அடிக்கல் நாட்டுதல்.
இதுவரை புத்தகம், சினிமா, பாடல்கள், சில தகவல்கள் என தனித்தனியே பார்த்துவர, அவை மொத்தத்தையும் சேர்த்து காக்டெயில் கட்டுரையாக எழுதலாமே எனத் தோன்றியது. கொஞ்சம் நாட்டு நடப்புகளையும் சேர்த்து.
நாட்டு நடப்புகள் என்றால் அரசியல் இருக்க வேண்டும், அநீதிகளைக் கண்டு பொங்க வேண்டும், சமுதாய அக்கறை எனும் சட்டையை துவைத்து கம்போர்ட்டில் ஊற வைத்து அயன் செய்து மடிப்பு கலையாமல் அணிய வேண்டும், சட்டை கலர் மிக முக்கியம். மேலும் விமர்சனங்களுக்கு பதிலளித்து அதனை வைத்து நான்கைந்து நாட்கள் பிழைப்பு நடத்த வேண்டும். நம்மை யாரும் விமர்சனம் செய்வதில்லை, wow, super, nice, ❤, 💐 தவிர வேறெந்த கமெண்ட்டும் நமக்கு விழுந்ததேயில்லை. அது ஒருபுறமிருக்க... ரோம் பற்றியெரியும் போது பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன்... நீரோ என்றால் வெறுப்பை காதலிப்பவன் என்று அர்த்தமாம். நீரோ காலத்தில் பிடில் கிடையாது அது வயலின் என சொல்வதுண்டு. மேலும் ரோம் பற்றியெரியும் போது நீரோ மன்னன் ஆண்டியம் எனும் நகரில் இருந்தானாம். எப்படியோ அவனைப் போல எது நடந்தால் நமக்கென்ன என, மெதுவடையை யார் முதன் முதலில் சுட்டார்கள்... மொச்சைக் கொட்டை எந்த பழத்தில் கிடைக்கிறது.... அந்த மெக்சிக்கோ படத்தை பார்த்து விட்டீர்களா... இந்த உகாண்டா பாடலை கேட்டுவிட்டீர்களா...புலவர் மோசிகீரனார் புறநானூறு பாடல் 186 -ல் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?... என எழுதிவந்தவனுக்கு ஏன் இந்த திடீர் ஞானோதயம் என்றால் " எல்லாம் உணர்ந்து திருந்தியபோது எனக்குள் இருந்த புத்தன் சித்தார்த்தனாக மாறிக் கொண்டிருந்தான்"... சரி! கட்டுரைக்கு வருவோம். நீங்கள் தூர்தர்ஷன் தலைமுறை குழந்தை என்றால் முன்னோட்டமும் எதிரொலியும் நிச்சையம் நினைவிலிருக்கும். அடுத்த வாரம் எந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும் என்பது முன்னோட்டம். கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியினைப் பற்றி அலசி ஆராய்வது எதிரொலி. அதுபோல இந்த கட்டுரைகளை அமைக்கும் எண்ணம் இருக்கிறது.
தூர்தர்ஷன் என்றதும் நினைவுக்கு வருகிறது. லாக்டவுன் முடக்கத்தில் அனைத்து சேனல்களும் பழைய நிகழ்ச்சிகளை மாஸ்க் அணிந்து தூசி தட்டி மறு ஒளிபரப்பு செய்துவர, தூர்தர்ஷனும் சக்திமான் உள்ளிட்ட சீரியல்களை ஒளிபரப்பியது. அதிலும் குறிப்பாக பொதிகையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான குறும்படங்கள் கவனத்தை ஈர்த்தது. புதுமை பித்தனின் மனித யந்திரம், சா. கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள், சுஜாதாவின் பரிசு என சிறுகதைகளை தழுவிய அத்தனை குறும்படங்களும் அழகு ரகம். சாதாரணமானவர்களும் ருசிக்கும் அளவிற்கு இலக்கிய ரசம்.
இலக்கியத்தில் சமீப காலமாக நிகழ்ந்த இழப்புகளை சட்டென கடந்து போக முடிவதில்லை. கோவை ஞானியைத் தொடர்ந்து சா.கந்தசாமியும் இயற்கை எய்தியிருக்கிறார். சாயாவனத்தையும் முடங்கிப்போன அந்த சர்க்கரை ஆலையையும் கடந்து போகும் போதெல்லாம் கந்தசாமி நினைவுக்கு வருவார். மினிமலிசம் என சொல்லக் கூடிய ஸ்டைல் அவருடையது. எதையும் அவர் நீட்டி முழக்குவதில்லை. முழக்க நினைப்பதை நீட்டுவதில்லை. அவரது சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டிருக்கிறார்கள். நல்ல படைப்பும், நல்ல படைப்பாளிகளும் இட்லிமாவு, தோசைமாவு, இடியப்பமாவு, அரைத்தமாவு போலில்லாமல் அவ்வளவு எளிதாக புளித்துப் போய்விடுவதில்லை.
மாவு புளித்தல் என்பது நொதித்தல் வினை என சிறுவயதில் படித்த நியாபகம் இருக்கிறது. பாக்டீரியாவும் ஈஸ்ட்டும் செய்யும் கூட்டு களவாணித்தனம். ஈஸ்டிற்கு அழகிய தமிழில் நொதிமம், மதுவம். அதுபோல் அமோனியம் நைட்ரேட் உரமாக விவசாயத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது என படித்திருக்கிறேன். அது வெடிக்கும் தன்மை உடையது என்பது இப்போதுதான் தெரிந்திருக்கிறது. 2750 கிலோ லெபனான் துறைமுகத்தில் வெடித்திருக்கிறது. அமோனியம் நைட்ரேட் தனியாக இருக்கும் போது சமத்துதான். அதற்கு சேர்க்கை சரியில்லை என்றால் வெடிக்கும். இதனை சூடுபடுத்தினால் நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் நீர் ஆவியாகும், இது வெடிக்கும் வினையில்லை என்றாலும் வெடிக்கத் தூண்டலாம். நிலத்தை குடைய, மலைகளை தகர்க்க இதனைத்தான் பயன்படுத்துகின்றனர். அமோனியம் நைட்ரேட்டை சேமித்து வைக்கவும் பயன்படுத்துவதற்கும் 83 பக்கங்களைத் தாண்டிய வழிமுறைகள் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. அதன்படி தீப்பற்றும் இடங்களில் இதனை வைக்கக் கூடாது. குளேரேட்டுகள், கனிம அமிலங்கள், உலோக சல்பேட்டுகளுடன் சேர்க்கக் கூடாது. அவன் நைட்ரேட் ஜாதி, அவன் சல்போட், அவன் குளோரைடு ஜாதி என இவ்விடத்தில் ஜாதி பார்க்கலாம் தப்பில்லை. அமோனியம் நைட்ரேட் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் அதனை இறுக்கமாக மூடப்பட்ட கொள்கலனில் வைக்க வேண்டும். பல நாடுகள் இதனை விற்பனை செய்ய கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. உரத்திற்காக வாங்குகிறோம் என மற்ற தேவைகளுக்கு கள்ளத்தனமாகவும் விற்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் மறந்து கவனக் குறைவால், கையாளாத் தெரியாததால் தற்போது அது வெடித்திருக்கிறது. இதற்கு முன்பு 2015-ல் சீனாவில், 2013-ல் அமெரிக்காவில், 2007-ல் மெக்சிக்கோவில், 2004-ல் வட கொரியாவில் அமோனியம் நைட்ரேட் தீபாவளி கொண்டாடியிருக்கிறது. ஆய்வகத்தில் வேதியல் குழந்தைகள் விளையாடும் அமோனியம் நைட்ரேட்டையே பாதுகாப்பாக வைக்கத் தெரியவில்லையே, ஜேம்ஸ்பாண்டு படத்தில் வரும் யுரேனியம் புளுட்டோனியம் நிறைந்த அணு உலைகளை இவர்கள் எப்படி பாதுகாப்பார்கள் என்ற சந்தேகம் இந்த விபத்தின் மூலம் எழுகிறது.
எனது குட்டி மகள் மற்றவர்களைப் போல் இல்லாமல் சற்றே வித்தியாசமானவள். அவள் வளர்ந்து வரும்போது என்னிடம், 'நான் ஏன் மற்றவர்கள் போல் இல்லை?' எனக் கேட்டாள்.
அவள் பிறக்கும் போது குழந்தையாக இல்லை. எல்லா இடங்களிலும் தைக்கப்பட்ட ஒரு கோணிப்பை போல இருந்தாள். கண்களைத் தவிர வேறெந்த இடமும் திறந்திருக்கவில்லை. அவளுடைய மருத்துவ குறிப்பில், "இந்தப் பெண் குழந்தை பல சிக்கலான நோய்க் குவியல்களைக் (மலவாய், பெண் உறுப்பு, இடதுபக்க சிறுநீரகம் போன்றவை வளர்ச்சியில் குறைபாடோடு இருக்கிறது) கொண்டு பிறந்திருக்கிறது.
-இது செர்னோபிலின் ஒரு குரல்.
செர்னோபிலுக்கு முன்பு அணுவை அனைவரும் அமைதியான வேலையாள் என கருதினார்கள். அந்த வேலையாள் அடியாளாக மாறியது வேறு கதை. அதனால்தான் சமூக ஆர்வலர்கள் பலர் அணு உலைகள் ஆபத்தானது என கூறிவருகின்றனர். மறுபுறம் அணுவினால் அழிவில்லை அதனால் ஆக்க முடியும் என சொல்பவர்களும் உண்டு. அணுக் கழிவை சேமிப்பது பற்றி சில வருடங்களுக்கு முன்பு பிரபலமான ஒருவர் பேசியிருந்தார். அணுக் கழிவினால் பாதிப்பு எதுவுமில்லை, அது அப்படிப்பட்டது, இப்படிபட்டது, அங்கு வைத்திருக்கிறார்கள், அணுக் கழிவு நல்லது, சரக்கிற்கு சைடு டிஷ்ஷாக தொட்டுக் கொள்ளலாம், தயிர் சாதத்திற்கும் என்றெல்லாம் பேசியிருந்தார்.
அணுக் கழிவு என்றால் என்ன? அணுக் கழிவின் ஆபத்து எத்தகையது? அது எவ்வாறு சேமிக்கப்படுகிறது? என்பதைப் பற்றி டேனிஸ் இயக்குனர் மைக்கேல் மேட்சன் தயாரித்த இன்டூ எடர்னிட்டி (Into Eternity) டாகுமெண்டரியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த டாகுமெண்டரியில் பின்லாந்தின் ஓல்கிலுயோட்டோ தீவில் உள்ள அணு மின் நிலைய கழிவுகளை அந்த தீவின் ஒன்கலே களஞ்சியத்தில் எவ்வாறு புகைக்கின்றனர்? அதன் கட்டமைப்பு எத்தகையது? அதன் பின்விளைவுகள் என்ன? என அனைத்தும் காட்டப்படுகிறது. அது அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
டாகுமெண்டரியின் டிரைலர்:
லெபனான் துறைமுகத்தைப் போல சென்னை மணலியில் இருக்கும் கண்டெய்னர் நிலையத்திலும் 690 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் பல வருடங்களாக கிடப்பில் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் அது வெறும் அமோனியம் நைட்ரேட் தற்போது அது அய்யய்யோ! அமோனியம் நைட்ரேட். அதை என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சீண்டாமல் இருந்தால் கோடி புண்ணியம். மேலும் இதுபோல் வேறெங்கும் அமோனியம் நைட்ரேட் கிடப்பில் இருக்கிறதா என கூகுளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியல் என்பது உண்மை. உண்மையை கையாளத் தெரிய வேண்டும் உண்மையாக.
எதையாவது தேட கூகுள் பக்கத்தை திறந்தால் லேட்டஸ்ட் நியூஸ் என சில செய்திகள் கீழே காட்டப்படுகின்றன. அதில் பெரும்பாலும் சினிமா செய்திகளாக இருக்கின்றன. இலியானா எடையைக் குறைத்தார், பிரியங்கா நடையை மாற்றினார், அனுக்ஷா சர்மா நகம் வெட்டிக் கொண்டார் என எக்கச்சக்க பயனுள்ள செய்திகள். பற்றாக்குறைக்கு இந்த பொது முடக்கத்திலும் நடிகையரின் கிளுகிளுப்பாக போட்டோ ஷோக்கள் வேறு. அனைத்தும் அபூர்வமாக கிடைக்கும் டின் பீர் ரகம். அதிலும் வெறும் தலையணையை மட்டும் வைத்து தன்னதை மறைத்து போஸ் கொடுக்கிறார்கள். ஹார்மோன் அம்சத்துடன் பார்க்காமல் கலையம்சத்தோடு பார்க்க வேண்டுமாம். அதனையும் தவிர்த்து நடிகர்களில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிய செய்திகள் இந்த வாரம் அதிகம் இருந்தது. சுஷாந்த் அற்புதமான நடிகர் தோனியை 20 காப்பி போடுங்க என ஜெராக்ஸ் எடுத்தது போன்ற எம்.எஸ். தோனியில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. அவரது கடைசி திரைப்படம் தில் பெச்சாரா தற்போது ஹாட் ஸ்டாரில் வெளிவந்திருக்கிறது. தில் பெச்சாரா என்றால் உதவியற்ற இதயம் (helpless heart) என்று பொருள். அமெரிக்க எழுத்தாளர் ஜான் க்ரினின் தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் (The Fault in our Star) நாவலைத் தழுவி இந்த திரைப்படம் எடுக்கப் பட்டிருக்கிறது.
The fault dear Brutus, is not in our stars" ஷேக்ஸ்பியரின் ஜுலியஸ் சீசரின் புகழ்பெற்ற வசனம்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள் யூ டியூபில் கிடைக்கின்றன. அதில் ஹரிடே கட்டானி, ஜோனிதா காந்தி பாடிய மெயின் தும்ஹாரா பாடல் மனதை மயக்குகிறது. அர்ஜித் சிங், ஷாஷா திருப்தியின் குரலில் ஒலிக்கும் குல்கே ஜீன் கா பாடல் அட்டகாசம். ஹிட் லிஸ்டில் இடம்பெறும். இந்த வருடம் முழுவதும் அடியேனின் JBL டியூனரில் அதிரும் என்பதில் ஐயமில்லை. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். மனுசன் ஹிந்தி படமென்றால் ஒரு கை பார்த்து விடுகிறார். தமிழில் பிரம்மாண்டம், பெருந்தலைகளை விட்டுவிட்டு புதியவர் மற்றும் எளியவர்கள் பக்கம் அவர் திரும்பினால் எப்படியிருக்கும் என்ற ஆவல் இருக்கிறது.
அந்த பாடல்கள்:
ரஹ்மான் ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என கொளுத்திப் போடலாம். ஒரு வாரத்திற்கு பொழுது புகையும். ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா? என்றால் எந்த சூழலிலும் அது தேவைப்படாது எனத் தோன்றுகிறது. தமிழ் வாழ்க! என காரிலோ பைக்கிலோ ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, குழந்தைகளை நல்ல இங்கிலீஸ் மீடியத்தில் படிக்க வைத்துவிட்டு, ஹிந்தி ஒழிக என வலைத்தளங்களில் வாதாடுவதே தற்போதைக்கு சிறந்தது (யாருக்கும் தெரியாமல் கிளுகிளுப்பான ஹிந்தி வெப் சீரியல்களை பார்த்துக் கொள்ளலாம்). ஏனென்றால் அடுத்த தலைமுறையில் ஆங்கிலம் தன் ஆதிக்கத்தை முழுவதும் நிலைநாட்டிவிடும்.
இந்த கலவரத்தில் சமஸ்கிருத சண்டை வேறு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. "ஏதோ ஸ்பானிஷ் கொரியன்னு புது மொழியை கத்துகிட்டா நாலு நல்ல சினிமாவாது பார்க்கலாம் சமஸ்கிருதத்தை வச்சிட்டு என்ன செய்ய" என்ற நகைச்சுவை வலைத்தளங்களில் உலா வருகிறது. அது உண்மையும் கூட. ஸ்பானிஷ் மற்றும் கொரியன் திரைப்படங்கள் ஏ கிளாஸ் ரகம். அதிலும் சொட்ட சொட்ட ரொமான்ஸ் என்றால் கொரியன் திரைப்படங்களை விஞ்ச யாரும் கிடையாது. அந்த வகையில் கடைசியாக பார்த்த கொரியன் திரைப்படம் லீ - சாங் - டோங்கின் ஒயாசிஸ்(Oasis-2002). கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்று திரும்பிய லேசான மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கும், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கும் இடையேயான சிக்கலான காதல்தான் இந்த திரைப்படத்தின் கதை. கொரியன் திரைப்படங்களின் புகழ்பெற்ற ரொமான்டிக் ஜோடியான சோல் கியுங்-கு மற்றும் முன்-சோ-ரி இவர்கள்தான் இதிலும் ஜோடி. பழையனவற்றை கிளறி, நினைவுகளில் கொசுவர்த்தியை சுழற்றி இந்த திரைப்படம் உங்களை நிச்சையம் தூங்க விடாது.
திரைப்படத்தின் டிரைலர்:
தூங்குவது எப்படி? அதையும் சொல்லித்தர ஆன்லைனில் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் ஸூமிலோ ரூமிலோ வந்து அரைக்கிலோ பிளேடுகளை கொட்டிவிட்டு செல்வார்கள். இரண்டு நாட்களில் போட்டோகிராஃபி கற்றுக்கொள்வது எப்படியில் அப்படி மாட்டிக்கொண்டு தவித்திருக்கிறேன். How to Sleep? என கருப்பு வெள்ளையில் வெளிவந்த குறும்படம் ஒன்று இருக்கிறது. நியூயார்க்கின் ராபர்ட் சார்லஸ் பெஞ்ச்லி என்ற நகைச்சுவையாளரின் கதை இது. சார்லஸ் பெஞ்ச்லி ஒரு பத்திரிக்கையாளர். நகைச்சுவை பாணியில் கட்டுரைகளை எழுதியவர். காக்டெயில் கட்டுரை, புரூட் மிக்ஷர் கட்டுரை, பஞ்சாமிருத கட்டுரை என புதிதாக கட்டுரை எழுதுகிறேன் பேர்வழிக்கு அவர் முன்னோடியும் கூட. புகழ்பெற்ற வில்லியம் செய்ட்டர் மற்றும் ஹிட்ச்காக் படங்களிலும் அவர் தலை காட்டியிருக்கிறார். அவரது இந்த குறும்படம் ஆஸ்கார் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
அந்த குறும்படம்:
கடைசியாக புலவர் மோசிகீரனார் புறநானூறு பாடல் 186 -ல் என்ன சொல்லியிருக்கார் என அதையும் பார்த்து விடுவோம்.
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
மக்கள் நெல்மணிகளை தின்று நீரை பருகி வாழ்பவர்கள்தான். இருந்த போதிலும் அந்த நெல்லும் நீரும் அவர்களின் உயிராகாது. மன்னன்தான் அவர்களின் உயிராகும். ஒவ்வொரு மன்னனும் தான்தான் மக்களின் உயிர் என உணர்ந்து கொள்ளவேண்டும். தன் உயிரைக் காப்பது போல் குடிமக்களின் உயிரை காக்க வேண்டும். அடடா! எத்தனை அழகு. இதனை ஆள்பவர்கள் அனைவரும் ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள ஆணையிடலாம். இதுபோல் வள்ளுவரும் தன் பங்கிற்கு குறள் கொடுத்திருக்கிறார்.
ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு.
இதன் அர்த்தத்தை கண்டுபிடித்து வையுங்கள். அடுத்த பகுதியில் பார்க்கலாம். அதற்குமுன் இந்த காக்டெயில் கட்டுரை எப்படி இருந்தது என தெரியப்படுத்துங்கள். ராமா கிருஷ்ணா என இனிவரும் காலங்களில் இதுபோன்ற கட்டுரைகளை எழுதலாம் என இந்த பதிவில் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். அப்படி என்றால் நீ அந்த 130 கோடியில் ஒருத்தனா?..என கேட்பது புரிகிறது. அட ராமா என்றிருப்பவர்கள், அடேய் ராமா என்றிருப்பவர்கள், எனக்கு என்னமோ இந்த இரண்டு பிரிவினரைத் தவிர மீதமிருப்பவர்கள் அமைதியாக இருப்பதாக தோன்றுகிறது. அடிக்கல் பற்றி பேசப்போக அடிக்க கல் வந்துவிடுமோ பயமாக இருக்கிறது. இப்போதெல்லாம் அனைவருக்கும் தெரியும் படியே மிரட்டுகிறார்கள். வாய்கள் ஜாக்கிரதை. அதனால் சீக்கரம் கடையை சாத்திவிடுவது நல்லது. மீண்டும் சந்திப்போம்.