ஒரு நம்பிக்கை உறவு.
மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலை குலைந்து போகச் செய்யும் கால சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நட்டம், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள், இவை அனைத்தும் மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள். இது போன்ற போராட்டங்களை மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிர் கொள்கின்ற மனிதன் எவனோ அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக திகழ்கிறான்.... பகவத் கீதை. இது ஒருபுறமிருக்க அத்தகைய சூழ்நிலையில் தலை சாய ஒரு தோள் கிடைத்தால் அந்த உறவே வாழ்வின் உன்னதமான உறவாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு உறவைப் பற்றி கீதையின் பொன்மொழியுடன் இந்த பெல்ஜியம் நாட்டு திரைப்படம் பேசுகிறது.
அலி என செல்லமாக அழைக்கப்படும் முன்னால் குத்துச்சண்டை வீரரான ஆலைன் வான் வெர்ச் பெல்ஜியத்திலிருந்து பிரான்ஸின் தெற்குபகுதியான ஆன்டிபெஸிற்கு செல்கிறார். அங்கு அவரது சகோதரி மற்றும் தனது மகன் சாம் உடன் வசிக்கத் தொடங்குகிறார். நிரந்தர வேலை எதுவும் இல்லாத அலி அங்கிருக்கும் மதுபான விடுதி ஒன்றில் தற்காலிகமாக சேர்கிறார். ஒருநாள் அங்கு வரும் திமிங்கில பயிற்சியாளரான ஸ்டிபனியை சிறு சச்சரவுக்கிடையே சந்திக்கிறார். ஸ்டிபனியை பாதுகாப்பாக அவளது வீடு வரை அலி அழைத்துச் செல்ல, அவர்கள் இருவரும் தங்களது தொலைபேசி எண்களை பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் ஒருவருக்கொருவர் இனிமேல் பார்த்துக்கொள்ள வேண்டாம் என முடிவு செய்கின்றனர். அலி இந்தமுறை உள்ளூர் கடை ஒன்றில் பாதுகாப்பு காவலராக பணிபுரிகிறார். அங்கு ஏற்படும் ஒருவனது நட்பில் நகரத்தில் கிக் பாக்ஸிங் என சொல்லக்கூடிய குத்துச்சண்டை போட்டியைப் பற்றி தெரிந்துகொள்கிறார். அதில் பங்கெடுத்துக்கொண்டு பணம் சம்பாதிக்கும் ஆவல் அவருக்கு ஏற்படுகிறது. மேலும் தனது மகனுக்கும் தற்காப்புக்கலையை கற்றுத்தரும் முயற்சியிலும் அவர் ஈடுபடுகிறார்.
இதற்கிடையில் உள்ளூர் தீம் பார்க்கில் வேலை செய்யும் ஸ்டிபனி திமிங்கிலங்களை பயிற்சி செய்யும்போது விபத்தில் சிக்கி தனது இரண்டு கால்களையும் இழக்கிறாள். அதனால் கடும் மன உளச்சலுக்கு ஆளாகும் அவள் அலியை தொடர்புகொள்கிறாள். ஸ்டிபனியின் நிலையறிந்து அலி அவளுடன் நட்பாகிறார். அடிக்கடி அவளை சந்திப்பதுடன், அவளை அழைத்துக்கொண்டு வெளியிடங்களுக்குச் செல்கிறார். தான் சண்டையிடும் இடத்திற்கும் கூட்டிச் செல்கிறார். இருவருக்குள்ளும் அழகான ஒரு உறவு வளர்கிறது. இருவரும் தங்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்துகின்றனர். அது படுக்கறை வரையிலும் செல்கிறது.
நாட்கள் நகருகிறது. ஸ்டிபனி நடப்பதற்கு செயற்கை கால்களை பெறுகிறாள். அலிக்கு பத்து வயதில் ஒரு மகன் இருப்பதை தெரிந்துகொள்ளும் அவள் அவரை பிரிந்து செல்கிறாள். ஆனாலும் அந்த பிரிவு அவளை வாட்டுகிறது. இருவரின் உறவில் சிறிய விரிசல் விழுகிறது. அது இருவரையும் பழைய கசப்பான வாழ்க்கைக்கு திரும்பவும் கூட்டிச் செல்கிறது. அலி தனது குத்துச்சண்டையில் மும்மரமாக செயல்படுகிறார். ஒருநாள் அவரது மகன் சாம் பனிப்பகுதி ஒன்றில் விளையாடும் போது விபத்தில் சிக்குகிறான். அவனுக்கு நினைவு பறிபோகிறது. இதனை ஸ்டிபனி தெரிந்துகொள்கிறாள். மருத்துவமனையில் இருக்கும் அலிக்கும் அவரது மகனுக்கும் அவள் ஆறுதலாக இருக்கிறாள். சாம் குணமடைந்தானா? அலி மற்றும் ஸ்டிபனியின் உறவு இதனால் தொடர்ந்ததா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.
உணர்ச்சி ரீதியாக உணமுற்ற ஒரு ஆண், உடல் ரீதியாக உணமுற்ற ஒரு பெண் இருவருக்கும் இடையேயான உறவே இந்த திரைப்படத்தின் எளிமையான கதை. அவர்களின் மன ஓட்டமே கதையோட்டம். அதை தொய்வில்லாமல் சொன்ன விதம்தான் சிறப்பு அந்தஸ்தை பெறுகிறது. இது ஒளி எளிமையான ஆழமான காதல் கதை. வருடம் தோறும் ஆஸ்கார் தேர்வில் இடம்பெரும் நடிகர் மத்தியாஸ் ஹோரனர்ட்ஸ் இந்த திரைப்படத்தின் நாயகன், அதுபோல இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கார் கொடுக்கவில்லை என விமர்சனத்திற்கு உட்படும் மரியன் கோட்டிலார்ட் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் தேர்வு திரைப்படத்திற்கு மிகப் பெரிய பலம் எனலாம். மேலும் நிஜமாகவே மரியன் கோட்டிலார்ட் கால்களை இழந்திருக்கிறாரா என்பதைபோல தோன்றும் பிற்பகுதி காட்சிகளிலும், ராட்சத திமிங்கிலம் மற்றும் விபத்து காட்சிகளிலும் வியக்க வைத்திருக்கும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பக்கபலமாக இருக்கிறது. சிரெய்க் டேவிட்சனின் ரஸ்ட் அண்ட் போன் என்ற சிறுகதையைத் தழுவி ஜாக் ஆடியார்ட் இயக்க 2012 ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வாழ்க்கை வீணாகிப்போன குப்பை என நினைக்கும்போது புதிதான ஒரு நோக்கம் எங்காவது ஒளிந்திருக்கும். அதை எவ்வாறு கண்டுகொள்வது என்பதையும் இந்த திரைப்படம் அழகாக காட்டுகிறது. தவறாமல் பாருங்கள்.
De Rouille et d'os
(Rust and Bone)
Directed by - Jacques Audiard
Music - Alexandre Desplat
Cinematography - Stephane Fontaine
Year - 2012
Country - Belgium
Language - French
(Rust and Bone)
Directed by - Jacques Audiard
Music - Alexandre Desplat
Cinematography - Stephane Fontaine
Year - 2012
Country - Belgium
Language - French