சாம்பார் ஹீரோ சௌ சௌ.
ருசியியல் என்ற இந்த பகுதியில் சுவையான பதார்த்தங்களைப் பற்றி இதுவரை பார்த்துவர ஒரு மாறுதலுக்காக சமையலுக்கு பயன்படும் சில பொருட்களின் வரலாற்றை அலசிப் பார்க்க தோன்றியது. அந்த வகையில் முருங்கைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் வரிசையில் சாம்பார் ஹீரோக்களில் ஒன்றான, அதிலும் சத்துணவு சாம்பாரின் மெயின் ஹீரோவான சௌ சௌவின் வரலாற்றை பார்க்கலாம் வாருங்கள்.
கெ-ள-ரி, கெ-ள-தமி வகை சொல்லாடல் சௌ சௌ என சேர்த்து படிப்பது நன்று... ச் + ஔ... அழகுத் தமிழில் இதன் பெயர் மேரக்காய். சிலர் இதனை பெங்களூர் கத்தரிக்காய் என்கின்றனர். ஆனால் கத்தரிக்காயிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் பரங்கிக்காய் பூசணிக்காய்க்கு இது ஒன்றுவிட்ட சொந்தம். குக்கர்பிடேஸி (Cucurbitaceae) என்ற இனத்தை சேர்ந்தது. தெலுங்கில் சீமை வெங்காயம். ஆங்கிலத்தில் இதனை சாயோட் (Chayote) என அழைக்கிறார்கள். சா-யோ-தெஹ் (Chah-yoh-teh) என உச்சரிக்க வேண்டும். ஸ்பானிஷ் வார்த்தை சஹோஹ்ட்லி (Chayohtli) என்பதலிருந்து வந்தது. பிரான்சில் இதன் பெயர் கிரிஸ்டோபீன் (Christophene). லூசியானாவில் மிலிட்டன் (Mirliton). நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூரில் சோக்கோ (Choko). இந்தோனேஷியாவில் லாபு ஷியாம் (Labu siyam), பர்மா, மியான்மரில் கூர்கா பழம் (Gurga Thee), சைனாவில் புத்தரின் பனை (பின் யின் Pin Yin), ஜமைக்காவில் சௌ சௌ (Chou Chou). இந்தியாவிலும் அஃதே. இதன் அறிவியல் பெயர் செச்சியம் எட்யூல் (Sechium Edule).
சௌ சௌ புழக்கத்திற்கு வந்த காலம் சரிவரத் தெரியவில்லை. கி.மு.13000 ஆக இருக்கலாம். பெருவின் தொல்பொருள் ஆய்வில் கிடைத்த சான்றின்படி Gourds என சொல்லக் கூடிய சுரைக்காய் சொந்தங்களின் பூர்வீகம் தென்னாப்பிரிக்கா ஆகும். சௌ சௌவும் அதே ஆண்ட பரம்பரையை சேர்ந்ததால் அங்கிருந்தே வந்திருக்கலாம் என்கின்றனர் உணவியல் ஆய்வாளர்கள். ஆனால் மத்திய அமெரிக்காவே சௌ சௌவின் தாயகமாக கருதப்படுகிறது. குறிப்பாக மெக்சிகோ. ஆஸ்டெக்குகள் மற்றும் மாயன் இனத்தவர்கள் தங்களது உணவுகளில் சௌ சௌவினை பயன்படுத்தியிருக்கின்றனர். மேலும் அதன் இதய வடிவ இலைகளையும் வெள்ளை நிற பூக்களையும் கொண்டு உணவை அழங்கரித்திருக்கின்றனர். அரை வேக்காடு அல்லது பச்சையாக சாலட் செய்வது அவர்களின் பிரபல ரெசிபியாக இருந்திருக்கிறது. இந்த ரெசிபி இன்றும் அங்கு தொடர்கிறது. 1756 ஆம் ஆண்டு பி.பிரௌனின் என்பவர் படைத்த The Civil and Natural History of Jamaica என்ற புத்தகத்தில் முதன்முதலாக சௌ சௌவின் பெயரும் அதன் படமும் இடம் பெற்றது. ஐரோப்பியர்களே சௌ சௌவினை உலகமெங்கும் பரப்பினர் அதற்கு வியாபாரம் காரணமாக இருந்தது. காலணியாதிக்க ஆங்கிலையேர்கள் தங்களுக்கென மலைப் பிரதேசங்களில் இதனை விளைவித்துக் கொள்ள, இந்தியாவிற்குள் நுழைந்து,
சாம்பார், மோர் குழம்பு, கூட்டு, பொறியலில் கலந்து இங்கிலீஸ் காய்கறியாக புகழ்பெற்றது. தமிழகத்தில் சத்துணவு சாம்பரில் இது விழுந்ததற்கு ஏதாவது கமிஷன் காரணமாக இருக்கக்கூடும்.
இளம் பச்சை நிறம், ஓரளவிற்கு தட்டையான கரடுமுரடான சொர சொரப்பான பார்ப்பதற்கு பேரிக்காய் போன்ற வடிவம், குறுக்கே வெட்டினால் உருளைக் கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் போன்று மிருதுவான சதைப்பகுதி இதுதான் சௌ சௌவின் அடையாளம். இதில் வெள்ளை பச்சை என இரண்டு ரகங்கள் இருக்கிறது. அதிகபட்சம் 12 மீட்டர் உயரம் போகும் கொடியில் இது வளர்கிறது. நடப்பட்ட நான்கு மாதத்தில் காய்ப்பு, வருடத்திற்கு ஒருமுறை என மகசூலைத் தருகிறது. அரை வெப்பமண்டல காலநிலையில் செழிக்கிறது. கோஸ்டாரிக்கா, மெக்சிகோ, டொமினிக்கன் குடியரசு. கௌதமாலா போன்ற நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. அமெரிக்க சந்தையே இதன் மிகப்பெரிய விற்பனை சந்தையாக இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை இமாச்சல பிரதேசம், மேகாலயா, சிக்கிம், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகாவில் விளைகிறது. தமிழகத்தில் கொடைக்கானலின் கீழ் மலைப்பகுதியான தாண்டிக்குடி, பால மலை, அடுக்கம், பன்றிமலை, கே.சி.பட்டி போன்ற இடங்களில் விளைவிக்கப்படுகிறது.
சௌ சௌவில் அதிகப்படியாக வைட்டமின் சி, கார்போ ஹைட்டிரேட் இருக்கிறது. கால்சியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
சௌ சௌ உடல் தளர்ச்சியை போக்கி, தசைகளை முறுக்கேற்றி, நரம்பு தளர்ச்சியினை சரி செய்கிறது. மன சோர்வை அகற்றி, உடலிலும் முகத்திலும் ஏற்படும் சுருக்கங்களை போக்கி, வயது முதிர்ந்த தோற்றத்தை குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அளவை குறைப்பதோடு தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. குடலில் உள்ள நச்சுக்களை நீக்குதல், செரிமாணம், பசியின்மை போன்ற வயிற்று உபாதைகளுக்கு சௌ சௌ சிறந்தது. இதிலிருக்கும் கால்சியம் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், எலும்புகளை வலுப்படுத்தவும், உடலுக்கு உட்டமளிக்கவும் உதவுகிறது. இதிலிருக்கும் நீர் சத்து கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் கை கால் வீக்கங்களை சரிசெய்து, வயிற்றிலிருக்கும் குழந்தையை நோய்த் தொற்றிலிருந்து காக்கிறது. புற்றுநோய் எதிர்ப்பு காரணியாகவும் செயல்படுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க சௌ சௌவே சிறந்தது. குறிப்பாக குனிந்தால் நிமிர்ந்தால் முடியாமல் இடிக்கும் வயிற்றிலுள்ள கொழுப்பை குறைக்க இது மிகவும் உகந்தது. இத்தகைய மருத்துவ குணமிக்க சௌ சௌவை அனைத்து வயதினரும் வயோதிகர்களும் சேர்த்துக்கொள்ளலாம்.
பச்சையாக ஆலிவ் எண்ணெய்யில் மிதக்கும் லத்தீன் அமெரிக்க சாலட்... உருளைக் கிழங்கு தக்காளி சேர்ந்த மெக்ஸிகன் கூட்டு... எண்ணெயில் குளித்த துருக்கி வறுவல்... மாட்டு இறைச்சியில் செய்யப்படும் பிகாடிலோ என்ற பிரபல பிலிப்பைன்ஸ் பதார்த்தம்... சீனாவின் சிக்கன் நூடுல்... கடுகு, வெங்காயம், கொத்தமல்லி, மிளகாயுடன் இலங்கை ஷ்பெஷல் பொறியல்... பாசிப்பயறு ஜோடியுடன் கர்நாடக சைவ கூட்டு... மீன் மற்றும் இராலுடன் துணை சேரும் மேற்கு வங்க குழம்பு... என சில சௌ சௌ கொண்டு தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்கள் உலகளவில் பிரபலமாக இருக்கின்றன. தமிழக சாம்பாரும் மோர்க்குழம்பும் இதில் அடக்கம்.
வேக வைத்த சௌ சௌவை தண்ணீரில் சூடாக்கி நன்கு பிசைந்து கரைத்து அதனுடன் உப்பு, மிளகு சேர்த்தால் எளிமையான சௌ சௌ சூப் தயாராகிவிடும். அதனுடன் வெங்காயம், காளான், காரட் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சூப் கொழுப்பை குறைத்து, உடலுக்கு உச்சாகமூட்டி, முகத்தையும் தோலையும் இளமைப் பொழிவுடன் வைத்திருக்க உதவும்.