காதல் வீடு திரும்பியிருந்தது.






கதை கேட்கிறாய்.
பாதியை புரிந்துகொண்டு 
நீயும்
மீதியை உளரிக்கொண்டு 
நானும்
தூங்கிவிடுகிறோம்.
முடிவு! 
நம்மை 
முறைத்துக் கொண்டிருக்கிறது.

நான் இராமனும் இல்லை
நீ சீதையுமில்லை
நமக்குத்துணை
அனுமனும் இல்லை
ஆனால்
ஒற்றை மோதிரமும்
உனக்கான தூதும்
காத்துக் கிடக்கிறது
அசோகவனத்திலிருந்து
அயோத்திக்கு.

எதையோத் தேடி
என் தனிமை முற்றத்தில் 
நுழைந்த அந்த குருவி
கத்தியெழுப்பிய ஒலி
உன் பெயராகக்கூட
இருக்கலாம்.

வார்த்தைகளுக்கான
வழி முழுவதையும்
அடைத்துவிட்டாய்.
இனி!
மௌனக் காற்று
உன் நாசி நுழையும்.

நமக்குள் 
யார் தொடங்குவது?
என்பதன்
நீ...ண்ட மௌனம்
முடிவுக்கு 
மிக அருகில்.

புதிய பேனாவின்
முதல் வார்த்தை எழுத
கடற்கரை மணலில்
நுரை தழுவ கோலமிட
ஏதாவது ஒரு பூ
ஒரு குருவி
ஒரு பொம்மைக்குச் சூட்டி மகிழ
நிசப்தத்தின் தனிமையில்
முணுமுணுக்க
தேவையெனப்படுகிறது
உனக்கென யாரோ வைத்த
உன் பெயர்.

நேற்று உதிர்ந்தது
வாய்விட்டு கதறியிருந்தது
இன்று விரிந்ததற்கும்
அந்த தயக்கம் இருக்கிறது
நாளைய மொட்டும்
கேட்கக்கூடும்
இல்லாத உனக்காக
எப்படி பறிப்பது
அவைகளை.

உரசிக்கொள்ளத் துடிக்கும்
ஒரு நூலிழை தூரம்தான்
உனக்கும்
எனக்குமான
நீ.....ண்ட 
இடைவெளி.

விட்ட இடத்திலிருந்து 
தொடர்ந்த 
கதையைத் தவிர 
வேறென்ன இருக்கப்போகிறது
சந்தித்தால் அலாவிட.

முதல் சந்திப்பின்
பேரதிர்ச்சியில்
உள்ளுக்குள்
உடைந்து சிதறிய சொற்களை
ஒன்று சேர்த்து
ஒழுங்குபடுத்தி
ஒரு கோர்வையாக
வார்த்தைகளாக நீட்டும் முன்
காதல்
வீடு திரும்பியிருந்தது.