ஒரு சிவப்பு குளிர்சாதனப் பெட்டியின் பயணம்.
ஒரு பொருளை அல்லது பல சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தனது தலையால் அல்லது முதுகினால் அல்லது கைகளால் கொண்டு சேர்ப்பவர்கள் போர்ட்டர் (Porter) என அழைக்கப்படுகின்றனர். Portere என்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் போர்ட்டர். ஆங்கிலத்தில் Beawer என்பது பொருத்தமாக இருக்கும். போக்குவரத்திற்காக விலங்குகளை பயன்படுத்துவதற்கு முன்பும், சக்கரங்களை கண்டுபிடிப்பதற்கு முன்பும் மனிதர்களை சுமை தூக்க உபயோகப்படுத்திவர இத்தகைய வழக்கம் தொடங்கியிருக்கலாம். சுமேரியர்கள் கம்பளிகளையும் ஆளி விதைகளையும் பெண்களை சுமக்கச் செய்திருக்கின்றனர். அடிமைத்தனம் என ஒன்று தலை தூக்கவும் இந்த சுமை தூக்கும் வேலை அடிப்படையாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் நவீனமாகிவிட்ட நிலையில் சுமை தூக்கும் தொழில் சற்று குறைந்திருந்தாலும் எந்திரங்களின் செயல்பாடுகள் குறைவான இடத்திலும் பாதைகளற்ற மலை பிரதேசங்களிலும் சுமை தூக்குபவர்களின் சேவை அவசியம் தேவைப்படுகிறது. இந்த டாகுமெண்டரி அத்தகைய ஒரு சுமை தூக்கும் தொழிலாளியை பின்தொடர்கிறது.
இமயமலையின் கக்கத்தில் நேபாள நாட்டில் இருக்கும் ஒரு அழகிய மலை கிராமத்தில் வசிக்கும் ஹரி ராய் என்ற 17 வயது இளைஞனின் கதைதான் இந்த டாகுமெண்டரி. ஹரி ஒரு மாணவர். இருந்தபோதிலும் அவர் ஒரு சுமை தூக்குபவராக பகுதி நேரத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் அவரது படிப்பிற்கு தேவையான பணத்தை அவரால் ஒரளவிற்கு ஈடுகட்ட முடிகிறது. கிட்டதட்ட மூன்று வருடங்களாக இந்த வேலையை செய்துவரும் அவர் சுற்றுலா பயணிகளுக்கும் தான் வசிக்கும் பகுதியிலிருப்பவர்களுக்கும் பொருட்களை மேலிருந்து கீழ், கீழிலிருந்து மேல் என சுமக்கிறார். இந்நிலையில் ஒருநாள் ஒரு சிவப்பு நிற குளிர்சாதனப் பெட்டியை பழுது பார்ப்பதற்காக மலையிலிருந்து அடிவாரத்திற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. அந்த 200 lbs எடை கொண்ட குளிர்சாதனப் பெட்டியை ஹாரி தனது முதுகில் சுமந்து செல்ல, அவருடன் இந்த டாகுமெண்டரியும் பயணிக்கிறது.
ஹாரி தனது சுமை மிகுந்த பயணத்தோடு அவரது வாழ்கையையும் கனவுகளையும் நம்பிக்கையையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். மேலும் அவர் வசிக்கும் அந்த மலை கிராம மக்களின் வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் குடும்ப உறவுகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அதைவிட அழகான மனதிற்கு இதமான இதுவரை கண்டிராத நேபாள நாட்டின் மலைப்பகுதிகளை சுற்றிக்
காட்டுகிறார். சுமார் இரண்டரை நாட்கள் ஹரியுடனான அனுபவமான இந்த டாகுமெண்டரி வெறும் சாதாரண பயண ஆவணமாக இல்லாமல் ஹரியைப் போலவே சுமை தூக்குபவர்களாக நேபாளத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 60000 சிறுவர்களின் ஆவணமாக இருக்கிறது. ஆழமாகப் பார்த்தால் சுமை தூக்கும் குழந்தை தொழிலாளர்களின் கதை இது. செர்பியாவை சேர்ந்த நடாஷா அர்பன் மற்றும் லூசியன் இருவரும் உலகெங்கிலிருக்கும் குழந்தை தொழிலாளர்களைப் பற்றி ஆவணப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். குழந்தைகளுக்கான உலக நிதியத்துடன் இணைந்து அவர்கள் இந்த டாகுமெண்டரியை உருவாக்கியிருக்கின்றனர். தவறாமல் பாருங்கள்.
Journey of a Red Fridge
Directed By - Natasha Urban, Lucian Munten
Cinematography - Lucian Munten
Country - Serbia
Year - 2007
Language - Nepali, Thulung
டாகுமெண்டரியைக் காண.

