குப்பைக் கோழியார்.
பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்ற இரண்டு தொகுப்பு, அதில் மொத்தம் 2381 பாடல்கள், இவையே சங்க காலத்து நூல்களாகும். தோராயமாக 475 புலவர்கள் இதனை அருங்கொடையாக நமக்கு அளித்திருக்கின்றனர். அவர்களில் ஔவையார், அம்மூவனார், அரிசில்கிழார், இளம்பெருவழுதி, கபிலர், கணியன் பூங்குன்றனார், சீத்தலை சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், மாமூலனார் போன்ற ஒரு சில புலவர்களைப் பற்றி நாம் அறிந்திருக்க, இந்த தொகுப்பில் சுமார் 102 பாடல்களை இயற்றியவர்களைப் பற்றிய குறிப்புகள் இதுவரை நமக்கு கிடைக்கப் பெறவில்லை. மேலும் சில பாடல்களை இயற்றியவர்களுக்கு அந்த பாடல்களின் வரிகளைத் தாங்கி ஒரு பெயரினை வைத்து அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக குறுந்தொகை பாடல்களை இயற்றிய புலவர்கள் பலர் அவர்களின் பாடலின் உவமைத் தொடரால் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் அணிலாடும் மூங்கிலார், ஓரேர்ருழவனார், விட்ட குதிரையார், செம்புலப் பெயல் நீரார், காலேறி கடிகையார், மீனெறி தூண்டிலார் போன்றவர்களாவார்கள். அவர்களில் ஒருவர்தான் குப்பைக் கோழியார். இந்த பெயரைக் கேள்விப்பட்டதும் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் அதில் அழகியல் இருக்கக்கூடும் என தோன்றியது. இவர் இயற்றிய பாடல் குறுந்தொகையில் இருக்க, அந்த பாடலை அலசிப் பார்க்கலாம் வாருங்கள். அதற்குமுன் பாடலின் முன்கதையை கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
முன்கதை;
ஒரு ஊரில் தலைவனும் தலைவியும் காதலித்தார்கள். அவ்வபோது இருவரும் ரகசியமாக சந்தித்து கூடி மகிழ்ந்தார்கள். இதனை களவொழுக்கம் என குறிப்பிடுவார்கள். களவு, கற்பு இரண்டும் அகவொழுக்கம். இதில் களவொழுக்கம் என்பது காதலர்கள் பிறருக்கு தெரியாமல் தங்களது திருமணத்திற்கு முன்பு சந்தித்து காதல் விளையாட்டில் ஈடுபடுவதாகும். அவ்வாறு இவர்களது களவொழுக்கம் அரசபுரசலாக பெற்றோர்களுக்கு தெரியவர தலைவி அவளது வீட்டிலேயே பூட்டி வைக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டாள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் isolation. மற்ற நோய்க்கு isolation தீர்வாகினாலும் காதலுக்கு அது ஒத்துவராதது. நோய் தொற்று தலைவிக்கு அதிகமானது. அதன் தீவிரமாக காமம் அவளை வதைக்கத் தொடங்கியது. தூரத்தில் துடிக்கும் இதயம் காதலோடு இருந்தாலும் காமத்திற்கு விரல் தொடும் அளவிற்கான நெருக்கம் தேவைப்படும் (உரசிக்கொள்ளத் துடிக்கும் ஒரு நூழிலை தூரமாவது). தலைவனை பிரிந்த தலைவி அத்தகைய துயரத்திலிருக்க, எனது காம நோயை தீர்த்து தனக்கு உதவி செய்ய யாரும் இல்லையே என தனது தோழி உணர்ந்துகொள்ளும் படியாக இந்த பாடலை அவள் பாடியிருக்கிறாள்.
அந்த பாடல்;
கண்தர வந்த காம ஒள்ளெரி
என்புற நலியினும் அவரொடு பேணிச்
சென்றுநாம் முயங்கற் கருங்காட் சியமே
வந்தஞர் களைதலை அவராற் றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியி னல்லது
களைவோர் இலையா னுற்ற நோயே.
என்புற நலியினும் அவரொடு பேணிச்
சென்றுநாம் முயங்கற் கருங்காட் சியமே
வந்தஞர் களைதலை அவராற் றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியி னல்லது
களைவோர் இலையா னுற்ற நோயே.
பொருள்;
தலைவரைக் கண்கள் கண்டதால் உண்டாகிய காமம் என்னும் ஒளிரும் நெருப்பு எனது எலும்பை உறுக்கினாலும், தாமாகச் சென்று தலைவரை தழுவ நினைத்தாலும் அவரைக் காணாத நிலையில் இருக்கிறோம். நாமிருக்கும் இடத்திற்கு வந்து நம்முடைய துன்பத்தை நீக்க அவராலும் முடியாது. குப்பைக் கோழிகள் தனிமையில் சண்டையிட்டுக் கொள்ளும் போது அதனை இழுத்து இடையில் புகுந்து சண்டையை நிறுத்துபவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவைகள் சண்டையிட்டே அழிந்துபோகும். அக்கோழிகள் அழிவதைப்போலவே தானே அழிந்தாலன்றி என் காம நோயை தீர்ப்பார் யாரும் இல்லை.
சிறப்பு;
தலைவனைக் கண்டதும் அவன்மீது காதல் கொண்டதால் - கண்தர வந்த காம ஒள்ளெரி: அந்த காதலின் Side effect வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் வருத்துவதால் - என்புற நலியினும்: தலைவனை காணது தலைவி வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டதால் - முயங்கற் கருங்காட் சியமே (அருங்காட்சியகம்) என இந்த பாடலில் உவமத் தொடர்கள் இருக்க
குப்பைக் கோழித் தனிப்போர் எற்ற தொடர் இந்த பாடலை இயற்றியவருக்கு பெயரை பெற்றுத் தந்திருக்கிறது. சண்டைக் கோழிகளைப் பற்றி நாம் அறிந்திருப்போம். சேவற் கட்டு, கட்டுச் சேவல் என சொல்லப்படும் விளையாட்டில் ஆடுகளத்தில் அத்தகைய கோழிகளை போட்டிக்காக ஒன்றுடன் ஒன்று சண்டையிட வைப்பார்கள். அவைகளின் சண்டை தீவிரமாக அவற்றை விலக்கிவிட ஆட்கள் இருப்பார்கள். ஆனால் குப்பைகளில் மேயும் இரண்டு கோழிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டால் அதனை தடுப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவைகள் சண்டையிட்டே அழிந்து போகும். அதுபோலவே என் காமம் என்னுள்ளே சண்டையிட்டு அழிந்து போகும் என தலைவி ஒருத்தி தன் தோழிக்கு தெரியும்படியாக இந்த குறுந்தொகை பாடலில் பாடியிருக்கிறாள்.
குப்பைக் கோழித் தனிப்போர் எற்ற தொடர் இந்த பாடலை இயற்றியவருக்கு பெயரை பெற்றுத் தந்திருக்கிறது. சண்டைக் கோழிகளைப் பற்றி நாம் அறிந்திருப்போம். சேவற் கட்டு, கட்டுச் சேவல் என சொல்லப்படும் விளையாட்டில் ஆடுகளத்தில் அத்தகைய கோழிகளை போட்டிக்காக ஒன்றுடன் ஒன்று சண்டையிட வைப்பார்கள். அவைகளின் சண்டை தீவிரமாக அவற்றை விலக்கிவிட ஆட்கள் இருப்பார்கள். ஆனால் குப்பைகளில் மேயும் இரண்டு கோழிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டால் அதனை தடுப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவைகள் சண்டையிட்டே அழிந்து போகும். அதுபோலவே என் காமம் என்னுள்ளே சண்டையிட்டு அழிந்து போகும் என தலைவி ஒருத்தி தன் தோழிக்கு தெரியும்படியாக இந்த குறுந்தொகை பாடலில் பாடியிருக்கிறாள்.
குப்பைக் கோழியார் என்ற பெயரில் இத்தகைய அழகியல் இருக்க இவரைப் போலவே பாடலால் பெயர் பெற்ற சில புலவர்களைப் பற்றியும் அவர்களது பாடல்களையும் வாய்பிருந்தால் அடுத்த பதிவில் பார்க்கலாம்.