என்னை ஏன் விசித்திரமாக பார்க்கிறீர்கள்?







அவர்களுக்கு 
அதுதான் வேலை
அவர்களுக்கும்
அது போகட்டும் 
நீயென்ன 
செய்து கொண்டிருக்கிறாய்?
குரைப்பதை 
பெரிது படுத்தாதீர்கள்
நாய்தான் 
நாயேதான்
வாலாட்டுகிறதா? 
கவனமிருக்கட்டும். 
உனது வியர்வை
அவர்களுக்கு
தண்ணீராக இருக்கலாம்
இரத்தமாகவும்
சாராயமாகவும்.
தோண்டுங்கள்
தோண்டிக் கொண்டேயிருங்கள்
நிச்சையம் கிடைக்கும்
உங்களுக்கு புதையல்
எங்களுக்கு பூதம்.
இந்த மாடி
படிப் படியாய்
கட்டியது.
கதவிருக்கும் இடத்தில்
கற்சுவர் 
கவலை வேண்டாம்
அதே செய்முறைதான்
உடை. 
கிழித்த கோட்டை 
தாண்ட 
அவசியமில்லை
அழிக்கலாம்.
ஆடுகள் 
யோசிக்கத் தொடங்கிவிட்டால்
மேய்ப்பவனுக்கு
வேலையில்லை.
அதட்டுகிறீர்கள்
மிரட்டுகிறீர்கள்
உதைக்கிறீர்கள்
அடிபணிய மறுத்தால்
ஆளையே கொல்கிறீர்கள்
உங்களுக்கு மட்டும்
எப்படி முளைக்கிறது 
இந்த கொம்பு.
அவர்தான் கடவுள்
அவர்தான் தூதுவர்
அவர்தான் இரட்சகர்
அவர்தான் தலைவர்
அவர்தான் அனைத்துமாக
அவர்தான் இவரா? 
கருப்பு சிவப்பு
பச்சை மஞ்சள்
நீலம் காவி
வெள்ளையென இருக்க
எதையும்
'சட்டை' செய்யாதீர்கள். 
நீயும் என்னை 
தொட்டுவிடாதே
நானும் மடிதான். 
 ஊரென்ன?
பெயரென்ன?
தொழில்?
ஆதார் இருக்கிறதா?
ரேஷன் கார்டு?
பான் கார்டு?
பாஸ்போர்ட் இருக்கிறதா?
ஓட்டுரிமை?
ஓட்டும் உரிமை?
இன்னபிற இருக்கிறதா?
இருந்துவிட்டு போகட்டும்
சரி..வா.. 
திறந்து காட்டு.



ஒரே கண்
இரண்டே மூக்கு
தாடையில் ஒன்று
கன்னத்தில் ஒன்று
கழுத்தில் ஒன்றென
மூன்று வாய்
நாலா புறமும் காது
கை இருக்குமிடத்தில் கால்
கால் இருக்குமிடத்தில் கை
முன்பக்கம் முதுகிருக்கும் 
என்னை
ஏன் விசித்திரமாக 
பார்க்கிறீர்கள்?