நமக்கு சாப்பாடுதான் முக்கியம்.

எது நடந்தால் நமக்கென்ன நமக்கு சாப்பாடுதான் முக்கியம். விளையாட்டாக சொன்னாலும் அதுதான் உண்மையும் கூட. மனித குலத்தின் வளர்ச்சி உணவிற்காக உணவிலிருந்து தொடங்கியதுதான். இந்த லெக் பீஸ் எனக்குதான்... இல்லை இல்லை எனக்குதான்... என மனிதன் சக மனிதனிடம் முதன்முதலாக சண்டையிட்டுக் கொண்டதும் உணவிற்காகதான். உணவால் நிகழ்ந்த சமுதாய மாற்றங்கள் ஏராளம். உணவால் எழுந்த புரட்சிகளும், உணவிற்காக நடந்த போர்களும் இருக்கிறது. உணவை சுற்றிதான் உலகமே இயங்குகிறது. உணவின்றி அமையாது உழவு. அதற்கு பிறகுதான் உழவின்றி அமையாது உலகு. அதனால் சாப்பாடுதான் நமக்கு முக்கியம். இது ஒருபுறமிருக்க உலகிலிருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும், அட ஏன்! ஒவ்வொரு தெருவிற்கும் தனித்துவமான உணவு வகைகள், உணவு பழக்க வழக்கங்கள், அதன் செய்முறைகள், கைப்பக்குவங்கள் என இருக்கிறது. கீழத்தெருவின் நாட்டுக்கோழி குழம்பு வாசனை ஒரு நாளும் மேலத்தெருவில் வீசியதில்லை.
உலகின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து, அங்கு வாழும் மனிதர்களை சந்தித்து, அங்கிருக்கும் எல்லா வகை உணவுகளையும் ஒரு கை, ஒரு வாய் பார்ப்பவர்களே வாழ்க்கையின் ருசி அறிந்தவர்கள். அந்த வகையில் உணவு என்பது வெறும் ருசி பசியோடு நில்லாமல் உணர்வோடு கலந்திருக்க அத்தகைய உணவைப் பற்றிய ஒரு நிகழ்ச்சிதான் கிரேஸி ஃபுடி.
Travel XP தமிழ் சேனலில் ஒளிப்பரப்பப்படும் இந்த குட்டி நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் சந்து பொந்துகளில் கிடைக்கும் உணவு வகைகளைப் பற்றி நாம் மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம். இதுவரை மொத்தம் மூன்று சீசன்களை கடந்த இந்நிகழ்ச்சியின் முதல் இரண்டில் பிரசாந்த் என்பவர் டில்லியின் தெருக்களில் கிடைக்கும் பானிபூரி , வெங்காய சமோசாவில் தொடங்கி கேரளாவின் கடலை கிரேவி புட்டு, தேங்காய் பூ அல்வா, ஆலப்புழா புகழ் ஆப்பம் இறால் கறி வரை இந்தியாவின் பிற பகுதிகளின் உணவு வகைகளை எச்சில் ஊறும் அளவிற்கு தெரியப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து முத்தான மூன்றாவது பகுதியில் நாஞ்சில் விஜயன் அவருக்கே உரித்தான நகைச்சுவை தொணியில் தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் உணவு வகைகளை அது எங்கு கிடைக்கிறது எனத் தேடி மாவட்ட வாரியாக சுற்றிக் காட்டி ரோடு ஷோவாக அவற்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். சென்னையில் தொடங்கி ஊட்டிவரை என இதுவரை மொத்தம் 12 எபிசோடுகளை கடந்த இந்நிகழ்ச்சி தற்போதைய சூழலில் நிறுத்தப்பட்டாலும் அவ்வபோது மறு ஒளிபரப்பாக காணக் கிடைக்கிறது. அமேசான் பிரைமிலும் இதனை காணலாம். வாழ்வின் ருசியறிய நீங்களும் காணத் தவறாதீர்கள்.