களைப் போல வேறு எவறும் இல்லை எனலாம். பொதுசேவை முகாம், மருத்துவ முகாம், அகதிகள் முகாம் போல தனித்தனி முகாம்களை (Concentration Camp) ஏற்படுத்தி விதவிதமாக சித்தரவதை செய்து சுமார் 6 மில்லியன் யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்தார். கொட்டோ என அழைக்கப்படும் அத்தகைய வதை முகாம்களில் மிகப்பெரியது போலத்தில் உள்ள ஆஸ்ட்விச் வதை முகாம் ஆகும். அங்குமட்டும் 1.1 மில்லியன் யூதர்கள் கொள்ளப்பட்ட பதிவும், அது 3 மில்லியனைத் தாண்டும் என்ற யூகமும் இருக்கிறது. ஹிட்லர் வீழ்ந்து ஜெர்மனி போரில் தோற்க, ஆஸ்ட்விச் முகாமை சோவியத் வீரர்கள் கைப்பற்றி அம்முகாமிலிருந்த 7500 யூதர்களை மீட்டனர். அவர்களில் பலர் சிலநாட்களிலே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட மிஞ்சியவர்களில் ராக்மில் பிரிக்ஸும் ஒருவர்.
❗Auschwitz: The Nazis and 'The Final Solution' என்ற BBC தயாரித்த டாகுமெண்டரியில் ஆஸ்ட்விச் வதை முகாமைப் பற்றி கனமாக தெரிந்து கொள்ளலாம்❗
ராக்மில் பிரிக்ஸ் 1921 ஆம் ஆண்டு போலந்தில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். யூதர்களை அழிக்கும் ஹிட்லரின் மஞ்சள் குறியீடு இவரது குடும்பத்தின் மீதும் விழ லாட்ஸ் குடியிறுப்பு முள்வேலிக்குள் அவர் அடைக்கப்பட்டார். பின்னர் ஆஷ்ட்விச்சின் முகாமிற்கு மாற்றப்பட்டார். இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் சிறிதுகாலம் ஜெர்மனியிலிருந்த அவர் 1949 -ல் அமெரிக்காவிற்கு சென்றார். ராக்மில் பிரிக்ஸ் வதை முகாமில் தனது தாய் தந்தை சகோதரிகள் அவர்களது கணவன்கள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகள் மற்றும் உறவினர்களை சித்தரவதைகளுக்கு பலி கொடுத்தவர். ஆகையால் பெருங்களப்பலியான வதை முகாமின் ஞாபகங்கள் அவரது ஆழ்மனதில் பதிந்திருந்தது. அவற்றை தனது நாவல்கள் கதைகள் கவிதைகள் கட்டுரைகளில் பின்நாட்களில் அவர் வெளிப்படுத்தினார். அவரது படைப்புகள் பல இட்டிஷ் மொழியிலிருந்து ஹீப்ரு, ஜெர்மன், போலிஸ், ஸ்வீடீஷ், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அதில் ஏ கேட் இன் த கெட்டோ (A Cat in the Ghetoo) என்ற குறுங்கதைகளின் தொகுப்பு தமிழில் முதல் முறையாக சேரியில் பூனையாக வெளிவந்திருக்கிறது.
இந்த புத்தகத்தில் நான்கு குறுங்கதைகளும் ஒரு கவிதையும் இருக்கிறது. சேரியில் பூனை என்ற முதல் கதையில் ஒரு ரொட்டித் துண்டிற்காக பூனையை வைத்து ஷப்லுதோவிட்ச் என்பவனின் மனதை ராக்மில் பிரிக்ஸ் திறக்கிறார். இந்த கதையில் மருந்துக்காவது சாப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கும் இடத்திலும், இப்போது சேரியில் தாயிடம்கூட யாரும் ரொட்டியைப் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள் என்ற இடத்திலும் யூதர்களை அடைத்து வைத்த வதை முகாமில் நிலவிய பெரும் பசியை அறிந்து கொள்ளலாம்.
❗ஒரு பூனை - ஒரு பிரெட்" அலறினார்கள் குழந்தைகள். ஷப்லுதோவிட்ச் வியர்த்து விறுவிறுத்து, ஏறக்குறைய பிணமாகவே மாறிவிட்டான். அருகிலிருந்த தெருவொன்றில் திரும்பி, கொள்ளைக் காரர்களிடமிருந்து தப்பிப்பதுபோல் ஓடினான். அங்காடிப் பகுதியிலிருந்த கூட்டம் அவன் பின்னால் ஓடியது.
'ஒரு பூனை! ஒரு பிரெட்❗
இரண்டாவது கதையான கடவுளின் பெயரைப் புனிதப்படுத்துதல் என்பதில் வதை முகாமில் இருந்த பிணயெரி மண்டபத்தைப் பற்றியும் அதற்காக பிடித்துவரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும், பிணயெரி மண்டபத்திற்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் முறையையும், அவர்களின் சித்தரவதைகளையும், ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். இக்கதையின் இறுதியில் ரிக்காலே என்பவள் தன் தாயின் வழித்தடத்தை பின்பற்றி... "ஓ இஸ்ரேலே! கடவுள் எங்கள் எஜமான். கடவுள் ஒருவரே!" ... என பிணயெரி மண்டபத்திற்கு செல்கிறாள். (பிணயெரி மண்டபம் என்பது ரொட்டி சுடுவதைப்போல உயிருடன் யூதர்களை கொல்ல அமைக்கப்பட்ட எரிவாயு பொருத்தப்பட்ட அடுப்புகளை கொண்ட பகுதியாகும்).
சேரியில் அலமாரி என்ற மூன்றாவது கதை சற்று ஆசுவாசமளிக்க, கதையில் வரும் ஹெர்ஷல் ஷீஃப் என்பவன் தனது வீங்கிய கால் ஒருபுறமிருக்க அதை பொருட்படுத்தாமல் அக்கம் பக்கத்தாரிடம் தனக்கு அரிதாக கிடைக்கும் உணவோடு சேர்த்து சுகங்களையும் பகிர்ந்து கொள்கிறான்.
சேரியில் பெரேல் என்ற நான்காவது கதையில் வதை முகாமில் குழந்தைகள் தங்களது நாட்களை எவ்வாறு கடத்தினர் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். வதை முகாம் நரத்தைவிட எவ்வளவு கொடுமையானது என்பதையும் அதில் காட்டியிருக்கிறார்.
கடைசியாக அந்த கவிதை
வலிமையொடு ஆழவேரென்றிய விருட்சங்களைக்
காற்றினால் கிழித்தெறிய முடியாது,
வேரோடும் சாய்க்கமுடியாது.
நாம் நித்திய விருட்சங்கள்
உலகிற்கு ஊட்டமிகு பழங்களை வழங்கி,
நாம் நித்தியமாக இருப்போம்!
அப்படித்தான் இருக்கும் ஆனால் அது கடந்துபோகுமொரு காற்று.
விரக்தியடையாதே என் குழந்தையே.
இது ஒட்டு மொத்த யூதர்களின் தன்னம்பிக்கையாக இருக்கிறது.
- சேரியில் பூனை
- ராக்மில் பிரிக்ஸ்
- தமிழில்: அரியநாச்சி
- அடையாளம் பிரஸ்
அதிக காரம் மட்டுமல்லாமல் அதிகாரமும் தலைக்கேறினால் புரையேறும். அப்படி புரையேறினால் ஆட்சியாளர்கள் எவ்வாறு கண்மூடித்தனமாக மாறுவார்கள் என்பதற்கு ஹிட்லரே முன்னுதாரணம். அதுபோல் ஒரு இனத்தை அழித்தல் என்பதற்கு யூதர்களே சாட்சியாக இருக்கிறார்கள். இந்த புத்தகம் அந்த யூதர்களின் வதை முகாமிற்குள்ளான வாழ்க்கையை சித்தரிக்கிறது. அது கொடிய பயங்கரமானதொரு அனுபவமாக இருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் இந்த புத்தகம் வதை முகாமிலிருந்து தப்பிப்பிழைத்த ராக்மில் பிரிக்ஸின் வாக்குமூலமாக இருக்கிறது. அது அடோல்ஃப் பர்கர், ஆன் ஃபிராங்க், விக்டர் ஃபிராங்க்ல், இம்ரே கெர்டாஸ், மாக்சிமிலியன் கோல்பே, ப்ரிமோ லெவி, ஃபிரிட்ஸ் லுஹ்னர்-பேடா, ஐரீன் நெமிரோவ்ஸ்கி, விட்டோல்ட் பிலெக்கி, எடித் ஸ்டீன், சிமோன் வெயில், ருடால்ப் எல்ட் வெல்பா யூரி வரிசையில் ராக்மில் பிரிக்ஸையும் இணைகிறது. மேலும் ஹாலோகாஸ்ட் (Holocaust) எனப்படும் பெருங்களப்பலி இலக்கிய வகையில் சேர்கிறது. மனிதனின் சகிப்புத் தன்மை எல்லை மீறும்போது உயிர் பிழைத்திருத்தல் முதன்மையாகிறது. அத்தகைய உயிர் பிழைத்திருத்தலிலும் தைரியம், நேர்மை, பரிவு, அன்பு, நகைச்சுவை இவற்றை கைவிடாத மனங்களை கொண்ட மனிதர்கள் இருப்பது அறிது. இந்த புத்தகத்தின் கதைகளில் அத்தகைய மனிதர்களை சந்திக்கலாம். அதே மனதுடன்தான் ராக்மில் பிரிக்ஸும் இந்த கதைகளை எழுதியிருப்பார் என்றே தோன்றுகிறது. எலினார் ரூசோவெல்ட் குறிப்பிட்டதைபோல... " மறக்க வேண்டுமானால் இதை வாசிக்க வேண்டும்"...