அனிமேஷன் குறும்படங்கள்.
குறும்படங்களின் வகைகளில் அனிமேஷன் என சொல்லக்கூடிய வரைகலை படைப்புகளுக்கென்று தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கார் திருவிழாவில் கூட அவ்வாறு அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட குறும்படத்திற்கு விருது வழங்கி கௌரவித்தனர். இந்த வருட ஆஸ்கர் பரிந்துரைக்கு Dcera, Hair Love, Kitbull, Memorable, Sister போன்ற குறும்படங்கள் போட்டிபோட Hair Love விருதை தட்டிச் சென்றது. அத்தகைய அனிமேஷன் சார்ந்த குறும்படங்களின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
1892 ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த சார்லஸ் எமிலி ரெய்னாட் (Charles - Emile Reynaud) என்பவரது Le Clown et ses chiens என்ற பத்து நிமிடம் ஓடக்கூடிய குறும்படமே முதன்முதலாக தயாரிக்கப்பட்ட அனிமேஷன் குறும்படமாக கருதப்படுகிறது. கண்டுபிடிப்பாளரான இவர் பிராக்சினோஸ்கோப் (Praxinoscope) என சொல்லக்கூடிய புதிய அனிமேஷன் சாதனைத்தை உருவாக்கினார். இது திரைப்பட சாதனங்களுக்கு முன்னோடியாக கருதப்படும் ஜியோட்ரோப் (Zoetrope) என்ற சாதனத்தைவிட மேம்பட்டதாக இருந்தது. கையினால் வரையப்பட்ட நகரும் பட அமைப்பைக் கொண்ட இந்த கண்டுபிடிப்பிற்கு ரெய்னாட் 1888 ஆம் ஆண்டு காப்புரிமையை பெற்றார். மேலும் தியோட்டர் ஆப்டிக் என்ற ஒருங்கிணைந்த அமைப்பின் மூலம் தான் கண்டுபிடித்த சாதனத்தைக் கொண்டு 1892 முதல் 1900 வரை பாரிஸில் உள்ள மியூசி க்ரூவின் என்ற அரங்கில் சுமார் 500000 பார்வையாளர்களுக்கு 12800 நிகழ்ச்சிகளை காண்பித்தார். இதில் இவரது கைவண்ணத்தில் உருவான Pantomimes serious, Pauvre Pierrot, Autour d'une போன்ற அனிமேஷன் குறும்படங்களும் அடங்கும். சினிமா என்ற தொழில்நுட்பத்திற்கும் அதனைக் காண செல்ல வேண்டிய இடமான தியோட்டர் என்ற பொழுதுபோக்கு அரங்கத்திற்குள் நம்மை அழைத்துச் செல்ல வித்திட்டவர்களில் இவரும் ஒருவர்.
இனி விஷயத்திற்கு வருவோம். குறும்படங்களின் வகைகளில் அனிமேஷன் என சொல்லக்கூடிய வரைகலை படைப்புகளுக்கென்றே தனியே இருக்கும் ரசிகர் பட்டாளத்தில் அடியேனும் உண்டு. அவ்வாறு அடியேன் ரசித்த அனிமேஷன் குறும்படங்கள் சில குட்டி தகவலோடு தங்களின் பார்வைக்கும்.