இது கடலுக்கான நீண்ட வழி.

நேகமாக அடியேன் முதன்முதலாக பார்த்த அசாமிய மொழி திரைப்படம் இதுதான் (திரைக்கு மொழி என்றுமே அவசியமில்லை வகைப்படுத்த வசதியாக வைத்துக்கொள்ளலாம்). மேலும் அசாமிய திரைப்படங்களின் முன்னோடியாகவும் தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை டஜன் கணக்கில் வாங்கியவருமான புகழ்பெற்ற இயக்குனரான ஜானு பருவாவை அறிமுகப்படுத்தி அவரது அற்புதமான படைப்புகளான Aparoopa (எதிர்பார்ப்பு), Bonani (காடு), Firingoti (தீப்பொறி), Kuhkhal (விடுதலைக்கான விலை), Tora (தோரா), Konikar Ramdhenu (வானவில்லில் பயணித்திரு), Baandhon (அலைகளின் அமைதி), Ajeyo (தவிர்க்க முடியாதது) போன்றவற்றை தேட வைத்ததும் இந்த திரைப்படம்தான். அதுமட்டுமில்லாமல் Pedarbozorg, The President, Shwaas மற்றும் தமிழில் தலைமுறைகள் வரிசையில் நீண்ட நாட்களுக்குப் பின்பு பார்த்து லயித்த தாத்தா மற்றும் பேரனுக்கு இடையிலான உறவோடு பிணைந்த திரைப்படமும் இதுதான்.


பவல் என்ற வயதான படகோட்டி அசாமில் இருக்கும் நேமகுரி என்ற கிராமத்தில் டிகிங் ஆற்றங்கரையில் தனது பேரன் ஹ்குமனுடன் வசித்து வருகிறார். முன்று தலைமுறையின் தொடர்ச்சியாக அங்கு வசித்துவரும் அவர் கிராமத்திலிருந்து மக்களை இக்கரைக்கு அக்கரை ஆற்றைக் கடக்க படகில் அழைத்துச்சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பிழைத்து வருகிறார். ஒரு விதத்தில் நல்லது கெட்டது என அவரது வாழ்க்கையோடு அந்த ஆறும் ஒன்றிப்போக, பெற்றோர்களை இழந்த தனது பேரனை எப்படியாவது அதிலிருந்து கரை சேர்த்துவிட நினைக்கிறார். இதற்கிடையில் நீண்ட நாட்களாக அந்த ஆற்றில் பாலம் அமைத்துத்  தரவேண்டும் என்ற கிராமத்தாரின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கிறது. ஆற்றில் பாலம் கட்ட போகும் செய்தி பவலுக்கு எட்ட அதனால் தனது குலத்தொழிலும் வாழ்வாதாரமும் பறிபோகும் என அஞ்சுகிறார். அதனூடே பல வருடங்களுக்கு பிறகு நகரத்தில் வசிக்கும் அவரது இரண்டாவது மகனிடமிருந்து கடிதமும் அழைப்பும் வருகிறது. இந்நிலையில் ஆற்றில் பாலம் கட்டப்பட்டதா? அதனால் பவலின் வாழ்க்கை மாறியதா? அல்லது பவலும் அவரது பேரன் ஹ்குமனும் கிராமத்தை விட்டு நகரத்திற்கு சென்றார்களா? அவர்களை பவலின் இரண்டாவது மகன் ஏற்றுக்கொண்டாரா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.  

வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் இவற்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பதிக்கப்படாத கிராமத்து மனிதர்கள் எவருமில்லை. இந்த திரைப்படம் அத்தகைய ஒரு சுமாரான அசாமிய மனிதனின் கதையை கொண்டிருக்கிறது. கிராமம் மற்றும் நகரத்திற்கு இடையேயான வாழ்க்கைமுறை வேறுபாடுகள், உறவுகளுக்கிடையேயான விரிசல்கள் இவற்றையும் இந்த திரைப்படம் காட்டுகிறது. பாலம் வந்தால் படகோட்டும் பிழைப்பு போய்விடும் அதனால் பாலத்துக்கு வாட்ச்மேன் வேலை கொடுங்கள் என மாவட்ட ஆட்சியரை வழிமறித்து பவல் ஒரு காட்சியில் அப்பாவியாக  கேட்பதைப்போல் ஒரு புதிய திட்டத்தால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு எந்தவொரு மாற்று வழிகளை வழங்காத அரசாங்கத்தின் அலட்சியப் போக்கையும் இந்த திரைப்படம் சுட்டிக் காட்டுகிறது. 


உள்ளது உள்ளபடி தோன்றும் ஒலியும் ஒளியும் அதன் சூழலும், இவர்கள் நடிக்கிறார்களா அல்லது அப்படியே நடக்கிறார்களா என சந்தேகிக்கும் அளவிற்கான கதாபாத்திரங்களின் தேர்வும் இயக்குனர் ஜானு பருவா  படைப்புகளின் சிறப்பு அம்சமாகும். 
இந்த திரைப்படத்தில் பேரன் ஹ்குமன் தனது வீட்டில் ஓவியங்களை வரைந்து வைத்திருப்பான். ஒவ்வொரு ஓவியமும் கதையின் ஓட்டத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். ஒரு காட்சியில் தாத்தா பவல் பேரன் வரைந்த மொத்த ஓவியங்களை வெறித்துக் கொண்டிருப்பார். ஒரு கடல், ஒரு படகு, ஒரு ஆறு, ஒரு பாலம் இருக்கும் அந்த ஓவியங்கள் குடிசைக்குள் எரியும் விளக்கின் ஒளியில் மெல்ல மறைந்து போகும். அது வயதான பவலின் நிலையை மறைமுகமாக உணர்தும். இத்தகைய மறைபொருள் காட்சிகளை ஆங்காங்கே வைப்பதில் ஜானு பருவா கைதேர்ந்தவர் 
இந்த திரைப்படத்திலும் அவற்றையெல்லாம் காணலாம். சத்யஜித் ரே, அடூர் கோபல கிருஷ்ணன், மிருணாள் சென், ஜி. அரவிந்தன், வரிசையில் ஜானு பருவாவும் சேர்த்துக்கொள்ள வேண்டியவரே. 

கடல் நீர் ஆவியாகி மழை பொழிகிறது. மழைத்துளிகள் ஒன்று சேந்து ஆறாகிறது. ஒவ்வொறு ஆறும் கடலை நோக்கி தன் பயணத்தை தொடர்கிறது. கலந்தாலும் கலைந்தாலும் அதன் வழி பல சோதனைகளையும் கடக்கிறது. மனிதனின் வாழ்க்கையும் அந்த ஆற்றின் நீண்ட பயணத்தைப் போலத்தான் இது கடலுக்கான நீண்ட வழி. 


Hkhagoroloi Bohudoor
(It's a long way to the sea)
Written Directed by - Jahnu Barua
Music by - Satya Baruah
Cinematography - P. Ranjan
Country - India
Language - Assamese
Year - 1995