அர்த்தநாரீசுவரர்.

ர்த்தம் என்றால் பாதி... நாரி என்றால் பெண்... ஈசுவரர் என்பது கடவுள்... பாதி பெண்ணான கடவுள் அல்லது அரை பெண்ணாக இருக்கும் இறைவன் என்று பொருள். வலப்பக்கம் ஆணாக சிவன் (பரமசிவன்), இடப்பக்கம் பெண்ணாக சக்தி (பார்வதி) கலந்த இந்து மதத்தின் சிவபெருமானின் உருவத் தோற்றத்தில் இதுவும் ஒன்று. அர்த்தநாரனரி, அர்த்தநரிஷா, அர்த்தயுவதீசுவரா, கௌரீசுவரர், உமையொரு பங்கன், மங்கையொரு பாகன், மாதொரு பாகன் என்ற பெயரும் உண்டு. அம்மையப்பன் அதைவிட அழகு. 

சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை. ஆணின்றி பெண்ணும், பெண்ணிற்றி ஆணும் இல்லை என வாழ்வியலை குறிக்கும் உருவம். ஆணும் பெண்ணும் சமம் 50-50 என்பதை உணர்த்தும் அவதாரம் இந்த அர்த்தநாரீசுவரர். 

பிரம்மா இந்த உலகை உருவாக்கினார். அதில் தாவரங்கள் விலங்குகள் பறவைகள் மீன்கள் என பல உயிரினங்களை படைத்தார். ஆனால் அனைத்தையும் ஆணாகவே படைத்துவிட்டார். ஆணாதிக்கத்திற்கு அப்போதே அடிக்கல் நாட்டியவர் பிரம்மா. அதனால் உயிரினங்களின் உற்பத்தியே இல்லாமல் போனது. சிவபெருமான் தனித்திருப்பதே இதற்கு காரணம் என உணர்ந்த பிரம்மா அவரை வேண்டினார். அப்போது சிவனுக்கும் சக்திக்கும் எதோ சிறு சண்டையாக இருந்திருக்கலாம். அதை மறந்து சிவன் தனது உடம்பில் ஒரு பாதியை சக்திக்கு கொடுத்து ஆண் பெண் இருவரும் உயிர்களின் உற்பத்திக்கு தேவை என அர்த்தநாரீசுவராக காட்சியளித்து பிரம்மாவிற்கு புரிய வைத்தார் என்பது சிவபுராண கதையாகும். 

மற்றொரு கதையில் மாபெரும் சிவ பக்தரான பிருங்கி முனிவர் என்பவர் சிவனை தரிசிக்க ஒருமுறை கைலாசத்திற்கு சென்றார். அங்கு சக்தியுடன் சிவபெருமான் அமர்ந்திருக்க சிவனை மட்டும் அவர் வணங்கினார். இதனால் கோபமுற்ற சக்தி சிவனின் உடலில் பாதியை வாங்கிக்கொண்டு இனி எப்படியும் என்னையும் சேர்த்தே வணங்கத்தான் வேண்டும் என பிருங்கி முனிவருக்கு அர்த்தநாரியாக காட்சி தந்தார். ஆனாலும் முனிவர் வண்டாக உருமாறி அர்த்தநாரி உருவத்திலிருந்து சிவனை மட்டும் பிரித்தெடுத்து பாதியே போற்றி என தனியாக வணங்கினார். சக்திக்கு கோபம் இன்னும் சற்று அதிகமாகி முனிவரை தசையற்ற, அசைய இயலாதவராக மாற்றினர். பிறகு பிருங்கி முனிவர் நடக்க இயலாமல் அல்லல் பட்டு, மூன்றாவதாக ஒரு காலினை பெற்று, இன்னல்கள் பல கடந்த கதை இன்னும் நீ.........லும், ஆகையால் இந்த குறும்படத்திற்கு வருவோம். சிவனோ சக்தியோ உயிர்களின் தேவைக்கோ அல்லது வீண் பிடிவாதத்திற்கோ பாதிக்கு பாதியாக தங்களை தாங்களே மாற்றிக்கொண்ட தோற்றம்தான் அர்த்தநாரீசுவர். இந்த குறும்படத்தின் நாயகனும் அப்படித்தான் தனது வழக்கமான வேஷத்தை கலைத்துவிட்டு ஒருநாள் அர்த்தநாரிசுவராக மாறுகிறார். அவர் கடவுள் கிடையாது. அல்லது கடவுளின் அவதாரம், தூதுவர், ஏஜென்ட் என எதுவும் கிடையாது. அன்றாடம் கஞ்சிக்கே வழியில்லாத சாதாரண ஏழை அவர். வளர்ச்சி என ஒருபக்கம் வீங்கி மறுபக்கம் சுறுங்கிக் கொண்டிருக்க, சுறுங்கிய பக்கம் நடப்பது தெரியாமல் நிறைந்திருக்கும் அப்பாவி இந்தியர்களில் அவரும் ஒருவர். அப்படியிருக்க அவர் ஏன் அர்த்தநாரிசுவராக மாறுகிறார்?... எதற்கு? மற்றும் யாருக்காக மாறுகிறார்?...சொன்னால் சுவாரசியம் போய்விடும் ஆகையால் குறும்படத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். 


Ardhonariswar
Written & Directed by - Debraj Naiya
Cinematography - Abhishek Sinha
Music by - Sujoy Dass
Year -2018
Country - India
Language - Bengali