எல்லாம் ஒரு விளம்பரம்.
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்கள் இருந்தாலும் எந்த பயனும் இல்லாமல் போகும்.
ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு.
சென்ற பதிவில் அப்படியே விட்டுவந்த திருக்குறள். திருக்குறளை எங்கு வேண்டுமானாலும் விட்டுவரலாம். நமக்கு நல்ல அனுபவம் இருப்பதால் இந்த குறளுக்கு இதற்குமேல் இன்னும் விளக்கம் எதுவும் தேவைப்படாது என நினைக்கிறேன்.
ஆள்பவர்களை வம்பிழுத்து வைத்து செய்வது தனி சுகம்தான். நல்ல போதை. சாக்கு நிறைய லைக்குகளை அள்ளலாம். அதற்கு நேர்மாறாக அவர்களைப் பற்றி ஏதாவது நல்லதாக எழுதலாமே என்றால் சொல்லிக் கொள்வதைப் போல எதுவுமில்லை. ஒன்றைத் தவிர.
இந்த வருடம், அதுவும் மழைக்கு முன்பு, அதுவும் சிரமமான நோய்த்தொற்று காலத்திலும், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள், வாய்க்கால்களைத் தூர்வாரிய பணியை நிச்சையம் பாராட்டலாம். பொதுப்பணித்துறையின் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து இத்தகைய பணியை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடை மடை பகுதியில் இருக்கும் கடைக்கோடி கிராமங்களின் நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப் பட்டிருக்கின்றன. இந்த பணிக்காக ஒதுக்கிய நிதியையும் சேர்த்து வாரியது ஒருபுறமிருந்தாலும் நன்மையே நடத்திருக்கிறது. அய்யோ!..டா... முல்லியாறா இது (முல்லை ஆறு)... அடப்பாற்றின் அழகு இப்பதான் தெரியுது... என நின்று நிதானித்து ஆற்றைப் பார்த்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள். மேலும் ஆற்றங்கரையோர ஆக்கிரப்புகளை அகற்றியும் முறையான கரைகளை உயரமாக எழுப்பியும் அஞ்சாறு வருஷ மழைக்கு கவலையில்லப்பா என பெருமூச்சு விட வைத்திருக்கிறார்கள். கிளை ஆறுகள் மட்டுமல்லாமல் வடி வாய்க்கால், வாழ வாய்க்கால், ராச வாய்க்கால், கொக்கி வாய்க்கால் என சிறுசிறு வாய்க்கால்களையும், கீழ குளம், பிள்ளையார் குளம், அரச குளம், ஆளங்குளம் என குளங்களையும் தூர்வாரி ஐந்து ஸ்டார் வாங்கியிருக்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் ஆடிப்பெருக்கில் அத்தனை நீர் நிலைகளிலும் தண்ணீர் கரைபுரண்டோடி மனதை குளிர்வித்தது நீண்ட வருடங்களுக்கு பிறகு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. குறுவை என்ற சாகுபடியை மறந்த விவசாயிகள் தற்போது விதைக்கலாமா நடலாமா சந்தேகத்துடன் உழுது வைத்து காத்திருக்கிறார்கள்.
விதைப்பதை விட நடுதலே சங்ககால மருத நில மக்களின் பயிர்த்தொழில் முறையாக இருந்திருக்கிறது. அதற்கு இந்த நற்றிணை பாடல் சாட்சியாக இருக்கிறது.
மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்
பெரு நெல் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்,
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
கவர்படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறி ஆயின், அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம் இல்
மா இருங்கூந்தல் மடந்தை
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே
தூங்லோரியார் இயற்றிய இந்த பாடல் தோழி தலைவனுக்கு சொல்லியது. தலைவன் உழவனாக இருக்கலாம். நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறி ஆயின்
விதைத்தலோ நடுதலோ இந்த வருடம் முழு நாட்டத்துடன் விவசாயத்தில் ஈடுபட தயாராகிக் கொண்டிருக்க அதற்கு தகுந்தாற் போல நீர்நிலைகளை தூர் வாரியது பாராட்டுக்குறியதே. மேலும் நடந்தாய் வாழி காவேரி திட்டத்தையும் தற்போது தூசி தட்டியிருக்கிறார்கள். இத்திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்கக் கோரியிருக்கிறார்கள். அகத்தியராக சீர்காழி கோவிந்தராஜன் பாடுவதைப்போல காவேரி மாறுவதை கற்பனை செய்யலாம். கோதாவரி கிருஷ்ணாவுடன் காவேரி இணையும் நதிகள் இணைப்பு திட்டமும் மத்திய அரசிடம் வழியுறுத்ததப் பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் நதிகளை இணைத்தால் ஒரு கோடி தருகிறேன் என்று கூறிய அந்த நல்ல ஸ்டாரையும், காவேரியை வைத்து பிச்சையெடுத்த பெருந்தலை சாமியாரையும் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. நடந்தாய் வாழி காவேரி திட்டம் என்பது திடக்கழிவு, கழிவுநீர் மற்றும் ஆக்கிரமிப்புகளிலிருந்து காவேரியை மீட்டெடுக்கும் ஜல்கங்காவின் தமிழ் வெர்சனாகும்.
பூவார் சோலை மயில் ஆலப்புரிந்து குயில்கள் இசை பாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!
நடந்தாய் வாழி காவேரி என்ற இந்த வரி சிலப்பதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதே பெயரில் தி.ஜானகிராமனும் சிட்டி என்கிற சிட்டி பெ.கோ.சுந்தரராஜனும் இணைந்தது ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். காவேரிக் கரையின் காட்சிகளை அதன் வரலாறு மற்றும் பண்பாட்டுடன் கோட்டோவியங்களை இணைத்து செவ்வியல் பயணக் கட்டுரையாக அதனை படைத்திருக்கிறார்கள். சிட்டியின் அந்திமந்தாரை சிறுகதை தொகுப்பையும், சில விசயங்கள் என்ற நகைச்சுவை கட்டுரையையும் வாசிப்பில் அவசியம் சேர்த்துக் கொள்ளலாம். இலக்கிய காலத்திலிருந்து இன்றுவரை இருக்கும் காவேரி ஒரு நதி அல்ல, பல தலைமுறைகளைக் கண்ட வரலாற்று சாட்சியாகும்.
Skymet Weather என்ற ஒரு இணையதளம் இருக்கிறது. விவசாயத்திற்கு பெரிதும் பயன்படும் வகையில் வாணிலை மற்றும் அதனைச் சார்ந்த நிகழ்வுகள், கட்டுரைகள், காணொளிகளை இதில் தொகுத்திருக்கிறார்கள். அவர்களின் முயற்சியில் வெளிவந்த குறும்படத்தை பார்க்க நேர்ந்தது. விழிப்புணர்விற்காக படைக்கப்பட்ட அந்த குறும்படம் தற்கொலை செய்துகொள்ளும் இந்திய விவசாயிகளைப் பற்றியது. ஆனால் அந்த சோகம் எதுவும் இந்த குறும்படத்தில் இல்லை. அதற்கு பதிலாக அற்புதமான ஒரு அனுபவத்தை தருகிறது.
அந்த குறும்படம்:
நதிகள் மலைகள் என இயற்கை சார்ந்து, விவசாயம், கிராமங்கள் இவற்றை மனதில் கொண்டு பத்தில் இரண்டு திட்டங்களை இவ்வாறு செயல்படுத்தினாலே போதும் ஆள்பவர்கள் ஹீரோக்களாக கொண்டாடப் படுவார்கள்.
ஆள்பவர்களுக்கு மழை ராசி, தாணிய ராசி என்றெல்லாம் இருக்கிறதாம்.
திரையில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜத்தில் வில்லனாகவும், திரையில் வில்லனாக இருப்பவர்கள் நிஜத்தில் ஹீரோவாக வாழ்வதும் நம்பியார் காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது. அதற்கு தற்போதைய உதாரணம் சோனு சூட். இந்த லாக்டவுன் எனும் பொது முடக்கத்தில் ஹீரோக்கள் குடியும், குட்டியும், குடித்தனமும், சைடு டிஷ்ஷும், கஞ்சாவுமாக பண்ணை வீடுகளில் கும்மாளமிட்டுக் கொண்டிருக்க (அபின் பஞ்சாமிருத டப்பாவில் கிடைக்கிறதாமே!) சில நற்காரியங்களை சோனு சூட் செய்து வாருகிறார். ஏழை விவசாயிக்கு டிராக்டர் வழங்கியது, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்டது என இதில் அடங்கும். Icon of Humility என புகழப்படும் அவர் இவற்றை எல்லாம் தன் மன அமைதிக்காக செய்கிறேன் என்கிறார். தற்போது பிலிப்பைன்சில் உள்ள 1 முதல் 5 வயதிற்கு உட்பட்ட 39 குழந்தைகளுக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வாடகைக்கு விமானம் பிடித்து அவர்களை டெல்லி அழைத்துவர இருக்கிறார். எங்காவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்.
City of Life 2009 ஆம் சோனு சூட் நடித்து வெளிவந்த திரைப்படம். காஸ்மோபாலிட்டன் நகரம் என அழைக்கப்படும் துபாயில் வசிக்கும் இனம், மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கொண்ட மூன்று வெவ்வேறு தரப்பு மனிதர்களின் வாழ்க்கையை இந்த திரைப்படம் கதையாகக் கொண்டது. பளபளக்கும் துபாயின் இருண்ட பக்கங்களை இதில் காணலாம். சோனு சூட் இதில் ஒரு தரப்பு மனிதனாாக நடித்திருப்பார். கிளைமேக்ஸில் ஹீரோ இரத்தம் சொட்ட சொட்ட அடிக்க, பறந்து சென்று மின்கம்பத்திலோ முள் வேலியிலோ அல்லது கருமாரியின் சூலாயுதத்திலோ விழுந்து உயிர்விடும் சோனு சூட்டை இந்த திரைப்படத்தில் நீங்கள் பார்க்கவே முடியாது.
சோனு சூட் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர், அவர் மாமா மடகாஸ்கர் தீவு, அத்தை அர்ஜென்டீனா அப்படியிருக்க நம் நாட்டிற்கு அவர் எப்படி நல்லது செய்யலாம் என நல்லவேளையாக இதுவரை அவர் மீது யாரும் காழ்புணர்ச்சியை காட்டவில்லை. எல்லாம் ஒரு விளம்பரம் என நாதஸ் செந்திலாக அவற்றை செய்ய ஒரு பெரும் கூட்டமே இருக்கிறது.
எல்லாம் ஒரு விளம்பரம். விளம்பரம்தான் எல்லாமே. அவைகளே சந்தையை ஆழ்கிறது, ஆட்டிப் படைக்கிறது. சோப்பு போட்டால் தைரியமாக வெளியே செல்லலாம் என்ற விளம்பரம் வெளியில் சென்று வந்தால் சோப்பு போடுங்கள் என்கிறது. சோப்பு போடுவது அவசியம். நகைக்கடையில் தொடங்கி நக பாலிஸ் வரைக்கும் இந்த கொரோனா காலத்தில் எல்லா விளம்பரத்திலும் ஆண்டி பாக்டிரியா ஆண்டி வைரஸ் நிறைந்திருக்கிறது. பயத்தை காட்டி காலத்திற்கு தகுந்தாற்போல் விளம்புகிறார்கள். விளம்பரங்கள் இல்லையெனில் நுகர்வு இல்லை. அதுபோல் விளம்பரங்களில் உண்மையில்லை. ஒரு காஃபி விளம்பரத்தின் அடியில் இது கற்பனையாக சித்தரிக்கப்பட்டது என தைரியமாக போடுகிறார்கள். ஜாம் விளம்பரத்திலும், பால் பவுடர் விளம்பரத்திலும், சிமென்ட் விளம்பரத்திலும் அதனை காணலாம். ஆரம்பத்தில் திரைப்படங்களின் தொடக்கத்தில் திரையரங்குகளில் காட்சிகளாக நுழைந்த விளம்பரம் இன்று நமக்கு தேவையில்லை என்றாலும் ஏதோ ஒருவழியில் நம் பார்வைக்கு வந்துவிடுகிறது. நீங்கள் இரண்டு மணிநேரம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்கிறீர்கள் என்றால் அதில் 40 நிமிடங்கள் விளம்பரங்கள் நிறைந்திருக்கிறது. இலியானாவின் இடையை ரசித்துக் கொண்டிருக்கையில் இடை புகுந்து ஊதுபத்தி விற்பதை நம்மால் தடுக்கவே முடியாது. அதுபோல் "மார்கெட் ரிஸ்க் இருக்கு ஒரு நாள் மூடிட்டு ஓடிவிடுவோம் ஆனாலும் முதலீடு செய்யுங்கள்" என்பவனை தெரிந்தும் "என்ன முடிக்கு அதை சொல்லி விளம்பரம் செய்கிறாய்?" என எந்த கேள்வியும் கேட்க முடியாது. அதற்கு தகுந்தாற் போல நாம் மாறிவிட்டோம். ஒரு பொருளின் உண்மைத் தன்மை, அதன் தரம், அது தயாரிக்கப்படும் விதம், அதன் பண்பு, மதிப்பு என்பதொல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்றாகிப் போக நுகர்வை மாற்றிக் கொண்டுவிட்டோம். "அமோனியம் நைட்ரேட்டை அக்குளுக்குள் வைத்து படுத்தால் கனவில் ஆலியா பட் வருவார்... பட் அஞ்சி நிமிசம்தான் இருப்பார்" என விளம்பரம் செய்தால் அதையும் வாங்கிவிடுவோம்.
"From Cradle to Grave" தொட்டில் முதல் கல்லறை வரை என்ற நுகர்வோர் தத்துவமே கொடூரமான விளம்பரங்களுக்கு உந்துசக்தி. இது ஒருபுறமிருக்க இன்றைய விளம்பரங்களின் இலக்கு முதலில் குழந்தைகளாக இருக்கின்றனர். அடுத்து பெண்கள். ஆண்களுக்கு பர்சேஸிங்கில் டிராலி தள்ளும் வேலை. விளம்பரங்கள் சந்தையை எவ்வாறு நிர்ணயிக்கின்றன?... அதன் தாக்கம் எப்படிப்பட்டது?... குழந்தைகளை குறிவைக்கும் விளம்பரங்கள் எத்தகைய ஆபத்தானது?... என்பதைப் பற்றி Advertising & the End of the World மற்றும் Consuming kids: Commercialization of childhood என்ற
இரண்டு டாகுமெண்டரிகளைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
டிரைலர்:
டாகுமெண்டரியைக் காண: Click Here ⏩
இந்த இரண்டு டாகுமெண்டரிகள் நமக்கு பாடமாக இருந்தாலும் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
சரி!.. மனித குலத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
மனித மனங்களை மறுவடிவமைப்பு செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் ஹோமோ சேப்பியன்ஸாகிய நாம் அழிந்து விடுவோம். மனித குலம் முடிவுக்கு வந்துவிடும் என யுவால் நோவா ஹராரி தனது ஹோமோ டியஸ் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஹோமோ என்றால் மனிதன், டியஸ் என்றால் கடவுள், ஹோமோடியஸ் மனித கடவுள்.
மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது.
மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிந்துவிடும்.
இதுவும் யுவால் நோவா ஹராரி சொன்னதுதான். அதன்படி குரங்கிலிருந்து பரிணாம வளர்சிபெற்று வந்தவனுக்கு தன்னை கடவுளாக்கிக் கொள்ளும் அளவிற்கான இத்தகைய அறிவு எங்கிருந்து வந்தது. பிரபல ஆங்கில அறிவியல் எழுத்தாளர் ஜார்ட் டயமண்டின் The Third Chimpanzee: The Evolution and Future of the Human Animal புத்தகத்தில் அதற்கான விடையை நாம் தேடலாம். ஜார்ட் டயமண்ட் அமெரிக்காவைச் சேர்ந்தவர். உடலியல், உயிர் வேதியல், இயற்பியல், பறவையியல், சுற்றுச்சூழல், வரலாறு, சூழலியல், புவியியல், பரிணாம உயிரியல், மானுடவியல் என மனிதன் கை வைக்காத இயல் இடமேயில்லை. யுவால் நோவா ஹராரிக்கு முன்னோடியான இவரது புத்தகங்களின் தலைப்புகளே உள்ளிருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துபவை.
The Third Chimpanzee: The Evolution and Future of the Human Animal
Guns, Germs, and Steel: The Fates of Human Societies
The World Until Yesterday: What Can We Learn from Traditional Societies?
Why Is Sex Fun? The Evolution of Human Sexuality
Collapse: How Societies Choose to Fail or Succeed
தமிழில் மொழிபெயர்ப்பிற்கு சவாலாக இருப்பினும் விரைவில் இவரது புத்தகங்களை வாசிக்க சந்தர்ப்பங்கள் அமையலாம்.
ஒருபுறம் மனிதன் கடவுளாக மாறிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் மதத்தின் பெயரால் கடவுளை வைத்து பிழைப்பும் நடத்திக் கொண்டிருக்கிறான். பத்து மூட்டை நெல்லை அரைத்தால் எத்தனை மூட்டை அரிசி கிடைக்கும்?... ஒரு மூட்டை நெல்லை அரைத்தால் எத்தனை மூட்டை அரிசி கிடைக்கும்?... ஒரு நெல்லை அரைத்தால் எத்தனை அரிசி கிடைக்கும்?... என்ற புள்ளிவிபரங்களோடு சில கருப்பு சுப்பையாக்கள், கடவுளுக்கு மூட்டை மூட்டையாக கொடுங்கள் அவரும் மூட்டை மூட்டையாக கொடுப்பார் என வியாபாரம் செய்துவருகிறார்கள். மறுபக்கம் கடவுள் எந்த உயிரையும் கொல்ல அனுமதிப்பதில்லை என சொல்லிவிட்டு பல உயிர்களை பலி கிடா அல்லது பலி ஒட்டகமாக்கி சொந்த இனத்தையே அகதிகளாக மாற்றி அல்லல்பட வைத்திருக்கிறார்கள். மற்றவர்களோ கடவுள்தான் எங்கள் அடிக்கல்.. அவர் மீது நின்று கொண்டுதான் நாங்கள் அரசியல் செய்வோம்... என்ன நடந்தாலும் ஊர்வலம் நடக்கும்... உண்டியல் முக்கியம்... என்று இருக்கிறார்கள். இவர்களை isolation செய்து. இவர்களிடம் சமூக விலகளை கடைபிடிப்பதே சிறந்தது. மாஸ்க் மிக மிக அவசியம். மாஸ்க் Masque என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது. முகத்தை மறைக்க என்று பொருள். இத்தாலி வார்த்தை Maschera என்பதிலிருந்து வந்ததாகவும், இலத்தின் Masca வார்த்தையிலிருந்து வந்ததாகவும் கருதப்படுகிறது. Maskharah என்ற அரபு வார்த்தைதான் மாஸ்க் என்றும் சொல்வதுண்டு. மாஸ்க் என்பது வாய்மூடி மூக்குமூடி அல்ல, அது முகமூடி. பாதுகாப்பிற்காக, மாறுவேடத்திற்காக, பொழுதுபோக்கிற்காக, சடங்குகளுக்காக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்புலிருந்து அணியப்பட்டு வருகிறது. தற்போது கடவுளுக்கும் அது தேவைப்பட, கடவுளும் மதமும் இல்லாத மனிதனை காண்பதே அறிது. ஒரு மனிதன் பிறந்த பின் அவனுக்கு அடையாளமாக பெயர் வைக்கும் போதே அவன் எந்த மதத்தில் வளர வேண்டும் என தீர்மாணிக்கப் படுகிறது. பிறகு அவனுக்குள் தடுப்பூசி போடுவதைப் போல அம்மதம் பதிய வைக்கப்படுகிறது. மதம் என்பதைவிட மனிதநேயம் மகத்தானது.
கஜா புயலால் டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்ட நேரம் தற்செயலாக அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு கிராமத்திலிருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தோம். சிறுவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட் வழங்கையில் ஒரு சிறுவன் தனக்கு இன்னுமொரு பாக்கெட் வேண்டுமென கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான். ஒரு ஆளுக்கு ஒன்னுதான் தள்ளிப்போடா என அச்சிறுவனை விரட்ட அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. மனிதத்தை உணர முடிந்தது. அதை வைத்து கிறுக்கியது நினைவுக்கு வருகிறது.
ஒரு ஆளுக்கு ஒன்னுதான்
அங்கிட்டு போடா.
...
அண்ணே இன்னும்
ஒரு பாக்கெட் பிஸ்கட்
கொடுங்க.
...
மறுபடியும் மறுபடியும்
சொல்லுரேன்
போடான்னு.
...
எனக்கில்ல
மணிக்கு.
...
மணியா!
அது யாருடா?
...
மணி வந்து
...
மணி
...
மணி எங்க வீட்டு நாயிண்ண.
...
மணிக்கு காட்டும்
அந்த சிறு
மனிதநேயத்தை
எந்த புயலாலும்
புடுங்கிவிட முடியாது
மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்கள் ஏராளம் இருக்கின்றன. மனிதமும் அன்புமே மிகச் சரியான மதம். அதை வெளிப்படுத்துபவர்களே அம் மதத்தின் கடவுள் என சொன்ன அன்பே சிவம் திரைப்படத்தை அந்த பட்டியலில் முதலிடத்தில் வைக்கலாம். முன்ன பின்ன தெரியாத பையனுக்காக கண்ணீர் விடுர அந்த மனசு இருக்கே அதுதான் இந்த திரைப்படத்தின் அடிநாதம். அன்பே சிவம் திரைப்படத்தை பற்றியும் அதில் நடித்த எல்லா கதாபாத்திரங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து பக்கம் பக்கமாய் எழுதலாம். சனியன் மன்னிக்கவும் சங்குவிற்கும் அதில் இடமிருக்கிறது. Maddog கடைசியில் Goddam ஆக மாறிப்போகும். அன்பே சிவம் Planes Trains and Automobiles என்ற திரைப்படத்தின் தழுவல் என சிலர் சொல்வதுண்டு ஆனால் அந்த திரைப்படமும் அன்பே சிவமும் எந்த வகையிலும் ஒத்துப்போகாது. மேலும் அன்பே சிவத்தின் அந்த பாடல் இருக்கிறதே!
இதயம் என்பது சதைதான் என்றால் எறிதழல் தின்றுவிடும்
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 19 ஆம் தேதி உலக மனிதநேய தினமாக கொண்டாடப்படுகிறது. போர், இயற்கை பேரிடர்கள், பஞ்சம், நோய் போன்ற காலங்களில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுக்கு உதவுபவர்களும் இந்த நாளில் நினைவுகூறப்படுகின்றனர். Humanitarians என சேவை செய்பவர்கள் கௌரவிக்கப் படுகின்றனர். இந்த வருடம் கோவிட்19 நோய் தொற்றால் உலகமே வாய் மூடியிருக்க மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புறவு பணியாளர்கள், களப் பணியாளர்கள், அனைவரையும் கௌரவிப்பதாக WHO அறிவித்திருக்கிறது. சென்றவருடம் அவ்வாறு சேவை செய்த மனிதநேய செயல்பாட்டார்களில் 483 நபர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள், 125 நபர்கள் கொள்ளப் பட்டிருக்கின்றனர், 124 நபர்கள் கடத்தப்பட்டிருக்கின்றனர். 234 நபர்கள் காயம்பட்டிருக்கின்றனர் என்பது வேதனைக்குறிய செய்தியாகும்.
கடைசியாக ஒரு குட்டிக் கதை. ஒரு ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். பந்தையத்திற்காக பல குதிரைகளை அவர் வளர்த்து வந்தார். தன்னிடமிருக்கும் குதிரைகளில் சிறந்ததை தேர்ந்தெடுக்க அவர் ஒரு புதிய வழியை வைத்திருந்தார். அதன்படி குதிரைகளில் எதாவது ஒன்றினை அவர் தேர்வு செய்வார். அதற்கு உணவளிப்பது சுத்தப்படுத்துவது அலங்கரிப்பது பயிற்சியளிப்பது என மற்ற குதிரைகளைக் காட்டிலும் தனி அக்கறை செலுத்துவார் (Special Care). அந்த குதிரையை தலைமை குதிரையாக அறிவிப்பார். அதைப்பற்றி புகழ்ந்து பேசுவார். பந்தையங்களில் தோற்றால் கூட அந்த குதிரையை அவர் வழக்கப்போல் கவனிப்பதை தொடர்வார். இவை அனைத்தையும் மற்ற குதிரைகள் பார்க்கும்படியே செய்வார். அந்த தலைமை குதிரையும் "முதலாளி நம்மை இப்படி கவனித்துக் கொள்கிறாரே" என அவர் சொல் சொன்னபடி நடக்கும். பந்தையங்களில் பல வெற்றிகளை குவிக்கும். இதனை பார்க்கும் மற்ற குதிரைகளும் ச்சே.. நாமும் இப்படி ஆகனும்... என ஏங்கும். இது நிரந்தமல்ல. தலைமை குதிரைக்கு வயசாகும். பண்ணையாருக்கும் அடுத்த குதிரையை தேர்ந்தெடுக்கும் நேரம் வரும். பண்ணையார் அதே வழிமுறையைத்தான் இப்போதும் பின்பற்றுவார். வேறொரு குதிரை தலைமை குதிரையாகும். அப்படியானால் அந்த பழைய குதிரையின் கதி?.. புத்திசாலி குதிரையென்றால் பிழைத்துக் கொள்ளும். இல்லையெனில் அக் குதிரைக்கு என்ன நிகழும் என நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். Business Adminstration, Bussiness Tricks, வியாபார யுக்தி அல்லது செயல்பாடு என சொல்வார்களே அதுபோல் ஏதோவொரு கோட் சூட், சூ, டை என வைத்துக் கொள்ளுங்கள். அதன்படி பண்ணையாரின் இந்த ஜெயிக்க வைக்கப்படுகிற குதிரை பார்முலாவை சிறு குறு பெரு நிறுவனங்கள் தொடங்கி கிரிக்கெட் விளையாட்டு வரைக்கும் பல இடங்களில் பின்பற்றுவதுண்டு.
சில வருடங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா தான் அளவிற்கு ஒரு குண்டை தூக்கி போட்டிருந்தார். அது அப்போது புகைய, வெடிந்ததா? என தெரியவில்லை. நீங்கள் WWF, WWE என சொல்லக்கூடிய மல்யுத்த போட்டி நிகழ்ச்சிகளை பார்த்ததுண்டா?. அதில் அடிப்பது போல அடிப்பார்கள், குத்துவதைப் போல, உதைப்பதை போல, விழுவதைப் போல எல்லாம் போல செய்வார்கள். யார் வெற்றிபெறுவார் என முன்கூட்டியே முடிவு செய்திருக்க, போட்டியை பார்க்கும் நமக்கு சுவாரசியத்திற்கு குறைவிருக்காது. இதற்கும் இந்த கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் அடுத்த பதிவை இதிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். எல்லாம் ஒரு விளம்பரம்தானே. மீண்டும் சந்திப்போம்.