90 நாணயங்கள்.

ம்பிக்கை நாணயம் இவையிரண்டும் நகைக்கடைக்கு மட்டுமல்ல நல்ல உறவிற்கும் அவசியம் தேவை. சிறு சிறு சண்டைகள், கோப தாபங்கள், அதைவிட சந்தேகங்கள் இவைகள்தான் உறவுகளுக்கிடையே விரிசல்களை ஏற்படுத்துகின்றன. கொண்ட உறவின் மீது நம்பிக்கையும் நாணயமும் இருந்தால் அந்த விரிசலை எளிதாக சரிசெய்துவிடலாம். இது மற்ற உறவுகளைவிட காதலுக்கு ஏகப் பொருந்தும்.


நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர்அள வின்றே - சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இளைக்கும் நாடெனொடு நட்பே

-  நிலத்தை விட பெரியது, வானத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது தான் கொண்ட காதல் என குறுந்தொகை தலைவி ஒருத்தி தன் தோழிக்கு சொல்வதைப் போல ஒரு நம்பிக்கை. இந்த குறும்படமும் அதைத்தான் காட்டுகிறது.


வாங் யூ யாங் என்ற இளைஞன் தான் விரும்பும் பெண்ணான சென் வென்னின் காதலை பெற முயற்சிக்கிறான். அதற்காக தனக்கு 90 நாட்களை தருமாறு அவளிடம் கேட்கிறான். அவனுக்கு கிடைத்த அந்த நாட்களில் அவளின் மனதை கவர்கிறான். அதற்கு சாட்சியாக ஒவ்வொரு நாளும் ஒரு நாணயத்தை சிறு கடிதத்துடன் இணைத்து மொத்தம் 90 நாணயங்களை அவளுக்கு பரிசாக கொடுக்கிறான். நாட்கள் நகருகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில் இவர்களது அன்றாட வாழ்க்கை முறையால் காதலில் சிறிய இடைவெளி ஏற்படுகிறது. ஆயத்த ஆடை நிபுணராகும் கனவிலிருக்கும் சென் வென்னிற்கு பாரிஸ் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. வாங் யூவிற்கோ சென் வென்னின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் அழகான நீர்க்குமிழியைப் போலிருந்த இவர்கள் காதல் உடைந்து போகிறது. இறுதியில் சென் வென் பாரிசிற்கு சென்றாளா? வாங் யூ யாங்கின் சந்தேகம் தீர்ந்ததா? 90 நாணயங்களால் உறுதி செய்யப்பட்ட இவர்களது காதல் என்னானது? என்பதுதான் இந்த குறும்படத்தின் கதை. 

இரவில் மின்னும் பீஜிங் நகரம், அது ஒளிப்பதிவு செய்த விதம், காதலர்கள் தேர்வு இவைதான் குறும்படத்தின் அழகு. மெல்லிய இசையையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். சிறு சிறு சந்தேகங்கள் உறவில் எத்தகைய பிளவை ஏற்படுத்துகிறது. அதனை ஆழமான நம்பிக்கை எவ்வாறு சரிசெய்கிறது இந்த குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன். 


The Story of 90 Coins 
Diercted by - Michael Wong
Written by - Jackie Bai
Screen Play - Bai Xuedan
Music by - An Wei
Cinematography - Liwei Jian
Country - China
Language - Chinese
Year - 2015