கடைசி மலை.
ஏதாவது ஒரு சட்ட வரைவுகளில் ஒயிட்னர் வைத்து அழித்துவிட்டு அதில் திருத்தம் செய்யப் போகிறோம் எனும்போதுதான் அப்படியொரு சட்டம் இருப்பதே நமக்கு தெரியவருகிறது. இ.ஐ.ஏ 2020 சட்ட திருத்த வரைவும் அப்படிதான். சாலைகள் அமைப்பது, நீர் பாசன வசதிகள், அணைக்கட்டுகள் கட்டுவது போன்றவற்றிற்காக தொடங்கப்படும் திட்டங்கள், இரும்பு, தங்கம், தாமிரம், நிலக்கரி, பெட்ரோலியம் தோண்டுவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், பெரும் தொழில்சாலைகள் அமைப்பதற்கான திட்டங்கள் மற்றும் கிடப்பிலிருக்கும் சில திட்டங்கள் இவைகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதிலிருந்து விலக்கு அளிப்பதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 2006 -ல் மத்திய அரசு தற்போது ஒயிட்னர் வைத்திருக்கிறது.
இந்தியாவில் தொடங்கப்படும் திட்டங்கள் அமல் செய்யும் முன்பே முறையான அனுமதி பெறவேண்டும். திட்டங்களை மதிப்பீட்டிற்கு உட்படுத்த வேண்டும். திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இதில் குறை இருந்தால் யார் வேண்டுமென்றாலும் புகார் அளிக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுற்றுச்சூழல் இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற பழைய சுற்றுச்சூழல் சட்டத்தை தற்போது திருத்தியிருக்கிறார்கள். இந்த புதிய வரைவு அறிக்கை சுரண்டுவார் சுரண்ட... தோண்டுவார் தோண்ட... பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்பது சந்தேகமில்லை. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதோடு பழங்குடி மக்கள், விவசாயிகள், மட்டுமல்லாமல் பீஸா ஆர்டர் செய்துவிட்டு இருபது நிமிடம் கூட காத்திருக்காமல் பொறுமை ஆறாது சுடச்சுட குதிக்கும் நகர வாசிகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய வரைவு அறிக்கையை அவசர அவசரமாக நிறைவேற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காத்திருக்கும் வேளையில் இது நிறைவேறினால் நாளை குளத்தை காணவில்லை, ஆற்றை காணவில்லை, ஏரியை, மலையை காணவில்லை என்றால் யாரிடம் சென்று கேட்பது என்ற சந்தேகம் எழுகிறது. இந்த டாகுமெண்டரியில் அவ்வாறு மலை ஒன்று காணாமல் போகிறது. அதைத் தேடி பின்தொடர இன்றைய சூழலில் நமக்கு எழும் சந்தேகங்களை அது கலைக்கிறது. மேலும் இத்தகைய சட்ட வரைவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பின்விளைவுகளையும் அலசி ஆராய்கிறது.
அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் இருக்கிறது புளூ ரிஜ் என்ற மலை. இது ஆப்பலேச்சியன் மலைத்தொடரின் ஒரு பகுதியாக இருக்கிறது. அங்கு பல காலமாக மாஸ்ஸி எனர்ஜி என்ற நிறுவனம் நிலக்கரியை தோண்டி எடுத்து வருகிறது. அதன் தொடர்சியாக அந்த மலையின் உச்சியை இடித்து சுற்றியிருக்கும் நீரோடைகளை அந்நிறுவனம் நிரப்பி வருகிறது இதனை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் பலர் போராட, அந்த மலைப்பகுதியில் காற்றாலைகளை அமைக்கும் திட்டத்தையும் அவர்கள் கையிலெடுக்கின்றனர். மாஸ்ஸி எனர்ஜி நிறுவனத்தார் நிலக்கரியைக் கொண்டு தாங்கள் தயாரிக்கும் மின்சாரத்தையும், உள்ளூர் வேலை வாய்ப்பையும் காரணம் காட்டுகின்றனர். அதே நேரத்தில் சமூக ஆர்வலர்கள் மாற்று வேலை வாய்ப்பினையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், எதிர்கால வாழ்வையும் தங்கள் கருத்தாக முன்வைக்கின்றனர். இந்த இருவரின் மாறுபட்ட அணுகுமுறையை இந்த டாகுமெண்டரி காட்டுகிறது.
வழக்குரைஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான ராபர்ட் எஃப் கென்னடி மற்றும் மரியா குன்னே, போ வெப், எட் விலோ, ஜோ இவர்களின் பார்வையில் இந்த டாகுமெண்டரி கூறப்படுகிறது. மேலும் வர்ஜீனியாவின் நிலக்கரி தொழில் சங்கத்தின் தலைவர் பில் ரானே, மாஸ்ஸி எனர்ஜி நிறுவனத்தின் முன்னால் தலைமை நிர்வாகி டான் பிளாங்கன்ஷிப் இவர்களின் கருத்துக்களையும், பல பொது மன்றங்களின் கருத்துக்களையும் எடுத்துக் காட்டுகிறது. இது மலைக்கான உள்ளூர் போராட்டம் என்றபோதிலும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
❗மாஸ்ஸி நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய நிலக்கரி நிறுவனங்களில் ஆறாவது இடத்திலிருக்கிறது. அப்படி என்றால் இதற்கு முன்பு ஐந்து மலை முழுங்கி அண்ணன்கள் இருக்கிறார்கள். 2000 முதல் 2006 வரை மாஸ்ஸி நிறுவனத்தின் மீது சுமார் 60000 சுற்றுச்சூழல் விதி மீறல் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனம் வருடத்திற்கு 40 மில்லியன் டன் நிலக்கரியை தோண்டி வருகிறது❗
அமெரிக்காவின் 50 சதவீத மின் உற்பத்தி நிலக்கரியை சார்ந்திருக்கிறது. அதற்கென பெரும்பான்மையான நிலக்கரி ஆப்பலேச்சியன் மலைத் தொடரிலேயே வெட்டப்படுகிறது. இதுவரை மேற்கு வர்ஜீனியாவில் மட்டும் நிலக்கரி சுரங்களுக்காக 500 சிறு குறு மலைகள் தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன. ஒரு மில்லியன் ஏக்கர் காடுகள் அழிக்கப் பட்டிருக்கின்றன. சுமார் 2000 மைல் நீீரோடைகள் தடம் தெரியாமல் மூடப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் அரசுக்கு தெரிந்தே நிகழ, இதற்காக முடக்கப்படும் பெருந் தொகையையும் அதற்கு பின்னாலிருக்கும் அரசியலையும் இந்த டாகுமெண்டரி வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதைவிட ஒரு ஜனநாயக நாட்டில் சுற்றுச்சூழல் சார்ந்த சட்டங்களை பெரு நிறுவனங்கள் தங்களுக்கு எவ்வாறு சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர், அதிலிருக்கு ஓட்டைகள் எத்தகையது என்பதையும் காட்டுகிறது. மேலும் படித்தவர்கள், பண்பானவர்கள், விவரம் தெரிந்தவர்கள், பணக்காரர்கள் வாழுமிடம் என சொல்லி சொம்பைத் தூக்கிக் கொண்டு உலகிற்கே நாட்டாமை செய்யும் ஒரு நாட்டிற்கே இந்த கதி என்றால்! நமக்கெல்லாம் என்ன நிகழும் என்ற பயத்தையும் காட்டுகிறது. கடைசியாக இ.ஐ.ஏ 2000 வரைவிற்கு கருத்து தெரிவிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் நமது புரிதலுக்கும் இந்த டாகுமெண்டரி உதவுகிறது.
The Last Mountain
Diercted by - Bill Haney
Written by - Bill Haney, Peter Rhodes
Narated by - William Sadler
Music by - Clauido Ragazzi
Cinematography - Tim Hotchner, Stephen Mc Carthy, Jerry Risious
Country - US
Language - English
Year - 2011.
டாகுமெண்டரியைக் காண