பங்காளி தேசத்தின் குரல்.
தொடர்ச்சியாக 4 சீசன்களுக்கு பிறகு M டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கோக் ஸ்டுடியோ இசை நிகழ்சியினை பார்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்க்காமல் போனது. ஊர் சுற்றிய வாழ்க்கையும், வேலைப்பளுவுமே அதற்கு காரணம். மேலும் M டிவியின் தரிசனம் கிடைப்பதே அபூர்வமாக இருந்தது. மாற்றப்பட்ட செட்டப் பாக்ஸ் கேபிள் சட்டத்தாலும், ஒரு ரூபாய்தான்.. இரண்டு ரூபாய்தான்.. வெறும் ஐந்து ரூபாய்தான்.. மாதம் முழுமைக்கும்... என கூவிக் கூவி விற்கும் நிலைக்கு ஆளான டிடிஎச் ஒளிபரப்பாலும் M டிவியின் இடத்தை கண்டுகொள்வது சிரமமாக அமைந்தது. அப்படியே கண்டுபிடித்தாலும் மலைப்பாம்பு பிடிப்பது, மண்புழு தின்பது, மாடியிலிருந்து குதிப்பது, நெருப்பை தாண்டுவது, சாக்கடையில் குளிப்பது, புலிக்கு பல்லு விலக்குவது, கரடிக்கு பேன் பார்ப்பது, காண்டாமிருகத்திற்கு குXXX....வேண்டாம் விடுங்கள், என M டிவியில் எப்போது பார்த்தாலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வீர தீர சாகச நிகழ்ச்சிகளுக்கிடையே இந்த இனிமையான இசை நிகழ்ச்சி எப்போதுதான் வரும் என தேடியது பெரும்பாடாக இருந்தது. சமீபத்தில் பார்த்த இத்தகைய சாகச நிகழ்ச்சியில் பிகினி அணிந்த பெண்ணொருத்தி குதிரை கொட்டிலில் சாணியள்ளிக் கொண்டிருந்தாள். குதிரை அழகாக இருந்தது. குறிப்பாக பின்பக்கம்... ...நிற்க.
சர்வதேச ஒளிபரப்பு என்றாலும் பாகிஸ்தான் தொலைக்காட்சி மூலமாகவே இந்த கோக் ஸ்டுடியோ என்ற இசை நிகழ்ச்சி பிரபலமானது. பிரேசிலில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சி ஒன்றின் தாக்கத்தோடு இது தேசத்தின் குரல் என்ற நோக்குடன், வளர்ந்த மற்றும் வளரும் இசைக் கலைஞர்களைக் கொண்டு, பாரம்பரிய இசை, நாட்டுப்புற இசை, சூஃபி, கஸல், கவாலி, பங்காரா, மற்றும் நவீன மேற்கத்திய சமகால பாப், ராப், ஹிப் ஹாப் கலந்து ஜூகல் பந்தி இசைவிருந்தாக படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்சியின் மூலம் புதிய பாடகர்கள், புதிய இசைக் கருவிகளை வாசிப்பவர்கள் என இதுவரை வெளிச்சம் படாமல் இருந்தவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதற்கென பாகிஸ்தான் முழுவதிலிருக்கும் பிராந்திய இசைக்கலைஞர்களை தேடும் பணியில் தயாரிப்பாளர் அலி ஹம்சா மற்றும் சோஹைப் காசி இருவரும் சலிக்காமல் ஈடுபட்டு வருகின்றனர். தேடியவர்களை சலித்து மேடையேற்றுகின்றனர். சினிமா பாடல்கள், மற்றும் பல சேனல்களின் டுபாக்கூர் சிங்கர்கள் பாடும் பாடல்கள், மற்றும் ஆல்பம் என்ற பெயரில் கண்ணே... மணியே... நெஞ்சே... கழுத்தறுக்கும் காதல் பாடல்கள் இவற்றை தவிர்த்து ஒரு புதுவித இசை நிகழ்ச்சியினை அதுவும் நேரலையாக ரசிக்கும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வழங்கி வந்திருக்கிறது - வருகிறது.
பாகிஸ்தானைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2011-ல் இத்தகைய முயற்சி தொடங்கியது. இந்தியாவின் பல இசை பிரபலங்களுடன் இந்நிகழ்ச்சி நான்கு சீசன்கள் கலைகட்டியது. காரணமில்லாமல் 2015-ல் ஏனோ நிறுத்தப்பட்டது. ஆனாலும் பாகிஸ்தானில் இந்நிகழ்ச்சி இன்றும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மனம் கவர்ந்த அந்த இசை நிகழ்ச்சியை சுடச்சுட பார்க்காமல் விட்டுவிட்டோமே என நினைத்திருக்க, தற்போதைய ஓய்வில் (ஓய்ந்ததில் என்பது பொருத்தமாக இருக்கும்) அவற்றையெல்லாம் ஆற அமர யூ டியூபில் தேடிப் பார்க்கத் நேர்ந்தது. அவ்வாறு தேடியதில் கிடைத்த கோக் ஸ்டுடியோ ஒரு தேசத்தின் குரல் அதுவும் பங்காளி தேசத்தின் குரல்கள் சில தங்களின் ரசனைக்கும்.