பயாஃப்ராவை நோக்கி.

ஆப்பிரிக்காவின் ராட்சசன் (Giant of Africa) என அழைக்கப்படும் நாடு நைஜீரியா. கிட்டதட்ட 184 மில்லியன் மக்கள் தொகையையும் ஆப்பிரிக்க பொருளாதாரத்தில் கனிசமான பங்குகளையும் கொண்டதால் அந்நாடு அவ்வாறு அழைக்கப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை நிறைந்த நாடும், இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடும், அதிக பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் வாழும் நாடும், அதிக மொழிகளை பேசும் நாடும் அதே நைஜீரியாதான். அதனால் ராட்சசன் பட்டம் இந்நாட்டிற்கு ஏகப் பொருந்தும். அதுமட்டுமல்லாது நாடுகளின் நாடு என்ற பட்டமும் நைஜீரியாவிற்கு இருக்கிறது. அதற்கு காரணம் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட இனங்களையும் அவைகளின் பண்பாட்டு பழக்க வழக்கங்களையும் இந்நாடு கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு இனங்கள், மதங்கள், பிரிவுகள்,  உட்பிரிவுகள், உபபிரிவுகள் இருந்தாலே நீயா நானா சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமிருக்காது ஐநூறு என்றால்! சொல்லவே தேவையில்லாமல் இன்றுவரை அங்கு நிலவும் இனக் கலவரங்களால் மக்கள் பலர் அந்த ஆப்பிரிக்க ராட்சசனுக்கு படையலாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அத்தகைய இனக் கலவரங்களை வல்லரசு நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி எண்ணெயோடு சேர்த்து எல்லா வளங்களையும் உறிஞ்சி வருகின்றனர்.


நைஜீரியாவில் இருக்கும் இனங்களில் ஹவுஸர், இக்போ, யுரூபர் என்ற மூன்று இனங்கள் பிரதானமானதாகும். இதில் இசுலாமிய மதத்தை கடைபிடித்து அடிப்படைவாதத்தை தாங்கி பிடித்து நைஜீரியாவின் வடக்குப் பிராந்தியம் முழுவதும் ஹவுஸர் இனம் பரவியிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இக்போ இனம் கிழக்கு பிராந்தியத்தை மையமாக கொண்டிருக்கிறது. மேற்கு பகுதியை சேர்ந்த யுரூபர் இனம் மூன்றாவது பெரிய இனமாக நைஜீரியாவில் விளங்குகிறது. 

இந்தியாவைப் போலவே நைஜீரியாவும் பிரிட்டீஷ் காலணியாக்கத்திலிருந்து விடுதலையாகி 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 -ல் தனது முதல் சுதந்திரதினத்தை புளிப்புமிட்டாய் கொடுத்து கொண்டாடியது. அதற்குபின் ஒன்றியமும் பக்தியும் அமைதியும் முன்னேற்றமும் நமது குறிக்கோள் என ஜனநாயக வழியில் தனது அரசியலமைப்பை  தொடங்கியது. ஆனால் நிலையற்ற தலைமை, சர்வாதிகாரம், ஊழல், இராணுவ நடவடிக்கைகள், அந்நிய தலையீடு என ஸ்திரமற்ற ஆட்சியே இன்றும் அங்கு நிலவுகிறது. அதற்கு சுதந்திரத்திற்கு பிறகு நிகழ்ந்த இனக் கலவரங்களே அடிப்படையாக அமைந்தது. அதிலும் குறிப்பாக இக்போ என்ற இனத்திற்கு எதிராக நிகழ்ந்த இன ஆழிப்பு 1967 ஆம் ஆண்டு முதல் 1970 வரை அங்கு நிலவிய உள்நாட்டு போருக்கும் வழிவகுத்தது.  Nigerian-Biafran War பயஃப்ரா போர் என அழைக்கப்படும் அந்த போரில் சுமார் ஒரு லட்சம் இக்போ இனத்தவர்கள் கொள்ளப்பட்டனர். இப்போதும் கூட அந்த இனத்தில் சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வயதானவர்களைவிட இளைஞர்கள் நான்கு மடங்கு அதிகமாக இருக்கின்றனர். அந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் நிகழ்ந்த கோரப் படுகொலைகளையும், பெண்களை குறிவைத்த கற்பழிப்புகளையும், அதன் தொடர்ச்சியான இன அழிப்பு வேலைகளையும், அரசியல் சதுரங்க விளையாட்டுகளையும், அதற்கு வல்லரசு நாடுகள் எவ்வாறு உதவி செய்தன என்பதனையும் உணர்வு பூர்வமாக இந்த நாவல் சித்தரிக்கிறது. 


ஊழலில் கொழித்த அமைச்சர் ஒருவரின் மகளாக பிறந்தவள் டெபி ஒகடெம்பே. செல்வச் செழிப்போடு வளர்ந்து ஆக்ஸ்போர்டில் படித்திருந்தாலும் தன் தாய் நாடான நைஜீரியா இராணுவத்தில் சேரும் ஆசை அவளுக்கு ஏற்படுகிறது. ஆனால் நாட்டில் நிலவும் உள்நாட்டு குழப்பங்கள் அவள் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. கிட்டதட்ட எல்லோரையும் போல சாதாரண ஒரு நைஜீரிய பெண்ணாக போராடும் நிலை அவளுக்கு ஏற்படுகிறது. அந்த டெபியின் காதலன் ஆலன் கிரே. வெள்ளை இனத்தை சேர்ந்த இராணுவ ஆலோசகரான ஆலன் கிரேவிற்கு காலணியாதிக்க பிரிட்டீஷ் நலனை பாதுகாக்கும் பொருப்பு இருக்கிறது. இந்த இருவரும் அவரவர் வழியில் சுதந்திரத்திற்கு பிறகான நைஜீரியாவின் அரசியல் நிகழ்வுகளோடு இந்த நாவலை நகர்த்திச் செல்கின்றனர். 

நைஜீரியாவின் பெண் எழுத்தாளரான புச்சி யெமச்செட்டா என்பவரின் அற்புதமான படைப்பு இந்த நாவல். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நாவலை முழுமையான நைஜீரியாவின் அரசியல் நாவல் என்றும் குறிப்பிடலாம். இந்த நாவல் கற்பனையாலும் கலைத்திறனாலும் படைக்கப் பட்டிருந்தாலும் ஒரு தேசிய இனப்பிரச்சனையை முன்னிருத்தி அதன் உண்மைத் தன்மையை பிரதிபலிக்கிறது. இக்போ இன மக்களின் தனிதேசம் பயாஃப்ரா. அந்த பயாஃப்ராவை நோக்கியே அவர்களின் கனவு இருக்க நடந்ததெல்லாம் அழிவு மட்டுமே. அத்தகைய அழிவுகளின் ஆவணமாகவும் இந்த நாவல் இருக்கிறது. நாவலில் வரும் நைஜீரிய பெயர்களை தவிர்த்து வாசிக்க மொழிபெயர்பு சிக்கலின்றி எளிமையானதாகவும் இருக்கிறது. 


இனம், மதம், சமயம், நாடு, ஆவா இவா எனும் அடிப்படைகளைத் தவிர ஒரு குறிப்பிட்ட சமூகக்குழு அல்லது அரசியல் குழுக்களை கூட்டோடு திட்டமிட்டு அழிப்பது இனப்படுகொலை எனப்படுகிறது. ஆர்மீனியர்களின்  இனப்படுகொலை, யூதர்களின் இனப்படுகொலை, கம்போடியா, ருவாண்டா, போஸ்னியா, சூடான் இனப்படுகொலை, மற்றும் இன்றும் பலபேருக்கு படியளக்கும் இலங்கை தமிழர் இனப்படுகொலை என இந்த உலகம் பல இனப்படுகொலைகளை சந்தித்திருக்கிறது. பாலஸ்தீனம், காங்கோ, சோமாலியா, கொசாவா என பல நாடுகளில் இனப்படுகொலைகள் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த நூறாண்டுகளில் இனப்படுகொலையால் கொல்லப் பட்டவர்களை கணக்கிட்டால் மில்லியனைத் தாண்டும் என்பதே உண்மை. இந்த நாவலின் ஆசிரியர் புச்சி யெமச்செட்டா சொல்வதைபோல் காலம் அவற்றையெல்லாம் மறக்கலாம் ஒருபோதும் மன்னிக்காது

பயாஃப்ராவை நோக்கி
புச்சி யெமச்செட்டா 
தமிழில் இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம்.