மடகாஸ்கரின் ஒத்தெல்லோ.
புராண இதிகாச கதைகள், தொன்மவியல் நாட்டுப்புற கதைகள், பிரபல நாவல்கள், சிறுகதைகள், காமிக்ஸ் கதைகள் இவற்றை நேரடியாக திரைப்படமாக்குவது என்பது ஒருவகை. அதன் சாராம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு தங்களது சூழ்நிலைக்கு தகுந்தவாறு படமாக்குவது மற்றொரு வகை. முதல் வகையில் உள்ளது உள்ளபடி இருக்க வேண்டும். எதையாவது மாற்றினால் முன் பின் பக்க ஓர விளைவுகள் நிச்சையம். இரண்டாம் வகைக்கு அப்படியில்லை, முழு சுதந்திரம் உண்டு. எடுத்துக்காட்டாக மகாபாரத கதையில் வரும் கர்ணனின் வாழ்க்கையை, ஒரு பிரபல நல்ல தாதா, அவருக்கு ஒரு ஸ்டார் அடியாள், இவர்களுக்கிடையேயான நட்பு, அம்மா பாசம், போர்வை சென்டிமெண்ட், கொஞ்சம் காதல், யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே, மொட்டை வில்லன், ரசிகர்கள் ஏமாறாமல் இருக்க கிளைமேக்ஸில் உல்டா திருத்தம் என படமாக்கலாம். மகாபாரதம் இராமாயணம் தொடங்கி ஹேமரின் இலியட், ஒடிசி, என புராண இதிகாசங்கள் மட்டுமல்லாமல் நவீன இலக்கியங்களில் ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, ஹெமிங்வே, ஃபிரான்ஸ் காஃப்கா, மொப்பஸான், ஸெல்மா லாகர் லெவ் என பலரது கதைகள் இரண்டாவது வகையில் திரைப்படமாக்கப் பட்டிருக்கின்றன. இந்த திரைப்படமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். கதை ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோவை அடிப்படையாகக் கொண்டது. கதைக்களம் மடகாஸ்கர் தீவு.
முதலில் ஒத்தெல்லோ கதையை பார்த்துவிடுவது நல்லது. இனவெறி, பொறாமை, வஞ்சகம், துரோகம், பழிவாங்குதல், காதல் கடைசியில் மனந்திருந்துதல் இவைகள் கலந்ததே ஒத்தெல்லோவின் கருப்பொருள். வெனிஸ் இராணுவத்தின் தளபதியான ஒத்தெல்லோ, அவனது காதல் மனைவி டெஸ்டமெனோ, அவனது படைவீரனும் நண்பனுமான மைக்கேல் காசியோ, மற்றும் நண்பனும் நயவஞ்சகனுமான இயாகோ, இயாகோவின் காதலி எமிலியா இவர்கள்தான் முக்கிய கதாபாத்திரங்கள்.
வெனிஸ் நகர பணக்கார பிரபு ஒருவனின் மகளான டெஸ்டமெனோவை கருப்பினத்தை சேர்ந்த ஒத்தெல்லோ காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறான். இராணுவ தளபதியான ஒத்தெல்லோ தனது நன்மதிப்பிற்கும் நட்பிற்கும் உட்பட்ட படைவீரன் மைக்கேல் காசியாவிற்கு பதவி உயர்வு அளிக்கிறான். இந்த பதவி உயர்விற்கு தானே தகுதியானவன் என நினைக்கும் இயாகோ ஒத்தெல்லோவிற்கும் காசியாவிற்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி இருவரையும் பழிவாங்க திட்டம் தீட்டுகிறான்.
இயாகோ ஒருநாள் காசியோவை அளவிற்கு அதிகமாக மது அருந்தத் தூண்டி படைவீரர்களுடன் சண்டையிடச் செய்கிறான். அதனை பெரிதாக்கி ஒத்தெல்லோவின் கவனத்திற்கு கொண்டு சென்று அவனது பதவி உயர்வை தடுக்கிறான்.குடி போதையில் தான் செய்த தவறை உணரும் காசியோவை ஒத்தெல்லோவின் மனைவி டெஸ்டமெனோவிடம் மன்னிப்பு கேட்க அனுப்பி வைக்கிறான். காசியோ மற்றும் டெஸ்மெனோ சந்திப்பை இயாகோ தவறுதலாக ஒத்தெல்லோவிடம் சித்தரிக்கிறான். மேலும் டெஸ்டமெனோவின் கைக்குட்டையை காசியோவின் கைக்கு கிடைக்கச் செய்து அதனை ஒத்தெல்லோ பார்க்கும்படி சூழ்ச்சி செய்கிறான். இதனால் கணவன் மனைவிக்கு இடையிலான உறவில் விரிசல் விழ, ஆத்திரத்தில் படுக்கையிலிருக்கும் டெஸ்டமெனோவை ஒத்தெல்லோ கொலை செய்கிறான்.
இது ஒருபுறமிருக்க காசியோவைக் கொல்ல இயாகோ அடியாட்களை அனுப்புகிறான். தன்னைக் கொல்ல வருபவர்களிடமிருந்து தப்பிக்கும் காசியோ அடியாட்களுக்கு இயாகோ எழுதிய கடிதத்துடன், காயத்துடன் ஒத்தெல்லோவை சந்திக்கிறான். அந்த கடிதத்தை கண்ட ஒத்தெல்லோ தன் மனைவி டெஸ்டமெனோவும் நண்பன் காசியோவும் குற்றமற்றவர்கள் என உணர்கிறான். இறுதியில் தன்னுடைய உடைவாளின் மீது தானே வீழுந்து ஒத்தெல்லோ உயிர்விடுகிறான், என்பதே இந்த துன்பியல் நாடகத்தின் கதையாகும்.
❗“I KISS’D THEE ERE I KILL’D THEE: NO WAY BUT THIS; KILLING MYSELF, TO DIE UPON A KISS” தான் கொலை செய்த மனைவியை முத்தமிடுவதற்கு முன்பு ஒத்தெல்லோ சொன்ன கடைசி வார்த்தை இதுதான். பின்னர் தன்னைத்தானே குத்திக்கொண்டு தன் மனைவி டெஸ்டமெனோ உடலின் மீது முத்தமிட்டு விழும்போது அவன் சொன்னதும் இந்த வார்த்தையைத்தான். இதுவே இந்த நாடகத்தில் ஒத்தெல்லோ பேசிய கடைசி வசனமும் கூட❗
அத்தகைய புகழ்பெற்ற நாடகக் கதையை இயக்குனர் அலெக்சாண்டர் அபேலா மடகாஸ்கரின் தீவுக்கு தகுந்தார் போல இந்த திரைப்படத்தில் மாற்றியிருக்கிறார்.
இளம் ஸ்பானிஷ் மாணவரான கார்லோஸ் (காசியோ) புகழ்பெற்ற தியோசன் கதையைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மடகாஸ்கரின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள அம்போலா என்ற தொலைதூர மீன்பிடி கிராமத்திற்கு வருகிறான். அத்தீவில் மீன்பிடி தொழில் செய்யும் சோலி (ஒத்தெல்லோ) என்பவனுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறான். சோலி பிரெஞ்சு பெண்ணான தனது காதலி மோனாவுடன் (டெஸ்டமெனோ) வசித்து வருகிறான். மோனா அத்தீவில் கைவினை பொருட்களை விற்பனை செய்வதோடு அங்கிருக்கும் பெண்களை ஒன்றிணைத்து ஒரு சமூக மையத்தையும் நடத்துகிறாள். யான் (இயாகோ) என்ற பிரெஞ்சு வர்த்தகன் கடல்நீரிலிருத்து பனிக்கட்டிகளை உருவாக்குவதில் அத்தீவிலிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறிஞ்சி வருகிறான். இதனை எதிர்க்கும் மோனாவை அவன் பழிவாங்கத் துடிக்கிறான். தன் காதலி அபியை (எமிலியா) பயன்படுத்தி அதற்கென சதி திட்டத்தில் ஈடுபடுகிறான். அதில் ஆராய்ச்சி செய்ய வரும் கார்லோசும் சிக்கிக் கொள்கிறான். யான் நினைத்து நிறைவேறியதா! என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
யான் காலனியாதிக்கத்தின் ஒட்டு மொத்த உருவகமாகவும், ஏகாதிபத்தியம், சுரண்டல், ஊழலின் சாட்சியாகவும் இருக்கிறான். மோனா அதனை எதிர்த்து போராடுபவளாகவும், சோலி நிறவெறியின் அடையாளமாகவும் அமைதியாகவும், கார்லோஸ் அப்பாவியாகவும், அபி வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் ஆர்வம் கொண்டவளாகவும் திரைப்படத்தில் உலாவருகிறார்கள். அழகான கடல், அதன் கரை, அக்கரையிலிருக்கும் குடிசை வீடுகள், வானம், வானத்து பட்டைகள், உதயம், அஸ்தமனம் என வண்ணங்களால் குழைத்த கடலும் கடல் சார்ந்த காட்சியமைப்புகளே திரைப்படத்தின் மொத்த அழகு எனலாம். கடற்கரைக்கு சென்று திரும்பினால் உப்புக் காற்றின் வாசனையையும், காலுறை அல்லது உடைகளில் சிறிதளவு கடற்கரை மணல் ஒட்டியிருப்பதையும் நாம் உணரலாம். அத்தகைய உணர்வை ஒளிப்பதிவு ஏற்படுத்துகிறது. மாகிபெஃபோவைத் (மக்பத்) தொடர்ந்து நவீன கலாச்சாரத்திற்கு தகுந்தாற்போல் ஷேக்ஸ்பியரின் தழுவலை அதுவும் உணர்ச்சிகரமாக அலெக்சாண்டர் அபேலா கையாண்டிருக்கிறார். வர்த்தக ரீதியாக இந்த திரைப்படம் வெளியிடப்படவில்லை என்றாலும் உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பலரது பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத் தக்கது. மனிதனின் மகத்துவம் பொறாமை மற்றும் பேராசையால் திசைதிருப்பப் படுகிறது. வள்ளுவர் வழியில் சொல்ல வேண்டுமானால்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
அதைத்தான் இந்த மடகாஸ்கர் ஒத்தெல்லோவும் உணர்த்துகிறான்.
Souli
Diercted by - Alexander Abela
Written by - William Shakespeare
Music by - Deborah Mollison
Cinematography - Joseph Areddy
Country - France, Madagascar
Language - French, Madagacy
Year - 2004.