பெப் லி பியூ.

ரம்பத்தில் அழகாக தமிழ் பேசிய கார்டூன் சேனல்கள் பெருகி சதா கத்திக்கொண்டே இருப்பதால் தற்போது சலிப்புத்தட்டிவிட்டது. அதற்கு ஜினல் ஜினல் ஒரிஜினலே தேவலாம் என சமீபத்தில் கார்டூன் நெட்வொர்க் சேனலுக்கு தாவுகையில் கிளாசிக் கார்டூன் நிகழ்ச்சியில் தற்செயலாக பெப் லி பியூவை பார்க்க நேர்ந்தது. பக்ஸ் பன்னி, டாஃபி டக், ட்வீட்டி, சில்வெஸ்டர், மார்வின், எல்மர் ஃபட், யோசெமிட் சாம், ஸ்பீடி, ரேடு ரன்னர், வைல் ஈ வரிசையில் வார்னர் பிரதர்ஸ் உருவாக்கிய கார்டூன் கதாபாத்திரம்தான் இந்த பெப் லி பியூ. வட அமெரிக்கா மற்றும் வடக்கு மெக்சிகோவில் வசிக்கும் ஸ்கங்க் என சொல்லக்கூடிய ஒருவகை புனுகுப்பூனைக்கு வார்னர் பிரதர்ஸை சேர்ந்த சக் ஜோன்ஸ் மற்றும் மைக்கேல் மால்டிஸ் இருவர் இணைந்து கார்டூன் உருவம் கொடுத்திருந்தனர். 1945 ஆம் ஆண்டு லூனி டூன்ஸ் தொடரில் Odor able Kitty என்ற பகுதியில் பெப் லி பியூ முதன்முதலாக தலைகாட்டியது.


வெளியில் காணப்படும் தோற்றம் எப்படியிருந்தாலும் உள்ளுக்குள் ஏற்படும் நாற்றமே சுற்றியிருக்கும் சூழலை அழகாக நிர்மாணிக்கும். இது ஸ்கங்க் என்ற இந்தவகை புனுகுப்பூனைகளுக்கு ஏகப் பெருந்தும். கருப்பும் வெள்ளையும் கலந்து பார்பதற்கு அழகாக பெரிய அணிலைப் போன்று தோன்றினாலும் இந்தவகை பூனைகளிடமிருந்து வெளிப்படும் ஒருவகை துற்நாற்றம் மற்ற விலங்குகளை நெருங்க விடாமல் செய்யும். எதிரிகளிடமிருந்து தப்பிக்க இவைகள் தங்களது ஆசனவாயிலிருந்து கந்தகத்தை கொண்ட 2-butene-1-thiol, 3 methyl-1butanethiol மற்றும் 2- quinolinemethan என்ற ரசாயன கலவையை பீச்சியடிக்கின்றன. அது துற்நாற்றத்தை கொண்டதாகவும் குருட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். நகரமாக்குதலால் தற்போது அழிந்துவரும் நிலையிலிருக்கும் இவைகளுக்கு இயற்கை இப்படியொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அதனை வைத்தே பெப் லி பியூ என்ற கதாபாத்திரத்திற்கு அடிப்படையான கதையை அமைத்திருந்தினர். பெப் லி பியூ தன்னிடமிருந்து வெளிப்படும் அத்தகைய துற்நாற்றத்தினாலும் அதைவிட தனக்கிருக்கும் ஆதித காதல் எண்ணத்தாலும் (பெப்லீ பியூவிற்கு பெனிலோப் புஸிகேட் என்ற துணையும் உண்டு) தன்னை நெருங்கி வந்தவைகளையும் வருபவைகளையும் அலறச் செய்து மொத்தம் 18 பகுதிகள் கொண்ட கார்டூன் தொடர் முழுவதும் மகிழ்வித்தது. 1949 ஆம் ஆண்டு வெளிவந்த For Scent imental Reason என்ற பகுதிக்கு உச்சகட்டமாக ஆஸ்கார் விருதையும் பெற்றுத் தந்தது. பைரேட் ஆஃப் கரீபியன் ஹாலிவுட் திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் ஓரளவிற்கு தெரிந்திருக்கும். அதில் நடித்த ஜானி டெப்பின் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் இந்த பெப் லி பியூவை அடிப்படையாகக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பெப் லி பியூவின் கார்டூன்கள் அனைத்தையும் தேடிப்பிடித்து சேமிப்பில் இணைத்திருக்க, அவற்றில் சிலவற்றை மட்டும் தங்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்துகிறேன்.