பகுதி 2
புத்தகம் அது இல்லாமல் அடியேனின் அன்றாட நகர்வை கடத்த இயலாது. அவ்வாறு வாசிப்பில் ஆழ்ந்திருக்கும் தருணம் புத்தகத்திலிருக்கும் வரிகள் சிலவற்றை அடிக்கோடிட்டோ அல்லது அடைப்புக் குறியிட்டோ சேமித்து வைக்கும் வழக்கம் இருக்கிறது. அத்தகைய ட்டோ வரிகள் சிலவற்றின் தொகுப்புதான் இந்த பகுதி வாசிப்பில்...
இப்போதும் குளிர்காலங்களில் என் வயிறு இரைச்சலிடும் வேளையில், நான் உயிர் பிழைத்ததை நியாயப்படுத்திவிட்டேன் என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன். ஆனால் வெக்கையான இரவுகளில் வியர்த்து எழும்போது, பாவத்திலிருந்து விடுதலை சாத்தியமானாலும் ஒரு பொருட்டல்ல என்று எனக்குத் தெரியும். ஒரு மனிதன் பசியாலும், மன உலைவாலும் செலுத்தப்படுகிறான். நான் என்னால் எது முடியுமோ அதை விழுங்கினேன்.
📖 பசி
📝 எலிஸ் பிளாக்வெல்
.............................................................
உங்கள் குருதிக்குத் தந்தாக வேண்டிய விலையை என் கைகளிலும் ஆன்மாவிலும் சுமக்கிறேன் மெஹ்பூப் பாய். "இப்படியொரு குற்றத்தைச் செய்துவிட்டு வாழ முடியுமா என்பது எனக்கே வியப்பாக இருக்கிறது" என்று தொலைவில் விலகிச் சென்ற அந்த உருவத்திடம் மானசீகமாகச் சொல்லிக்கொண்டாள் அவள்.
உண்மையிலேயே இப்படிச் செய்ய வேண்டி வந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால் எனக்கு எப்போதும் என் நாடுதான் முக்கியம்.
📖 செஹ்மத் அழைக்கிறாள்
📝 ஹரீந்தர் சிக்கா
நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்.
நொச்சிச் செடிகள் உன்மீது வேர்விட வேண்டாம்.
பறவைகள் உனக்கு மேலே பறந்து திரிய வேண்டாம்.
உறங்கு.
நீ நிம்மதியாக உறங்கு.
உனக்கு ஒரு மீஸான் கல்லாய் நான் இதோ காவல் இருக்கிறேன்.
முடிவற்ற காவல்.
நான் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பேன்.
📖 மீஸான் கற்களின் காவல்
📝 பீ.கே.பாறக்கடவு
சந்தையில் உக்ரைனைச் சேர்ந்த ஒரு பெண் மிகப்பெரிய சிவப்பு ஆப்பிள்களை 'வாருங்கள், இந்த ஆப்பிள்களை வாங்குங்கள், இது செர்னோபில் ஆப்பிள்கள்' என்று கூறி விற்றுக் கொண்டிருந்தார். இந்த மாதிரி விளம்பரம் செய்தால் யாரும் ஆப்பிள் வாங்கமாட்டார்கள் என ஒருவர் அவரிடம் சொல்ல அதற்கு அவர், "கவலைப்படாதீர்கள்! சிலர் இதை மாமியார்களுக்காகவும், இன்னும் சிலர் அவர்களுடைய மேலதிகாரிகளுக்காகவும் வாங்குவார்கள்" என்றார்.
📖 செர்னோபிலின் குரல்கள்
📝 ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
அமாவாசை போன்ற இருண்ட இரவின் மூன்றாவது ஜாமம் இன்னும் முடியவில்லை. அக்கம் பக்கத்து கிராமத்திலுள்ள அனைவரும் திடீரென விழித்தெழுந்தனர்.
தொலைவில் இருளில் ஆகாயத்தைத் தொடுவது போல் மள மளவென்று எரியும் தீ சுவாலையைக் கண்டனர். வைக்கோலால் கட்டப்பட்ட வீடு மடமட வென்று எரிந்து சாம்பலாவதைக் கண்டார்கள்.
வசிப்பிடத்திலிருந்து தொலைவில் காலபைரவியைப் போல் பயங்கரமான தோற்றத்துடன் ஒரு தாய் தன் பால் மனம் மாறாத பாலகனை கையில் பிடித்துக்கொண்டு இருட்டில் எங்கோ சென்றுகொண்டிருந்தாள். விடிவதற்கு இன்னும் சிறிது நேரம் இருந்தது போலும்.
📖 குற்றிலிட்ட தீ
📝 ஹிமான்ஷு ஜோஷி
ஒரு சட்டை, ஓர் உடுப்பு, ஓர் ஆலப்புழைப் பிரயாணம். இவ்வாறு சாரமற்ற காரியங்களைச் சுற்றிமட்டும் பரஸ்பரம் நேசிக்கும் அத் தம்பதிகளின் சொப்பனம் வட்டமிட்டுப் பறக்கத் தக்கவாறு அது அத்துணை இலேசானதாயிருக்கவில்லை. அவர்கட்கு இனியும் கஷ்டமான காரியங்கள் இருந்தன, செய்து முடிக்க. ஒரு முத்தத்திலோ ஆலிங்கனத்திலோ முடிந்துபோகும் ஆவேசமாயும் இருந்ததில்லை, அது.
📖 இரண்டிடங்கழி
📝 தகழி சிவசங்கரப் பிள்ளை
.............................................................
தனது முதல் இரையையும் பறிகொடுத்துவிட்டு, இரண்டாவது இரையும் தப்பிப்போய், வால் வலி வேதனையுடன், காதுகள் விடைக்க செறுமிக்கொண்டு குறிப்பு இல்லாமல் கொம்பைத் திருப்பிய பக்கமெல்லாம் அலைத்து, கால்களால் தரையை உழுது, கட்டி கட்டியாக மண்ணைக் கிளப்பி வாரி அடிக்கச் செய்து ஒரே ஆக்ரோஷமாக முன்னும் பின்னும் நிலைக்காமல் ஆடிக்கொண்டிருந்தது காரி. பழக்கமான நேர் எதிர் பாதை அதன் கண்களில் படவில்லை. அதன் வெறி நிலையை யூகித்த கூட்டம் பதறிச் சிதறியோடியது.
அது எந்தப் பக்கம் பாயும் என்பது தெரியாது.
📖 வாடிவாசல்
📝 சி.சு.செல்லப்பா
.............................................................





