ஆயிரம் சூரியப் பேரொளி.
வாசிப்பிற்கென ஒரு தனியறையை உருவாக்க நினைத்து அதனை கட்டியெழுப்ப புத்தகங்களை அடுக்கத் தொடங்கிய காலத்தில் கையிலெடுத்த ஒன்றுதான் காலித் ஹூசைனி எழுதிய பட்ட விரட்டி நாவல் (The Kite Runner - இதைப்பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்). அயல்நாட்டு படைப்பு, புதிய கதைக்களம், புதிய எழுத்துநடை, மொழி சிக்கல்கள், மேலும் நமக்கு பொருந்துமா? பொருந்தாதா? புரியுமா? புரியாதா? நம்மிடம் இல்லாத எழுத்தாளர்களா? அவர்களது கதைகளா? அதன் சுவாரசியங்களா? என மொழிபெயர்ப்பு புத்தகங்களின் மீது இருந்த அத்தனை மா தா ளா சந்தேகங்களையெல்லாம் கலைந்து அதுவரைக்கும் ஓட்டிக்கொண்டிருந்த குண்டுச் சட்டியிலிருந்து குதிரையை வெளிக்கொண்டுவந்த தருணத்தில் வாசித்த நாவலும் அதுவே. காலித் ஹூசைனி பட்ட விரட்டி நாவலில் ஆமிர் என்ற சிறுவனின் வாழ்வியல் மூலம் தன் பிறந்த நாடான ஆப்கானிஸ்தானின் நிலையை மிக எளிமையாக விவரித்து தன்னை ஒரு ஆகச் சிறந்த கதைசொல்லியாக காட்டியிருந்தார். அவரது படைப்பில் இரண்டாவது நாவலான A Thousand Splendit Suns என்பதன் தமிழாக்கமே இந்த புத்தகம் ஆயிரம் சூரியப் பேரொளி.
பட்ட விரட்டி என்ற நாவல் தந்தை மகன் என இரண்டு ஆண்களின் கதையை கொண்டிருந்தது. அதற்கு மாற்றாக இந்த நாவல் மரியம், லைலா என்ற இரு பெண்களின் வாழ்க்கையை பேசுகிறது. கதைக்களம் இரண்டிற்குமே ஒன்றான ஆப்கானிஸ்தான் தேசம்தான்.
50000 ஆண்டுகளுக்கு முன்னரே பல நாகரீகங்கள் தோன்றியதாக கருதப்படும் நாடு ஆப்கானிஸ்தான். அங்கிருக்கும் பாமியான், கந்தகார், ஹீரத், கஸ்னி, போன்ற நகரங்களில் இன்றைக்கும் கலாச்சார சுவடுகளை காணலாம். மேலும் இங்கு நீ காலை நீட்டினால் அது ஒரு கவிஞனின் பின்னம்பாகத்தில்தான் போய் இடிக்கும்... என நாவலில் வரும் ஜலீல் மரியத்திடம் வேடிக்கையாக கூறுவதைப் போல புகழ்பெற்ற கவிஞரான ரூமி, கயாம், தப்ரிஸி, ஹஃபேஸ், நிஜாமி, ஜமி, என பல கவிஞர்களை தாயகமாக கொண்ட நாடு. கவிஞர்கள் மட்டுமல்லாது பல எழுத்தாளர்கள், சிற்பிகள், விஞ்ஞானிகளை கொண்ட அங்கு பாஷ்டூன், தாஜிக், ஹஜாரா, உஸ்பெக், அய்மக், பாலக் என 14 இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லாத நாடு என்பதால் மாசிடோனியர்கள், சசேனியர்கள், அரேபியர்கள், மங்கோலியர்கள், துருக்கியர் மற்றும் சோவியத் யூனியன் போன்ற அந்நியர்களின் படையெடுப்புகள் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்து கொண்டே இருந்தன. 1747 முதல் 1973 வரை அங்கு மன்னராட்சி நிலவியது. பிறகு சோவியத் கட்டுப்பாட்டிற்கு வர, இறுதியாக 1979 ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிக்குப் பின்பு சோவியத் படைகள் விரட்டியடிக்கப்பட்டு பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களின் கைக்கு ஆட்சிப் பொறுப்பு மாறியது. ஆனாலும் ஒழுங்கின்மை, நிலையற்ற தலைமை, ஆட்சி கவிழ்ப்புகள், வஞ்சக கொலைகள் என அரசாங்கம் ஒருபக்கம் தடுமாறியது. மறுபக்கம் புரட்சிக்குழுவைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்களான முஜாஹிதின்களும் அவர்களுக்கு பின்வந்த தாலிபான்களும் மதத்தின் பெயரால் தன் சொந்தக் குடிகளின் மீது பல வன்முறைகளை நிகழ்த்தத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மக்கள் வாழவே தகுதியில்லாத இடமாக ஆப்கானிஸ்தான் மாறிப்போனது. அந்த கதை அப்பட்டமாக கடவுளுக்கும் தெரிந்திருந்தது. அதைவிட அங்கு பல வருடங்களாக பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்தனர். அவர்களின் சுதந்திரம் என்பது மூடப்பட்ட துணிக்குள் முடிந்ததாக இருந்தது. இத்தனைக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் சரிபங்கு பெண்களாக இருந்தனர். அத்தகைய ஒடுக்கப்பட்ட பெண்களின் ஒருமித்த குரலாகவே இந்த நாவலை ஹூசைனி கட்டமைத்திருக்கிறார்.
தன் வாழ்நாள் முழுவதும் ஹராமி (முறைகேடாக பிறந்தவள்) என பிறரால் அழைக்கப்பட்ட மரியம் அறியாத ஆசையால் தனது தாயை இழக்கிறாள். அவளுக்கு பதினைந்து வயது தொடங்கும்போது தன்னைவிட அதிக வயதான ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு காபுல் நகரத்திற்கு அனுப்பப்படுகிறாள். தன்னால் ஒரு குழந்தையை பெற இயலாது என்ற நிலையில் தனது கணவனின் அடி உதை பேச்சுக்களுக்கு பழகி வாழ்ந்துவரும் அவளுக்கு இருபது ஆண்டுகளுக்கு பிறகு லைலா என்பவளின் நட்பு கிடைக்கிறது. லைலா ஒரு ஆசிரியருக்கு பிறந்த தேவதைதான் என்ற போதிலும் உள்நாட்டு கலவரங்கள் அவளது சிறகுகளை சிதைக்கிறது. புயலில் சிக்கிய சருகைப்போல அவள் காதலித்தவனை எங்கோ கொண்டு சேற்கிறது. இதற்கிடையில் நாட்டின் ஆட்சியை தாலிபன்கள் பிடிக்க முன்பு இல்லாத அளவிற்கு கொலையும் கொள்ளையும் பட்டினியும் பஞ்சமும் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தாடியைத் தடவியபடி கூத்தாடத் தொடங்குகிறது. அந்த சூழ்நிலையில் மரியம் லைலா இவர்களின் அன்பு செயற்கரிய சில காரியங்களை செய்ய வைக்கிறது. இறுதியில் திசைகாட்டியின் முள் வடக்குநோக்கியே நீள்வதுபோல ஆணின் குற்றஞ்சாட்டும் விரல் எப்போதும் பெண்ணை நோக்கியே நீளும்... எப்போதும் இதை நீ நினைவில் வைத்திரு மரியம்... என அவளது அம்மா நாணா சொன்னதைப்போலவே மரியத்தின் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தேறுகிறது. உன்னுடைய லட்சியம் என்னவாக இருந்தாலும் அதை நீ அடையலாம் லைலா. உன்னால் முடியும். மேலும் போர் முடிந்ததும் ஆப்கானிஸ்தானுக்கு நீ தேவைப்படுவாய்... என அவளது தந்தை பாபி சொன்னதுபோலவே லைலாவின் வாழ்க்கை அமைகிறது.
இன்று ஆப்கானிஸ்தான் நாடு சுதந்திர தேசமாக பரிணாமித்துள்ளது. அங்கு பெண்களுக்கான உரிமைகளும் ஒரளவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒவ்வொரு ஆஃப்கன் பெண்களின் வாழ்க்கை (இதில் ஆணும் உண்டு) மரணத்தாலும், இழப்புகளாலும் கற்பனை செய்ய முடியாத துயரங்களாலும் நிரம்பியிருக்கிறது. இந்த நாவல் அத்தகையானவர்களின் கதையையே தாங்கியிருக்கிறது. ஆத்மா என்ற ஒன்று இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை மனதை ஆத்மா என கருதினால் இரண்டு ஆப்கன் பெண்களின் ஆத்மா இந்த நாவல். படிக்கும் நமது ஆத்மாவையும் துளைக்கக்கூடியது. பெண்கள்தான் இதில் முதன்மை என்றாலும் மரியத்தின் தந்தையாக கருதப்படும் ஜலீல், அவளது ஆசிரியர் முல்லா ஃபைசுல்லா, மரியத்தின் கணவன் ரஷீத், லைலாவின் தந்தை பாபி, அவளது நட்பும் காதலுமான தாரிக் என சில ஆண்களும் இந்நாவலில் வலம்வருகிறார்கள் அவர்களில் சிலர் போற்றத்தக்கவராகவும் இருக்கிறார்கள். இந்த நாவல் மிக நுணுக்கமாக நேர்த்தியாக பின்னப்பட்ட வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய ஆடையைப் போன்றது. அன்பிற்கு அடித்தளம் பொறுமை அதை அழகாக உயர்த்திக்காட்டுகிறது. ஒருவகையில் பார்த்தால் வரலாற்று பின்னணியில் அமைந்த அற்புதமான காதல் கதையும் கூட.
பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சய்ஃப் ஏ தப்ரிஸியின் காபுல் என்ற கவிதையின் ஆங்கில வரிகளின் வார்த்தைகளை
Every street of Kabul is enthralling to the eye
Through the bazaars, caravans of Egypt pass
One could not count the moons that shimmer on her roofs
And the thousand splendid suns that hide behind her walls
Through the bazaars, caravans of Egypt pass
One could not count the moons that shimmer on her roofs
And the thousand splendid suns that hide behind her walls
ஹூசைனி இந்த நாவலுக்கு தலைப்பாக வைத்திருக்கிறார். அவர் தனது நாட்டின் பெண்களை சூரியன்களாகவும் ஆண்கள் சூரியனிடமிருந்து ஒளியை கடன் வாங்கிக்கொள்ளும் சந்திரன்களாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார். பட்ட விரட்டி நாவலில் எழுத்தாளராக அறிமுகப்படியிலிருந்து முன்னேறிய காலித் ஹூசைனி இதில் உச்சம் தொட்டிருக்கிறார். தன்னை ஒரு ஆகச் சிறந்த கதைசொல்லியாக மீண்டும் நிறுபித்திருக்கிறார்.
மொழிபெயர்ப்பு கலையில் தற்போது பெண்கள் அதிகம் செயலாற்றுவது பாராட்டக்கூடியது. உள்ளுணர்வு என்பது ஆண்களைவிட பெண்களுக்கு இன்னமும் அதிகமாக செயல்படும். அதிலும் பெண்களை மையமாகக் கொண்டு வெளிவந்த படைப்புகளை பெண்களே மொழிபெயர்பு செய்வது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நாவல் அதைத் தருகிறது. அதனை ஏற்படுத்திய ஷஹிதாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த அற்புதமான இந்த ஆயிரம் சூரியப் பேரொளியை நீங்களும் உள்வாங்கிக்கொள்ளுங்களேன்.
A Thousand Splendid Sun
ஆயிரம் சூரியப் பேரொளி
காலித் ஹூசைனி
தமிழில் - ஷஹிதா
எதிர் வெளியீடு
ஆயிரம் சூரியப் பேரொளி
காலித் ஹூசைனி
தமிழில் - ஷஹிதா
எதிர் வெளியீடு